1002. அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
உரை: என்னுடைய நாவே, திருவருளை நல்குகின்ற திருநீற்றை யணியாதவர் உனக்கு அமுதத்தை யளித்தாலும், அதனை மலமெனக் கருதி அருந்துவதைக் கைவிடுக; ஞானம் அருளும் திருநீறணியும் செல்வ மக்கள் புல்லிய கூழ் தருவாராயினும் மனமொத்து அவர்களை வாழ்த்தி அவர் தருவதைத் திருவமுதாக மதித்து உண்க; அறிவை இருள்படுத்துகின்ற துன்பவுணர்வின்றிச் சைவ வொழுக்கினர் கொடுக்கும் இன்பம் தரும் நல்லமுதைப் பலருடன் இனிதிருந்து உண்டு, மயக்கமுற்றுப் போர்செய்வான் போந்த கயாசுரன் என்னும் யானையின் தோலை உடுத்துக்கொண்டு என் சிந்தைக்குள் உறைகின்ற ஈசன் திருவருள் நீழலில் இனிது வாழ்தற் பொருட்டு. எ.று.
என்னுடைய நாவே, இன்ப நல்லமுதருந்தி ஈசன்பால் வாழுதற் பொருட்டு நீறிடார் இடும் மலத்தினை அருந்துதல் ஒழிக; செல்வர் இடும் கூழைச் சேர்ந்து வாழ்த்தி அமுதெனக் கருதி உண்க என வினை முடிவு செய்க. “போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு” என்று ஞானசம்பந்தர் அருளுதலால் “அருள்செய் நீறு” என்றும், அதனை அணியாதவர் தருவது அமுதமாயினும் மலமாய் மறுக்கப்படுதல்பற்றி “அம்மலத்தினை அருந்துதல் ஒழிக” என்றும் கூறுகின்றார். தெருள் - ஞானம். “பராவணமாவது பாவம் தீர்ப்பது” என்றலின், வள்ளற் பெருமான் “தெருள்கொள் நீறு” என்று சிறப்பிக்கின்றார். பலரோடு சேர்ந்து இருந்து உண்பதே உணவாமென்பது பற்றி, “சேர்ந்து வாழ்த்தி அத்திருவமு துண்க” என்றும், அதனால் விளையும் பயன் இதுவெனச் சுட்டுதற்கு “இன்ப நல்லமுது இனிதிருந்து அருந்தி ஈசன்பால் வாழுதற் பொருட்டு” என்றும் உரைக்கின்றார். துன்பம் வந்து தாக்குமிடத்து அறிவின்கண் தெளிவு குன்றி அறியாமை யிருள் பரவிவிடுவது பற்றி, “இருள்செய் துன்பம் நீத்து” என இயம்புகின்றார். சிவனைப் பரம்பொருள் எனத் தெளியாது பகையுணர்வால் அறிவு மயங்கித் தீங்கு செய்வான் வந்தமையின் அவனை, “மருள்செய் யானை” என்று குறிக்கின்றார்.
நீறிடும் செல்வர் கூழிடினும் அதனை அமுதெனக் கருதிப் பலரோடு கூடி மகிழ்ந்திருந்துண்பது சிவபுண்ணியம்; ஈசன்பால் இன்பமோடு வதிவது தேற்றம் எனத் தெளிக. (6)
|