39. நெடுமொழி வஞ்சி
திருவொற்றியூர்
நெடுமொழி வஞ்சி யென்பது புறப்பொருள் நெறியில் வஞ்சித் திணையிற்
காணப்படும் துறைவகையுள் ஒன்று; இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை யென்ற நூல், “ஒன்னாதார்
படைகெழுமித் தண்னாண்மை யெடுத்துரைத்தன்று” (4:12) என்று கூறுகிறது. இப் பத்தின்கண்
வள்ளற்பெருமான் காமம் முதலிய குற்றங்களை நேர்நிறுத்தி, எனக்கு உடன் துணையாகாது பகையாய்
என்னைப் படுதுன்பத் தாழ் குழியிற் தள்ளிக் கெடுக்கச் சூழ்கின்றனி ராதலால், யான்
திருவொற்றியூரையடைந்து தியாகப்பெருமானிடம் அருள்வாளி பெற்று உம்மைத் துண்டாய் வெட்டி
வீழ்த்துவேன்; எனது இவ்வுரை உண்மை யென்று உணர்ந்து ஒழுகுமின் என்று உரைக்கின்றார்.
காமம் முதலிய ஆறும் தத்தமக்குரிய எல்லைக்கண் நிற்குமாயின் குற்றமாய்த் தீங்கு பயவாவாம்.
எல்லை கடவாத காமம் உயிர்த்தொகை தோன்றி வாழ்வாங்கு வாழ்ந்து உயர்கதி பெறற் கேதுவாகும்.
வினை செய்யிடத்தின்கண் இளையர் தவறு கண்டவழித் தோன்றும் கோபம் அத்தவறு போக்கிச்
செம்மைப்பயன் எய்துதற்கு உதவுகிறது. இவ்வாறே உலோபம், இன்மையால் இளிவெய்தாமை யுய்தற்கும்,
மோகமாகிய வுறக்கம் உழைக்கும் உறுப்புக்கள் ஓய்வால் உறுதி பெறுதற்கும், பிறவும் இனிது உழைத்து
வாழ்க்கைக் கின்றியமையாத பொருட்பயன் பெறுதற்கும், துணை புரிகின்றன. எல்லை யிகந்த
போதுதான் இவை நல்லறிவை விழுங்கித் தீமைச் சூழலிற் செலுத்தித் துன்புறுத்துகின்றன. இவற்றால்
விளையும் நலத்தினும் இவற்றின் மிகையால் உளவாகும் தீங்கு பெரிதாதல் பற்றியே சான்றோர்
குற்ற வகையில் நிறுத்திப் பழிக்கின்றார்கள். இவற்றை அளவோடு பயன் கோடலும், மிகுவித்
தடிமையாதலும் அறிவுடை மக்கள் செயலேயன்றிப் படைத்தோன் செயற்குற்றமெனக் கொள்ளல்
அறிவுடையார்க்கு அறமன்று.
இப் பத்தின்கண் வரும் பாட்டுக்களிற் பொதிந்திருக்கும் கருத்துக்கள் திருநாவுக்கரசர்
திருவாரூரிற் பாடியருளிய “பொய்ம்மாயப் பெருங்கடல்” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை நம்
நினைவில் நிறுத்திச் சிந்திக்கச் செய்கின்றன. வள்ளற் பெருமான் உள்ளத்தில் இத்
திருத்தாண்டகம் நின்று தந்திருக்கும் அருள் விளக்கம் நினைக்குந்தோறும் இன்பம் செய்கிறது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1007. வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: மிக்க காமமென்னும் புலையனே, கச்சணிந்த மங்கையருடைய முலைகளாகிய மலைமேல் ஏற்றி மறுபடியும் அங்கே அம் மகளிரின் இடையிடத் துறுப்பாகிய மடுவுக்குள் தள்ளி என்னை வருத்தப் பார்க்கின்றாய்; அவ்வாறு என்னைக் கெடுத்து வருத்துவதால் உனக்கு எய்துவது பாவமே யன்றிப் பயன் சிறிதேனும் உண்டோ? என்னை மீளமீள இழுக்கின்றாய்; இன்று நான் சென்று அழகுபெற்ற ஒற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவனது அருளாகிய வாட்படையைப் பெற்று உன்னைத் துண்டாக வெட்டி வீழ்த்துவேன்; இது வெற்றுரை யன்று; உண்மையென உணர்க. எ.று.
வார் - மகளிர் மார்புக்கணியும் கச்சு. மலைமீதேற்றிப் பின் கீழே மடுவில் தள்ளித் துன்புறுத்துவாரைப் போலக் காமக் களியாட்டில் ஈடுபடுத்துவது தோன்ற, “மங்கையர் முலைமலைக் கேற்றி மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் பார்க்கின்றாய்; ஈர்க்கின்றாய்” என்று கூறுகின்றார். புலையர் உணவுப் பயன் கருதிக் கொலைப்பாவம் செய்பவராதலின், “எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவமேயலால் பயன் சிறிதுளதோ” என்று வினவுகின்றார். கடுங்காமம் - மிக்க காமம். மிகுதிப் பொருட்டாய கடியென்னும் உரிச்சொல் திரிந்து “கடுங்காமம்” என்று வந்தது. புலையனாக உருவகம் செய்தலால் “காமமாம் புலையா” என்று இயம்புகிறார். ஏர் - அழகு. திருவருள் கொலைத் தொழிற்குரித்தன்றாயினும், நெடுமொழி நிகழ்ச்சிக்காக “உன்னை வெட்டுவன்” என உரைக்கின்றார்.
இதனால், காமம் மிக்குற்றுக் கெடுக்கவரின் திருவருளாகிய ஞான வாள் கொண்டு வீழ்த்துவேன் என்றதாம். (1)
|