பக்கம் எண் :

25. புண்ணிய விளக்கம்

    (திருவருட்பா இரண்டாம் திருமுறை எனக் காணப்படும் பகுதியில் முதலாவதாக வுள்ளது புண்ணிய விளக்கம் என்ற தலைப்பில் காணப்படும் பத்துப் பாட்டுக்கள் கொண்ட பதிகம் ஆகும்) புண்ணிய விளக்கம் என்பது சிவனை நோக்கிச் செய்யும் நல்வினையின் பயனை விளங்கத் தெரிவிப்பது எனப் பொருள்படும். நல்வினையைப் புண்ணிய மென்றும் தீவினையைப் பாவம் என்றும் வழங்கும் வழக்காறு, வடமொழியின் செல்வாக்கு மிக்குற்ற பிற்காலத்தே நாட்டில் பயில நிலவுவதாகும். நல்வினைகள் இம்மை வாழ்வு நோக்கியும், மறுமை வாழ்வு நோக்கியும், வீடு பேறு நோக்கியும் செய்வன. அவற்றுள் மறுமையும் வீடு பேறு நோக்கினவற்றைப் புண்ணியம் என்ற சொல்லால் சமய ஒழுக்கினர் உரைப்பர். புண்ணியச் செயல்களில் வீடு பேறு நோக்கிய செயல்கள் மேலானவை என்று கருதப்படும். மேலாய புண்ணியங்களில் சிவனை நோக்கிச் செய்வன தலையாயவை என்பது புலப்படப் புண்ணியமெனப் பொதுப்பட மொழிகின்றார்கள். சிவனை நோக்கிச் செய்வது சிவ புண்ணியம் எனப்படுமாயினும் புண்ணியம் எனப் பொதுப்படக் குறிப்பது பூக்களில் உயர்ந்த தாமரையை மலர் எனப் பொதுப்பட உரைப்பது போன்ற வழக்காகும். ஆகவே புண்ணிய விளக்கம் என்ற தொடரில் புண்ணியம் என்பது சிவனை நினைந்து செய்யும் நற் செய்கைக்கு ஆயிற்று. அது சிவனை நினைந்து திருநீறு இடுதல் முதலாக மிகப் பலவாய் விரிகிறது. சிவ புண்ணியமாகிய திருநீறு இடுதலால் உண்டாகும் பயன்களை எடுத்துரைப்பது அதற்கு விளக்கம் தருதலால் இப் பதிகத்துக்குப் புண்ணிய விளக்கம் என்பது பெயராயிற்று. முன்னுரை : (புண்ணியம் என்னும் வடசொல் தமிழில் வழங்கும் நல்வினையைக் குறிக்கும், நல்வினை இன்பம் பயக்கும், தீவினை துன்பம் பயக்கும் என்பர் தமிழர். நல்வினையைப் புண்ணிய கர்மம் எனவும், தீவினையைப் பாப கர்மம் எனவும் வடநூல்கள் உரைக்கும்.) இப்புண்ணிய கன்மம் உலகியல் வாழ்வு கருதிச் செய்வனவும், வாழும் உயிர்கட்கு நலம் நினைந்து செய்வனவும், சிவத்தை நோக்கிச் செய்வனவும் என மூவகையாகி முறையே பாச புண்ணியம, பசு புண்ணியம், பதியாகிய சிவபுண்ணியம் என்று வழங்கும். (இம்மூன்றனுள் தலையாயது சிவபுண்ணியம்; பூக்களில் தலையாய தாமரையைப் பொதுவாகப் பூ என்பதுபோல தலையாய சிவபுண்ணியத்தைப் புண்ணியம் என்று புகன்றுரைப்பர்.) @@@@@ சிவனை நோக்கிச் செய்யும் புண்ணியங்கள் மிகப் பல உண்டு; அவற்றுள் திருநீறணிதல் மிகச் சிறந்த புண்ணியம். அதன் இயல்பைப் பதினொரு பாட்டுக்களைக் கொண்டு நிற்கும் இப்பகுதிக்கண் எடுத்துரைக்கின்றாராகலின், இது “புண்ணிய விளக்கம்” என்ற பெயர் கொண்டுளது. பதிகம் என்னும் சொல் பாட்டுக்கள் பத்துக் கொண்ட தொகுதியைக் குறிப்பதாயினும், பத்துக்குக் குறைந்தும், ஒன்றிரண்டு மிக்கும் இருப்பதுண்டு. இப் பதிகம் பதினொரு பாட்டுக்களைக் கொண்டு, பாட்டின் இறுதியடிதோறும் சிவாய நம என்று இடும் நீறு என்று முடிகிறது. அது திருநீற்றை அணியும் முறையை விளக்கி, அதனால் விளையும் பயனைப் பாட்டுத்தோறும் அறிவுறுத்துகிறது. அதனால், இத் திருப்பதிகம் புண்ணிய விளக்கம் என்று பெயர் தாங்கி ஏற்றம் பெறுகிறது. முதல் ஐந்து திருப்பாட்டுக்களில் அடியார் கூட்டமும், அல்லாதாரை விலக்கலும், ஞானப் பேறும், ஞேயமாகிய சிவத்தின் பெருநிலையறிவும் திருநீறணிவதால் விளைவன என்கின்றார். எஞ்சிய திருப்பாட்டுக்கள் அனைத்தும் சிவபெருமான் திருவடிக் காட்சிப் பேறும், அவர் விடைமேல் தோன்றி நல்கும் அருட் காட்சிப் பேறும் அறிவிக்கின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

