1008. கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
கண்ட பாவியே காமவே ட்டுவனே
இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: பூங்கொடியின் தன்மையையுடைய மகளிருடைய இடைப் பகுதியிலுள்ள நிதம்பமாகிய நரகக் குழியில் என்னைக் கொண்டு சென்று அதன்கண் வீழ்த்தி அஞ்சத்தக்க வஞ்சனையால் அறிவைக் கலக்கிய பாவியாகிய காம வேட்டுவனே, நெஞ்சகம் இடிந்து மிகவும் துன்பமுழந்துள்ளேன்; இன்னமும் நீ என்னை ஏன் அக் காமச் சூழலுக்கு இழுக்கின்றாய்; கெடுதலில்லாத திருவொற்றியூரில் வீற்றிருக்கும் சிவனது திருவருளாகிய வாளால் உன்னைத் துண்டாக வெட்டி வீழ்த்துவேன்; இஃது உண்மையென வுணர்க. எ.று.
நற்குணமே வடிவாய குலமகளிரு முண்மையின் பூங்கொடி போலும் பண்புடைய மகளிரைக் “கொடிய மாதர்” என்று குறிக்கின்றார். கொடி. ஆகுபெயரால் கொடியின் தன்மை மேற்று; நலம் விற்கும் மகளிர்க்காயின் ‘கொடிய மாதர்’ என்றது, கொடுமைப் பண்பும் செயலுமுடைய பொருட்பெண்டிரைக் குறித்ததாம் என்று கொள்க. நோய் விளைத்தல் கண்டு, மகளிர் உறுப்பை நரகக் குழி என்று பழிக்கின்றார். கொண்டு சேறற்கு அறிவிருக்க, அதனை வீழ்த்தி மனத்தைத் தன்வயமாக்கிக் காமக் களிப்பினுள் தோய்வித்தலின், “என்றனைக் கொண்டு சென்று அழுத்தி” எனவும், நினைக்கும் இயல்பிற்றாகிய மனத்துக்கு எல்லையற்ற இன்பமாகக் காட்டிப் பின்பு துன்பமாய்க் கலங்கச் செய்தலை நோக்கி, “கடிய வஞ்சனையால் எனைக் கலக்கம் கண்ட பாவியே” எனவும், மாவும் புள்ளு மாயவற்றை வஞ்சித்துக் கொல்லும் வேடர்போல அறிவை வஞ்சித்து மயக்குதலால் “காம வேட்டுவனே” எனவும் உரைக்கின்றார். காமக் களிப்பால் நெஞ்சம் வலியிழந்து துன்பத்துக் கிரையாய செய்தியை,” இடிய நெஞ்சகம் இடர் உழந்திருந்தேன்” என்று கூறுகின்றார். நெஞ்சகம் இடிய என மாறுக. காம வுணர்வு மனநிறையைக் கெடுத்தலை, “காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு” (குறள் 1252) என்று அறநூல் தெரிவிப்பது அறிக. அறிவும் நிறையும் நாணுமாகிய நற்பண்புகளை யிழந்தபின் நல்லன வேறின்மையின், என்னைப் பற்றி மீளவும் காமக்களிச் சூழற்கு ஈர்த்தல் வேண்டா என்றற்கு “இன்னும் நீ என்னை ஏன் இழுக்கின்றாய்” என்று வெகுள்கின்றார். ஒடிதல், ஈண்டுக் கெடுதல் மேற்று. “ஒடியா துலாவலின்” (ஞானா. 10:14) எனச் சான்றோர் வழங்குதலறிக.
இதனால், காம வேட்டுவன் மீள மீள வந்து மனத்தைக் காமக்களியாட்டுக் கீர்ப்பதைக் கடிந்து உரைப்பது அறியலாம். (2)
|