1. தெய்வமணி மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சென்னைக் கந்தகோட்டம்

1.

     திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
          திறலோங்கு செல்வ மோங்கச்
          செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
          திகழ்ந் தோங்க அருள் கொடுத்து
     மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
          வளர்கருணை மயமோங்கி யோர்
          வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
          வடிவாகி யோங்கி ஞான
     உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்
          ஊர்ந்தோங்கி யெவ்வுயிர்க்கும்
          உறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க
          உய்கின்ற நாளெந்த நாள்
     தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
          தலமோங்கு கந்த வேளே
          தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
          சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     மரங்கள் நிறைந்த சென்னையிலுள்ள கந்தகோட்டத்துள் கோயில் கொண்டுயர்கின்ற கந்த வேளே, குளிர்ந்த தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணிகளுள் அருள் நிறைந்த சைவ மணியாய்த் திகழும் ஆறு முகங்களையுடைய தெய்வமாகிய மணியே, யாவரும் விரும்புதலையுடைய நல்வினைகளைச் செய்தலையுடையராதலால் அன்பும் அருளும் திறலும் மிக்க செல்வம் சிறக்கவும் அடக்கம் அமையவும் அறிவு மேன்மையுற நிறைந்த இன்பம் மிக்கு விளங்கவும் திருவருளை வழங்கி, மணமுடைய செந்தாமரை மலரின் நிறமுற்று மிகுகின்ற கருணை யுருவாய் ஒப்பற வுயர்ந்த தெள்ளிய அமுதப் பெருக்காய் ஆனந்த வடிவுற்றுச் சிறந்து ஞானப் பொருள் கொண்ட உணர்வின்கண் நிறை ஒளி மிக்குத் திகழும் மயில் மேல் இவர்ந்துயர்ந்து எவ்வுயிர்க்கண்ணும் பொருந்தும் நின்னுடைய திருவடி என் உள்ளத்தில் தங்குதலால் பெறலாகும் அருட் செல்வம் பெற்று உய்தி பெறுங் காலம் எப்போது? தெரிவித்தருள்க. எ.று.