834.

     பாடற் கினிய வாக்களிக்கும்
          பாலும் சோறும் பரிந்தளிக்கும்
     கூடற் கினிய அடியவர்தம்
          கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
     ஆடற் கினிய நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     தேடற் கினிய சீர்அளிக்கும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     நெஞ்சமே இனி நீ அஞ்ச வேண்டுவதில்லை. என்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன். சிவாய நம என்று அணியப்படும் திருநீறு பாட்டுப் பாட விரும்பும் கவிஞர்களுக்குப் பாட்டுக்கு ஏற்ப நல்ல இனிய கருத்தமைந்த சொற்களை உதவும். உண்பதற்கு இனிய பாலும் சோறும் அளிக்கும்; கூடுதற்கு இனிய பண்பு உடைய சிவனடியார்களுடைய நட்பை உண்டு பண்ணும்; நல்ல குணங்களையே எப்போதும் அமையப் பண்ணும். நல்வழியில் தேடிப் பெற்றவிடத்து இனிமை தரும் புகழை நல்கும். எ.று.

     திருநீற்றை அணிபவன் அதனைக் கையில் எடுக்கும் போதே சிவனை நினைந்து நெற்றி, தோள், மார்பு முதலிய இடங்களில் இடும்போது வாயில் சிவாய நம என்று சொல்லிக் கொண்டே இடுவது முறையாதலால் சிவாய நம என்று இடும் நீறு என்று வடலூர் அடிகள் உரைக்கின்றார். திருநாவுக்கரசரும் “சிவாய நம என்று நீறு அணிந்தேன்” என்று சொல்லுகின்றார். சிவாயநம என்பதில் ஐந்து எழுத்துக்களிருப்பதால் இதைத் திருவைந்தெழுத்து என்று சொல்லுவர். சி - என்பது சிவனையும், வ - என்பது அருட்சக்தியையும், ய - என்பது உயிரையும், ந - என்பது மறைப்பு தெளிவாகிய இரு நிலைகளையும் உணர்த்தும் மறைப்புச் சக்தியையும், ம - என்பது உலகவாழ்க்கைக்கு மூல காரணமாகிய மாயையையும் குறிக்கின்றன. இந்த ஐந்தெழுத்தையும் கொண்டிருக்கும் நமசிவய என்பது சிவனுடைய திருப்பெயர்களில் ஒன்று. இதில் காணப்படும் ஐந்தெழுத்தும் புள்ளிபெற்ற மெய்யெழுத்துக்கள் கலவாமல் மொழிக்கு முதலாகும் எழுத்துக்களே சேர்ந்திருக்கும் முதன்மை வாய்ந்தவை. இவற்றால் குறிக்கப்படும் பொருளில் திரட்சி சைவ சமயத்தின் சாரத்தைச் சுருங்கக் காட்டும் சிறப்பு உடையவை. மேலும் கடவுளாகிய சிவனுக்கும் உலகில் வாழும் உயிர்களின் வாழ்க்கைக்குமுள்ள நேரிய தொடர்பையும், சிவன் உயிர்கட்குச் செய்யும் அருட்செயல்களையும் தெளிய உணர்த்துவதால் இவற்றை ஓதுவது சிவனுடைய அருட்செயலை நினைந்து பரவுவதாக இருக்கிறது. அது பற்றியே, திருவைந்தெழுத்தை ஓதுவது தலையாய சிவ வழிபாடாக இருப்பதால் சிவனை நினைந்து திருநீறு இடுதல் முதலாகிய எல்லாச் செயல்களையும் தொடக்கத்தில் திருவைந்தெழுத்தை ஓதிச் செய்யப் படுவதுபற்றிச் “சிவாய நம என்று இடும் நீறு” என்று சிறப்புற உரைக்கின்றார். திருவைந்தெழுத்தின் சிறப்பைச் சைவ நூல்களனைத்தும் ஆங்காங்கு எடுத்தோதியவண்ணம் இருக்கின்றன. சைவர் உண்ணும்போதும் உறங்கும்போதும் தொழில்களில் ஈடுபட்டு உழைக்கும் போதும் இவ்வைந்தெழுத்தையும் ஓதுவதை ஒழுக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வைந்தெழுத்தையும் ஓதுவதை