1004.

     இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
          கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
     இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
          எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
     இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
          ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
     கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
          இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.

உரை:

     கைகளே, இனிமை தரும் திருநீற்றை யணியாத கீழ்மையான நாயின் தன்மை பொருந்திய புலைப் பண்பினர்க்கு எள்விதையில் பாதியளவுதானும் கொடுத்தலைக் கைவிடுக; அந்நீர்மைத் தாகிய திருநீற்றையணியும் சிவனடியார்கள் எம்மையே கேட்பாராயினும் எடுத்து அவர்கட்குத் தருக; இனிமை விளைவிக்கும் நல்ல ஒழுக்கமாவது ஈதாகும்; மேலும், இது ஈசனும் நம்முடைய இறைவனும் தன்னைத் துதிப்பவர்க்கு இனிய மாலாகிய விடையின்மேல் இவர்ந்து வந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமான் எம்முள்ளத்தே இடம் கொண்டிருந்து எமக்கு வேண்டுவன இசைந்து நல்குதற் பொருளதாம், எ.று.

     பரவுதற்கும் காண்டற்கும் பூசுதற்கும் பேசுதற்கும் மிகவும் இனிய தெனச் சான்றோர் உரைத்தலின், “இனியநீறு” என இயம்புகின்றார், “பரவ இனியது நீறு”, “காண இனியது நீறு”, “பேச இனியது நீறு” என்று வருவன காண்க. ஈனம் - கீழ்மை. நாய்ப் புலையர் - நாயின் தன்மைவாய்ந்த புலையர்கள். தாமும் உண்ணாது பிறரையும் உண்ண விடாது வருத்துபவாதலால் “ஈனநாய்ப் புலையர்” என இகழ்கின்றார். அவர் தாமும் திருந்தாப் பண்பினர் என்பது புலப்பட அவர்கட்கு “எள்ளிற் பாதியும் ஈகுதல் ஒழிக” என உரைக்கின்றார். எம்மை என்றது, எம்மையும் எம்மைப் போலும் அடியார்களையும் குறிப்பது. இம்மை, அம்மை நிலத்து எவ்வகைப் பொருளும் என்றற்கு ‘எம்மை’ என்றார் என்றலும் ஒன்று. சிவனடியவர் - சிவன் திருவடியைச் சிந்தையிற் கொண்டவர். நன்னெறி - நல்லொழுக்கம். ஈசன் - அருட் செல்வம் உடையவன். நம்முடைய இறைவன் - காக்கப்படும் பொருளாக நம்மை உடைய பெருமான். மால்விடை - திருமாலாகிய எருது; பெரிய எருது என்றுமாம். இந்த நன்னெறி சிவபிரான் நம் உள்ளத்தே இடம் கொள்வதைப் பொருளாகக் கொண்டது என்பதாம். பொருளது, பொருட்டென வந்தது.

     இதன்கண், கைகள் ஈனநாய்ப் புலையர்க்கு ஈயாமை சிவபுண்ணியம்; இதன் பயனாவது சிவபெருமான் எழுந்தருளி வந்து உள்ளத்தே இடங்கொண்டு உறைவதாகும்.

     (8)