பக்கம் எண் :

4111.

     எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
          எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
     சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
          சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
     மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
          மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
     தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
          தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.

உரை:

    எட்டும் இரண்டும் என்னவென்று வினவினால் தெரியாது மயங்கிய எனக்கு அறியாத நிலைகள் எல்லாவற்றையும் அறியச் செய்த ஞான குருவே! அண்மையிலும் சேய்மையிலும் வைத்துரைக்கும் சுட்டுப் பொருளிரண்டையும் காட்டாமல் துரியத்தானத்தின் நடுவே இன்ப மயமாய் விளங்குகின்ற தூய பரம்பொருளே! இதன் அளவு இஃதென்று அறிய மாட்டாமல் மறைகள் மௌனமுறும் பரம்பர நிலையில் விளங்குகின்ற ஞான ஒளிப் பொருளே! தடை யில்லாத திருச்சபையின்கண் ஒப்பற்ற நடனத்தைச் செய்கின்ற அருளரசே! குற்றத்தால் தாழ்வுடையது என்று என் சொல் மாலையை இகழாமல் ஏற்று அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     “எட்டிரண்டும் அறியேன்” (சதகம்) என்ற செம்மொழியின் பொருள் யாதென வினவினாற்கு அகர உகரங்கள் என உரைக்க முடியாமல் மயங்கிய நிலையைக் குறிப்பதற்கு வடலூர் வள்ளல், “எட்டிரண்டும் என்னென்றால் மயங்கிய என்றனக்கே” எனவும், அவை யிரண்டையும் விளக்கி அவற்றின் மேலும் அறிய மாட்டாத ஞான நிலைகள் பலவற்றையும் ஆசிரியனாய்ப் போந்து இறைவன் தமக்கு அறிவித்த செய்தியைப் புலப்படுத்த, “எட்டாத நிலைகள் எல்லாம் எட்டுவித்த குருவே” எனவும் இயம்புகின்றார். அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு எனச் சுட்டு இரண்டாதலின் அவற்றை, “சுட்டிரண்டும் காட்டாதே” எனச் சொல்லுகின்றார். ஐவகை அவத்தைகளுள் சுற்றி அறியப்படும் கனவு நனவு நிலைகளைக் காட்டாமல் சுழுத்தியின் கீழதாகிய துரிய நிலையை ஆசிரியர் காட்டிய திறம் விளங்க, “சுட்டிரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே” என்றும், துரியமும் அதீதமும் ஆகிய நிலைகள் சுட்டிறந்தனவாதலின் அங்கிங்கெனச் சுட்டி அறியப்படும் நனவு கனவாகிய அவத்தை நிலைகளை, “சுட்டிரண்டு” என்றும் வரைந்தோதுகின்றார். துரியத்தானத்தில் ஒளி யுருவிற் காணப்படும் பரம்பொருள் காட்சிக்கு இன்ப மயமாய் இலங்குவது விளங்க, “சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே” என மொழிகின்றார். பரம்பொருளை ஓதிப் புகழும் ஒட்பமுடையவாயினும் வேதங்களால் இவ்வளவிற்று என உரைக்க மாட்டாமையால் வேதங்கள் ஓய்ந்து விடுதலின், “மட்டு இதுவென்று அறிவதற்கு மாட்டாது மறைகள் மௌனமுற” என்று இயம்புகின்றார். “வேதம் கிடந்து தடுமாறுகின்ற வஞ்ச வெளி” (திருவிளை) என்று பெரியோர் பரசிவ நிலையை உரைப்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. மேலும் கீழுமாகிய எங்கும் எப்பொருளிலும் ஒளி மயமாய் ஓங்குவது பற்றிப் பரசிவ வொளியை, “பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே” என்று பரவுகின்றார். தடை சிறிதுமின்றி யாவரும் கண்டு களிக்குமாறு உயர்ந்து விளங்குதலின் அம்பலத்தை, “தட்டறியாத திருப்பொது” எனவும், அதன்கண் ஞானத் திருக்கூத்தாடுவது பற்றிச் சிவபெருமானை, “திருப் பொதுவில் தனி நடஞ்செய் அரசே” எனவும் போற்றுகின்றார். தட்டு - தடை. குற்றம் நிறைந்த மொழி என்றற்கு, “தாழ்மொழி” எனக் கூறுகின்றார்.

     (22)