1003. முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பக்தர்கள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
உரை: எனது உடம்பே, முத்தி தரும் இயல்பினதாகிய திருநீற்றை யணியாதவர் தமது முன்கையால் தொட்டாராயினும், முள்ளினால் குத்தியதுபோல் வெறுப்புற்று நடுங்கி விலகுக; பத்தியினை யுண்டாக்கும் திருநீறையணியும் சிவபக்தர்கள் பாய்ந்து காலால் உதைத்தாராயினும், விருப்படன் ஏற்று மகிழ்க; இது உனக்கு உரைக்கத் தகும் நற்புத்தியாகும்; இதனை யுரைப்பது, விரும்புதல் இல்லாத திரிபுரத்தசுரர்களின் மும்மதில் நகரம் வெந்து சாம்பராய் விழும்படி நகைத்தழித்தவனும், ஞான சத்தியாகிய வேற்படையைக் கையில் ஏந்தும் மகனான முருகனை விரும்புபவனுமாகிய சிவபெருமானை நாம் எக்காலத்தும் சார்ந்திடற் பொருட்டாம். எ.று.
“முத்தி தருவது நீறு” என்றலின், வள்ளற் பெருமான், “முத்தி நீறு” என மொழிகின்றார். முன்கை யென்றது, முன்கை விரல், நீரணிதலின்றிக் கீழ்மைப் பட்டமையின், “முள்ளுறுத்தல் போல் முனிவுடன் நடுங்க” என உரைக்கின்றார். “பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு” என்று ஞானசம்பந்தப் பெருமான் பாராட்டுதலால், “நீறணிவாரைப், “பத்தி நீரிடும் பக்தர்கள்” எனப் பரவுகின்றார். பாய்தல், ஈண்டு எற்றுதல் குறித்து நின்றது. உம்மை எதிர்மறை. அதனைக் குற்றமாகக் கொண்டு வருந்துதல் ஒழிக என்றற்கு “பரிந்ததை மகிழ்க” என்று கூறுகின்றார். உடம்புக்கெனத் தனியே புத்தி தருவதாயின் அஃது இதுதான் என்பாராய், “புத்தி ஈது காண்” எனப் புகல்கின்றார். போற்றல் - விரும்பி யேற்றுக் கோடல், அச் செயல் இல்லாத பகைவரைப் “போற்றலார்” என்று குறிக்கின்றார். திரிபுரத் தசுரரை இங்கே “போற்றலார்” எனக் குறிக்கின்றார். பொன், வெள்ளி, இரும்பு என்ற மதில்களைக் கொண்ட நகரமொன்றை யமைத்து அதன்கண் இருந்துகொண்டு உலகுயிர்கட்குத் தீங்கு செய்தனராக, அவரது நகரம் வெந்து சாம்பாராய் வீழ்ந்துகெட சிவபெருமான் நகைத் தெரித்தமை பற்றி “புரம் பொடிபட நகைத்தோன்” என்றும், முருகப் பெருமான் கையில் தாங்கும் வேல் ஞான சக்திவேல் என்பதுபற்றி, முருகனைச் “சத்தி வேற்கரத் தனயன்” என்றும் கூறுகின்றார். தனயன் - மகன்.
இதனால், திருநீறணியும் பக்தர்கள் தவறு செய்யினும் பொறுத்து மகிழ்வது சிவபுண்ணியம் என்றும், அதன் விளைவாக நாம் சிவனைச் சார்ந்து வாழலாம் என்றும் உரைத்தவாறு. (7)
|