     வள்ளற் பெருமான் பாவல்ல புலமை கொண்டு அருட் பாட்டுக்கள் பாடத் தொடங்கிய நாளில் சென்னை நகர் குறுகிய பரப்புடையதாய்த் தெற்கு மேற்கு வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் உயரிய மரங்கள் தழைத்து நிற்கும் சோலைகளைக் கொண்டு இருந்தமை தோன்றத் “தருவோங்கு சென்னை” என்று குறிக்கின்றார். அந்நாளையோர் பழங்கால வழக்கத்தை முற்றவும் கைவிடாமல் கோயில்களில் சிலவற்றைக் கோட்டம் என்று வழங்கினர்; கச்சியிற் காமக் கோட்டமும் குமரக் கோட்டமும் இவ்வுண்மையை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தோன்றலுற்ற கல்வெட்டுக்கள் யாவும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் அம்பிகை கோயில்களைத் திருக்காமக் கோட்டம் என்று குறிப்பதைக் கல்வெட்டறிஞர் நன்கறிவர். அம்முறையில் சென்னையில் கந்தசாமி கோயில் என இப்போது வழங்குவது அடிகளார் காலத்தில் “கந்தகோட்டம்” என வழங்கினமையின், “சென்னையிற் கந்தகோட்டம்” என்று உரைக்கின்றார். கோட்டம் என்பது விரிந்த பரப்புடையது; பல நாடு ஊர்களைத் தன்னகத்தே கொண்ட நிலப்பரப்புக் கோட்டம் எனப்பட்டமையின் கோயில்களைக் குறிக்கும் கோட்டத்தை ஆலயம் என்னும் வழக்குத் தோன்றிற்று. ஆலயத்துக்குள்ளிருப்பன கோயில்கள்; அவற்றுள் தலைமையானது பெருங் கோயிலான திருமூலட்டானம். இதனை, “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்” எனத் திருமூலர் கூறுவதால், இனிது காணலாம். சென்னைக் கந்தவேள் கோயில் தனிக் கோட்டமாக அமைந்திருந்ததனால் “கந்த கோட்டம்” என்றும், கோயிலைத் “தலம்” என்றும், அதனுள் எழுந்தருளும் முருக வேளை, “கந்த வேளே” என்றும் இயம்புகின்றார். குளிர்ந்த ஒளி செய்யும் தூய மணிகளுட் செம்மணியாகிய மாணிக்க மணியைத் “தண்முகத் துய்யமணி” எனவும், அம்மணிகளுள் முகம் பொருந்திய செம்மணி சைவமணி எனவும், அதன் ஒளியும் நிறமும் கொண்டு ஆறுமுகத்தொடு கூடிய திருமேனியுடையனாதலால் “சண்முகத் தெய்வ மணியே” எனவும் கூறுகின்றார். செத்துப் பிறக்கின்ற ஏனைத் தெய்வங்கட்கெல்லாம் மேலானவன் என்றற்குத் “தெய்வமணி” என்று சிறப்பிக்கின்றார். குமர குருபரர் முருகனைச் “செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாளன்” என்று பாராட்டுவர். சிவனையே பாடிய திருஞான சம்பந்தர், “ஒன்றிமால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை” (தென்குடி) என்றும், திருநாவுக்கரசர், “மூவிலை வேல் மூர்த்தி காண் முருக வேட்குத் தந்தை காண்” (கச்சி) என்றும் பாடுமிடத்து முருகனை “வேள்” என்ற சிறப்புப் பெயர் தந்து இசைத்தலால், ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்பே முருகப் பெருமானுக்கு வேளென்ற சிறப்பு வழக்கிலிருந்தமை காணலாம். செம்மை யென்னும் சொல் சிவப்பாதல் போலச் செம்மணி சிவமணி யெனவும், சைவமணி யெனவும் வரும். செம்மேனி யுடைமை பற்றிச் சிவனைச் சைவன் என்று கூறுவதைத் தேவாரத் திருமுறை பயின்றோர் நன்கறிவர். செயலோங்கிச் செல்வமும் செறிவும் இன்பமும் திகழ்ந் தோங்கவும் அருள் கொடுத்து வளம் ஓங்கவும் உய்கின்ற நாள் எந்த நாள் என இயைத்து முடிக்க. புண்ணியச் செயலோங்கினாலன்றித் திருவருட் செல்வம் ஓங்காதாகலின், “திருவோங்கு புண்ணியச் செயலோங்கிச் செல்வம் ஓங்க” என வுரைக்கின்றார். திரு கண்டார் விரும்பப் பண்ணும் தன்மை. புண்ணியச் செயலைக் காண்பவரும் கேட்பவரும் விரும்புவரென அறிக. புண்ணியச் செயலால் விளைவது நற் செல்வம்; அதனை யுடையார்பால், தொடர்புடையார் பாற் செல்லும் அன்பும் எவ்வுயிர்பாலும் செல்லும் அருளும், இடையுறும் தடைகட்கு மடங்காத மனத்திண்மையும் இயல்பாக வந்தமைவதால், “அன்பருள் திறல் ஓங்கு செல்வம்” என்று சிறப்பிக்கின்றார். நன்றியில் செல்வமும் உண்மையால், நற்செல்வம் என வலியுறுத்தற்கு “அன்பருள் திறலோங்கு செல்வம்” எனல் வேண்டிற்று. செயல் அறிவையும் நற் செல்வம் அடக்கம் பணிதல் முதலிய நலங்களையும் நல்குவன வாதலால் நிறைந்த இன்பம் தோன்றி நாளும் மிக்கு விளங்குவது புலப்படச் “செறிவோங்கி அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க” எனக் கூறுகின்றார். அறிவோங்கிச் செறிவோங்கி என்பன எதுகை நயம் பற்றி மாறி நின்றன. இச்செல்வமும் இன்பமும் திருவருள் பெற்றார்க்கன்றி உண்டாவன வல்லவாதலால், “அருள் கொடுத்து” என்று மொழிகின்றார். முருகவேள் செந்நிறமுடையனாதலால், மேனி செங்கமல வண்ணம் உடைய தென்றற்கு “மருவோங்கு செங்கமல மலரோங்கு வணம் ஓங்க” என்றும், செம்மை நிறமுற்ற திருமேனி கருணை மயம் என்றற்கு, “வளர் கருணை மயம் ஓங்கி” என்றும், அக்கருணையும் உள்குவார் உள்ளத்தில் அமுதமாய்ப் பெருகி அதனைத் தன் வயப்படுத்தி உணர்வின்கண் இன்பமாய்த் தோன்றும் என்பாராய், “ஓர் வரமோங்கு தெள்ளமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி” என்றும், தோன்றுகிற இன்பம் தானும் தோன்றுமளவே நில்லாது மேலும் பெருகும் என்பார், “ஓங்கி” என்றும் இயம்புகின்றார். இவ்வாறு ஓங்குகின்ற இன்பத்தை உணர்வால் நுகர்கின்ற உள்ளமும் ஞான வடிவுற்று ஒளி செய்யும் என்பாராய், “ஞான வுரு வோங்கும் உணர்வின் நிறை ஒளி யோங்கி“ எனவும், அவ்வொளியால் எவ்வுயிரும் முருகவேளின் கோயிலாகக் கண்டு ஆன்மா உய்தி பெறுதல் உறுதியாதல் பற்றி, “எவ்வுயிர்க்கும் உற வோங்கும் நின்பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள்” எனவும் எடுத்தோதுகின்றார். முருகவேட்கு மயில் ஊர்தி என்பது பற்றி, “ஓங்கும் மயில் ஊர்ந்து” என்றும், எல்லா வுயிர்க்கண்ணும் செல்லுமாறு பற்றி “ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்” என்றும் கூறுகின்றார். உடலோடு கூடி நின்று உரைத்தலால் திருவடிப் பேறு எய்தும் நாள் எப்போது என்பார், “உய்கின்ற நாள் எந்த நாள்” என வுரைக்கின்றார்.

     இதனால் சென்னைக் கந்தகோட்டத்து முருகப் பெருமான் திருவடி நல்கும் வளங்களைத் தெரிவித்து அத்திருவடி தன் உளத்தில் எய்திய வழிப் பிறக்கும் உய்தி பெறும் நாள் எந்நாள் என விழைவுறும் திறம் கூறியவாறாம்.

     (1)