பக்கம் எண் :

83. இன்பப் புகழ்ச்சி

    அஃதாவது பெருந்திணைக்கண் சிவனைக் காதலித்து வேட்டொழுகிய மகளது நினைவு சொற்செயல்களைக் கண்டு விலக்கும் கருத்தினளாகிய நற்றாய், காதலிக்கப்பட்ட சிவன்பால் தான்கண்ட குணம் செயல்களைப் பழித்துரைக்கும் வஞ்சப் புகழ்ச்சியுரைப்பவரோ கேட்பவரோ இவ்வுரையாட்டால் வருத்தமுறாது இன்பமே பெரிதும் பெறுவதால், இப்பகுதி இன்பப் புகழ்ச்சி எனப்படுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1574.

     மாடொன் றுடையார் உணவின்றி
          மண்ணுண் டதுகாண் மலரோன்றன்
     ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார்
          ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
     காடொன் றுடையார் கண்டமட்டுங்
          கறுத்தார் பூத கணத்தோடும்
     ஈடொன் றுடையார் மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      உணவாத லில்லாத மண்ணுலகை உண்ட திருமாலாகிய எருதொன்றை ஊர்தியாக உடையவரும், தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனுடைய தலையோட்டைக் கையில் உடையவரும், திருவொற்றியூரைத் தமக்கு இடமாகக் கொண்டவரும், ஏனையூர்களோடு திருவாலங்காட்டை மகிழ்ச்சியுடன் விரும்பி உடையவரும், கழுத்து மாத்திரம் கறுத்து இருப்பவரும், பூத கணங்களோடு ஒப்பாக இருப்பவருமாதலால் என் மகளே, நீ எதற்காக அத் தியாகப் பெருமானைக் காதலிக்கின்றாய்? எ.று.

     திருமாலைப் பெரியோர் 'மூவுலகு உண்டுமிழ்ந்த முதல்வன்' என்று போற்றுவராதலின், அவர் எருதுருவில் சிவனுக்கு ஊர்தியாக விளங்குவது, பற்றி “மாடு ஒன்று உடையார் உணவின்றி மண்ணுண்டது” என்று இகழ்ந்துரைக்கின்றாள். மலரோன் - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன். சிவன் கையில் பலி ஏற்கும் ஓடு பிரமனது தலை ஒன்றின் மண்டையோடு என்பதுபற்றி “மலரோன்றன் ஓடொன் றுடையார்” என உரைக்கின்றாள் திருவொற்றியூரைத் தமக்கு எழுந்தருளும் இடமாகக் கொண்டமையின் “ஒற்றி வைத்தார்” என்று கூறுகின்றாள். அடகு வைத்தல் என்னும் பொருளில் ஒற்றி வைத்தல் என்பது வழக்காதலின் இகழ்வது கருதி “ஒற்றி வைத்தார் ஊரை” என்கின்றாள். ஊரை ஒற்றி வைத்து ஆரூரை விரும்புகின்றார் என்றும் இத் தொடர் பொருள்படுவது காண்க. ஊரை விரும்பிய பெருமான் ஆலங்காட்டை விரும்பி ஏற்கின்றார் என்ற கருத்துப் பட “உவந்த ஆலங்காடு ஒன்றுடையார்” என மொழிகின்றாள். திருவாலங்காடு என்பது தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள அம்பலத்தில் சிவன் ஊர்த்துவ தாண்டவமாடி 'அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்' என்று பெயர் பெற்றார். கண்டம் - கழுத்து. கண்ட மட்டும் கறுத்தார் என்பதற்கு, வேண்டுமளவு கறுத்தார் எனவும் பொருள் கூறுவர். எல்லார்க்கும் ஈசனாகிய பெருமான் பூத கணங்களோடு சமமாக இருந்தாடும் நிலையையும் பெற்றவர் என இகழும் குறிப்பால் “பூத கணத்தோடும் ஈடொன் றுடையார்” என ஏசுகின்றாள். இத்தகைய குறை சொல்லற்குரிய தியாகப் பெருமானை என்ன காரணம் பற்றிக் காதலிக்கின்றாய் என வினவுவாள் போல நற்றாய், “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனை” என்று கேட்கின்றாள்.

      இதுவும், இனி வருவனவும் வஞ்சப் புகழ்ச்சி என அறிக.

     (1)