பக்கம் எண் :

நூல

நூல்


அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம

2518.

     அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான் அருள்வான்
          அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
     வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ
          டஞ்சரையான் கண்கள் அவை.

உரை:

      ஈசானம் முதலிய ஐந்து முகங்களையுடைய சிவனுக்கு மகனும், திருமால் சக்கரப் படையை யிழந்து பெற மாட்டாது அஞ்சிய விடத்து அதனைப் பெறுவித்தருளியவனும், புலன் மேற் செல்லும் ஆசை யைந்தும் அன்பர்கள்பால் கெடுதற் கருளும் ஐந்தாகிய அழகிய கைகளையுடையவனும், கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான், அஞ்சத் தக்க இயல்பையுடைய வஞ்சகர்களை யான் கூடிக் கெடாதவாறு போக்கியருளுவான். எ.று.

     சிவனுக்கு முகம் ஐந்து என்றும், அவை ஈசானம், தற்புருடம், சத்தியோ சாதம், வாமம், அகோரம் என ஐந்தென்றும் கூறுவர். “திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்பது கந்தபுராணம். மால் அஞ்சு முகத்தான் அருள்வான் என்பது, திருமாலின் சக்கரப் படையை விநாயகரின் கணங்களில் ஒன்று வாயிற் கவ்விக் கொள்ள அதனைப் பெறுமாறறியாது அஞ்சியபோது செய்வகை தெரிவித்து அதனைப் பெறுவித்த காஞ்சிப் புராண விகடச் சக்கர விநாயகர் வரலாற்றை யுட் கொண்டுளது. கண்கள் அவை, “சாத்தனவன் வந்தான்” என்றாற் போல்வது. விநாயகற்கும் கண்கள் மூன்று என்பதை, “கண்கள் மூன்றுடைய செங்கரும்பே” (2530) எனப் பிறிதோரிடத்தும் கூறுவதால் அறிக. இது சொற் பின்வரு நிலை என்னும் அணிவகை. வதைத்தல்-போக்குதல். வதைத்துக் காப்பான் எனற் பாலது வன்புறை குறித்து வதைத்தான் என இறந்த காலத்தாற் கூறப்பட்டது. புலன்கள் ஐந்தாம் என அறிக. உகுதல் - ஒழிதல். விநாயகன் ஐந்து கரத்தனானது தன்பால் அன்பு செய்யும் ஆன்மாக்களின் ஆசைகளைக் கெடுத்தற் பொருட்டு என்க. தணிகைப் புராணமுடையார் இப் பொருண்மை விளங்கப் பாயிரத்துட் கூறுவது காண்க. அஞ்சு முக வஞ்சர், கண்டார் அஞ்சத்தக்க இயல்பு கொண்ட வஞ்சகர். “அகத் தின்னா வஞ்சரை யஞ்சப்படும்” (குறள்) எனச் சான்றோர் உரைப்பதறிக. ஓர் அரையோடு அஞ்சரை, ஆறரையாய் மூன்றாவது காண்க.

     இதனால், விநாயகப் பெருமான் வஞ்சரோடு கூடிக் கெடாதவாறு அருளியது வியந்து போற்றியவாறாம்.

     (1)