ஒழுக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வைந்தெழுத்துச் சிந்தனையில் நினைக்கும்போது சிந்தித்துச் செய்வதாகிய கவி எழுதுதல் முதலிய செயல்கட்கு உரிய எழுத்துக்களையும் சொற்களையும் தந்துதவுமாறு தோன்றப், “பாடற்கினிய வாக்களிக்கும்” என்று இசைக்கின்றார். பாட்டும் பொருளும் செல்வ வாழ்வை நல்குவது பற்றி “எழுத்தைந்தும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்” என்று பகர்கின்றார். வாழ்க்கையில் யாவர்க்கும் நண்பர்களுண்டு. அவர்களில் நற்குண நற்செயல்களையுடையவர் நட்பு இன்பம் பயக்கும். அவருள்ளும் சிவபெருமான் திருவடியையே சிந்திக்கும் அடியவர்களின் நட்பு இனிமையும், ஞானமும், ஒழுக்கமும் தந்து இன்பம் பயப்பது தோன்ற, “கூடற்கினிய அடியவர்தம் கூட்டமளிக்கும்” என்று கூறுகின்றார். மக்களுக்கு அடிக்கடி மயக்கமும், கலக்கமும், தெளிவும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். அப்பொழுது செயல்கட்குரிய சத்துவம் முதலாகிய குணங்களும் மாறி நல்லதே அன்றிக் குற்றத்தையும் செய்விக்கும். குற்றத் துன்பம் உண்டாகும் திருவைந்தெழுத்தைச் சிந்தித்து ஓதுவோமாயின் கலக்கமடையாது நற்குணமே ஓங்கி நின்று செயலில் தெளிவு நிலவுவித்து இன்பமே விளையச்செய்தலின் “குணம் அளிக்கும்” என்று வடலூரடிகள் கூறுகின்றார். உலகில் நாம் பலவகையாலும் தேடிப் பெற நினைப்பதும் முயல்வதும் பொருளும் புகழுமேயாகும். பொருள்மேல் மக்களுக்கு எத்துணை ஆசையுண்டோ அதனினும் மிகுதியாகப் புகழ் மேல் ஆசை யுண்டாகும். உயிரையும் பொருளையும் கொடுத்துப் புகழ்பெறுபவர் பலராதலால் பொருளினும் புகழ் மேன்மையுடையது என்று அறிகின்றோம். அத்தகைய புகழும் தேடுவார்க்கு நிலைத்த இன்பம் தருவதால் “தேடற் கினிய சீரளிக்கும்” என்று தெரிவிக்கின்றார். மக்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உருவாவதற்கு உயிரிடத்துள்ள அறிவும் உடலிடத்துள்ள மனமும் ஒன்றுதல் வேண்டும். உயிர் அறிவு வடிவாக இருப்பது; அதற்கு ஏற்ற செயற்கருவியாவது மனம். அது எப்போதும் கண், காது, மூக்கு முதலிய பொறிகளோடும் கலந்து பார்த்தல், கேட்டல் முதலிய செயல்களைச் செய்வதும், ஒன்றையே நோக்குமாறு அடக்கினும் அடங்காமல் அசைந்துகொண்டேயிருப்பதும் இயல்பாதலைக் கண்டு, “ஆடற் கினிய நெஞ்சே” என் விளித்து ஆடி அசைவதே இன்பமாகக் கருதுவது கண்டு அசையாமல் நின்று திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு அணியுமாறு அறிவிக்கின்றார். அந்நிலையில் நெஞ்சம் ஐயுறாவாறு தெளியும் பொருட்டு “அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்” என்று அறுதி இடுகிறார்.

     இதனால், திருநீறணிவோர் அதனை யணியும்போதும் ‘சிவாய நம’ என்று ஓதவேண்டும் என்றும், இவ்வாறு ஓதி அணிபவர்க்கு நன்ஞானமும், நல்லொழுக்கமும் உடைய பெரியோர்களாகிய சிவத் தொண்டர் நட்புக் கிடைக்குமென்றும் அறிவுறுத்தவாறாம்.

     (1)