1000. தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
தழுவி யேஅதை முழுவதும் கேட்க
சேய நன்னெறிஅணித்தது செவிகாள்
சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
உரை: செவிகளே, தூயதாகிய திருநீற்றை யணியாத பேய் மக்கள் ஏதேனும் ஒன்று சொல்லுவார்களானால், நீங்கள், அற்பமெனக் கருதிக் கேட்கும் வாயிலை அடைத்துக் கொள்ளுமின்; பரந்த வெண்ணீற்றை யணியும் அன்பர்கள் ஒன்று உரைப்பாராயின், அதை விரும்பி முழுதும் கேட்பீர்களாக; சேய்மையி லுள்ளதாகிய திருவருள் நன்னெறி நமக்கு அண்மைய தாகும்; அன்பராய பாணற்குப் பொன் கொடுத்து விடுமாறு சேரமான் பெருமாளுக்குத் திருமுகம் கொடுத்து அருள் செய்யும் தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைதற் பொருட்டாம். எ.று.
“சுத்தமாவது நீறு” என்பவாகலின், “தூய நீறு” என்று புகழ்கின்றார். பொன்மை கருமை யாகிய நிறமின்றி வெண்மை நிறமுடையதைத் “தூய நீறு” என்னும் வழக்குப்பற்றி இவ்வாறு கூறினா ரென்றலும் ஒன்று. தூய நீற்றினைத் தேர்ந்தணியாமை பேய்த்தன்மையாதலால் தூய நீறிடாரைப் “பேயர்” என வைகின்றார். அவர்களோடு உரையாடலாகாது; யாதானும் பேச வருவராயின் பொருளல்லன பயனில்லன என வெறுத்துச் செவியிற் கேட்டலைக் கைவிடுக என்றற்கு, “ஒன்று சொல்லுவாரெனில் புல்லென அடைக்க” என அறிவுறுத்துகின்றார். தாவிய என்பது ‘தாய’ என வந்தது; “அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு” (குறள்) எனத் திருவள்ளுவனார் வழங்குவது காண்க. தாவுதல், ஈண்டுப் பரத்தல் மேற்று. எங்கும் யாவரும் விரும்பி யணியும் திருநீறு “தாயநீறு” எனவும், உண்மை யன்புடையார் அதனைத் தேடிப் பெற்று அணிவராதலால் “தாயநீறிடும் நேயர்” எனவும், பரவுகின்றார். அவர் உரைப்பன பொன்னினும் மணியினும் போற்றத் தகுவன என்றற்கு “ஒன்றுரைத்தால் தழுவியே யதை முழுவதும் கேட்க” என்று உணர்த்துகின்றார். அவர்கள் கூறுவன அனைத்தும் உறுதி நல்குவன என்றற்கு “அதை முழுவதும் கேட்க” என வற்புறுத்துகின்றார், வேத சிவாகமங்கட் கெல்லாம் அரியது சிவமாகிய செந்நெறி எனப் பெரியோர் கூறுதலால், “சேய நன்னெறி அணித்தது” என்று இசைக்கின்றார். சிவபரம்பொருளை வேதங்கள் ஐயா எனத் “தேடி அருமையுடர்ந் தயர்தல்” பற்றிச் சிவத்தின் திருநெறியைச் “சேய நன்னெறி” எனத் தெருட்டுகின்றார். சேரமான் என்றது, கழற்றறிவாராகிய சேரமான் பெருமாளை. மதுரைத் திருவாலவாய்க் கோயிலில் பத்தியொடு பாடிப் பரவிய பாணபத்திரனுக்குப் பொன் தந்து விடுக்குமாறு சிவபெருமான், “சேரமான் காண்க” என முகமன் செய்து, “பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் தன் போல் என்பால் அன்பன்” எனவுரைத்து, அவற்கு “மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்று திருமுக வோலை யனுப்பினார்; அது கண்ட சேரமானும் பெரும் பொருள் நல்கி அன்பு செய்தார். அதனை “ஆய பாணற்குப் பொன் பெற அருளும் ஐயர்” என்று பாராட்டிய வடலூர் அடிகள், தூய திருநீறு நினைந்து அணிபவர் பெறும் பயன் ஈதெனக் காட்டுவாராய், “ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே” எனத் தெரிவித்தருளுகின்றார்.
இதன்கண், தூய நீறிடாரைப் பேயர் என்றும், இடுவோரை நேயரென்றும் சொல்லிச் சிவபுண்ணியத்தின் சிறப்புக் கூறி, அணிபவர் பாணபத்திரர் போல் சிவன் சேவடி அடைகுவர் எனத் தெளிவு நல்கியவாறாம். (4)
|