1006.

     நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
          நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
     கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
          கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
     மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
          மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
     அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
          அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.

உரை:

     நெஞ்சமே, நிலைபேறுடைய திருநீற்றினை அணியாத புலைத்தன்மையுடையாரை நினைப்பதாகிய செயலைக் கைவிடுவாயாக; கலைவளம் பயக்கும் திருநீற்றை யணியும் கருத்துடைய தலைமக்களை நாளும் நினைந்து அவர்பால் அன்புற்று மனம் கனிந்து நெக்குருகுக; மலையை வில்லாக வுடையவனும், திருமாலை விடையூர்தியாக வுடையவனும், பிரம்மனது மண்டையோடு தங்கிய கையை உடையவனும், கடலிடத்தே பிறந்த நஞ்சினை அமுதாகவுண்டு கழுத்தின்கண் அடக்கியுள்ளவனுமாகிய அச் சிவபெருமானை நாம் மனமகிழ்ச்சியுடன் அடைந்து உய்தி பெறுவது பொருளாம். எ.று.

     நெஞ்சமே, புலையரை நினைப்பதென்பதை ஒழிவதும், கருத்தரை நாளும் கருதிக் கனிந்து நெக்குருவதும், சிவனை நாம் அடைகுதற் பொருட்டாம் என முடிக்க. எவ்வகைப் பொருளும் யுகாந்தத்தில் வெந்து நீறாதலுண்டேயன்றி நீறு வேறொன்றும் ஆவதில்லையாதலின், அதனை “நிலைகொள் நீறு” என்றும், அதனை இடுதற்கு மறுக்கும் மனப்பான்மை புலைத்தன்மையாதலின், நீறிடாதவரைப் “புலையர்” என்றும் இசைக்கின்றார். நினைத்தலும் செய்கையாதலால் “நினைப்பதென்பதை ஒழிக” என்றும், நினைப்பது தீயாரை நினைக்கும் தீவினை யாமென்றும் கூறியவாறாம். பல்வகைக் கலைகளும் கற்பவர் தொடக்கத்தில் நீறணிந்து பரவுதலால் “கலைகொள் நீறு” என்று கூறுகின்றாராம். கருத்தர், தமிழாய்க் கொள்ளுமிடத்துக் கருத்தையுடையவர் எனவும், வடசொல்லா மிடத்துத் தலைவரெனவும் ஆம் எனக் கொள்க. நீறணிந்து கலைவளம் பெற்ற கருத்தராவார் திருஞான சம்பந்தர் போன்ற சான்றோர். அவரை நினைந்து மனம் உருகுதல் சிவனை நினைந்து நெக்குருகுதலாமாதலின், அதனைச் செய்க என வள்ளற்பெருமான் வற்புறுத்துகின்றார். ஆர்வ மொழி யென்னும் அணிநலம் கருதி, வில்லினான், விடையுடையான், கரத்தான், மிடற்றான் ஆகிய அவனை அடைகுதற் பொருட்டு எனத் தெளிய வுரைக்கின்றார்.

     இதன்கண் நீறிடாப் புலையரை நினையற்க என விலக்குவதும், நீறிடும் கருத்தரை நினைந்து அன்பால் நெக்குருகுக என விதிப்பதும் சிவபுண்ணியம் என்றும், அவனை நாம் மகிழ்ந்து அடைதற்கு பொருட்டு என்பது தேற்றம் என்றும் தெரிந்துணர்தற் குரியனவாம்.

     (10)