100. வாழ்வே நற்பொருளே நன்மருந்தே ஞான
வாரிதியே தணிகைமலை வள்ளலே யான்
பாழ்வேலை யெனும் கொடிய துயருள் மாழ்கிப்
தைத்தையா முறையோ நின் பதத்துக்கென்றே
தாழ்வேனீ தறிந்திலையே நாயேன் மட்டும்
தயவிலையோ நான் பாவிதானோ பார்க்குள்
ஆழ்வேனென் றயல்விட்டால் நீதியேயோ
அச்சோவிங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
உரை: உலகியல் வாழ்வுக்கு முதலும் பொருளும் மருந்து மானவனே, ஞானக்கடலே, தணிகை மலையில் எழுந்தருளும் வள்ளலே, பாழ்த்த பிறவியாகிய கொடிய பாழ்க்கடலில் வீழ்ந்து அறிவு மயங்கி மனம் பதைத்து, ஐயனே, யான் படுவது முறையாகுமோ நின் அருள் நிலைக்கு ஒக்குமோ என்று வருந்திக் கீழ்மை யுறுகின்றேன்; இதனை நீ அறிய வில்லையே; நாயனைய என்பால் தயவில்லையா? நான் பாவியா? உலகியல் துயரத்தில் ஆழ்ந்து கெடுபவன் என்று கருதிப் புறத்தே தள்ளி விட்டால், அது நீதியாகுமா? ஐயோ, அண்ணலே, யான் என்ன செய்வேன், எ. று.
உலகில் வாழ லுறுவார்க்கு உடம்பும் பொருளும் மருந்தும் சிறப்புற வேண்டப்படுவன வாதலால் அவற்றை யளிக்கும் முதல்வனாதல் பற்றி, “முருகக் கடவுளை, “நல் வாழ்வே நற் பொருளே நன் மருந்தே” என்று பரவுகின்றார். வாரிதி - கடல். தனது திருவருளாகிய செல்வத்தை வரையாது வழங்குபவனாதலால் “வள்ளலே” எனக் கூறுகின்றார். பிறவிக் கடல் காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றித் தன்கண் வீழ்ந்த உயிர்க்கு மேன்மேலும் வீழ்ச்சியே எய்துவிப்பதென ஆன்றோர் கூறலால், “பாழ்வேலை எனும் கொடிய துயர்” என்று பகர்கின்றார். வேலை-கடல். பாழ்வேலை- பாழ்விளைவிக்கும் கடல். மண்ணக வாழ்வு மயக்கமும் மாயமும் செய்வது பற்றி, “மாழ்கி” எனவும், ஆற்றாவிடத்து உடல் பதைத்து நடுங்குவது தோன்றப் “பதைத்து” எனவும் உரைக்கின்றார். அருளாளர் திருமுன் ஒருவர் பதைத்து வருந்துவது, அவரது அருளாட்சிக்கு ஒத்ததன்றென்றற்கு “முறையோ நின்பதத்துக்” கென்று முறையிடுகின்றார். பன்முறை முறையிட்டும் அருள் எய்தப் பெறாது துன்பத்தில் மூழ்கி வருந்துமாறு புலப்பட “முறையோ நின்பதத்துக் கென்று தாழ்வேன்” என மொழிகின்றார். திருவருள் எய்தாமைக்குக் காரணம் யாதாகலா மெனத் தம்முள் ஆராய்கின்ற வள்ளற் பெருமான் இறைவனுக்குத் தன்பால் தயவின்மையும் அதற்கேது பாவம் மிக வுடைமையும் காரணமாகலாம் என எண்ணி, “நாயேன் மட்டும் தயவிலையோ நான் பாவிதானோ” என்றுரைக்கின்றார். தயவு பெறேனாயின் அருட் கடலாகிய நினக்கு அயலதாகிய பிறவிக் கடற்குள் மூழ்கி வருந்துவேன் என்பார், “அயல் விட்டால் பார்க்குள் ஆழ்வேன்” என்றும், அது நின் அருளாட்சிக்கு முறையாகா தெனற்கு “நீதியேயோ” என்றும், இறைவன் செயற்கு எதிராய் ஒன்றும் செய்ய மாட்டாமையால் “அச்சோ இங்கு என்செய்கேன் அண்ணால் அண்ணால்” என்றும் உரைக்கின்றார்.
இதனால் பாருலகில் பிறந்துழலும் துன்பத்தில் ஆழ்ந்து கெடாமல் அருள் வழங்கி உய்தி பெறுவிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டவாறாம். (8)
|