1009. பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
வாதை உற்றிட வைத்தனை ஐயோ
மதியில் காமமாம் வஞ்சக முறியா
ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: பேதைத் தன்மை யுடைய மங்கையரின் இடைப் பகுதியில் உள்ள நிதம்பமாகிய ஆழ்ந்த குழியில், யான் அழுது புலம்பவும் விடாதுபற்றி வீழ்த்தித் துன்புறச் செய்தாய்; ஐயோ, அறிவில்லாத காமமாகிய வஞ்சனை புரியும் முறியனே, சார்ந்தார்க்குளதாய துன்பம் நீக்கியருளும் அடியார்களின் துணையால் புறப்படுகின்றேன்; என்னை இன்னமும் நீ பற்றி யீர்ப்பாயாயின், சான்றோர் புகழும் ஒற்றியூர்த் தியாகப்பெருமான் அருளாகிய வாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டி வீழ்த்துவேன்; இஃது உண்மை யுரையெனத் தெளிக. எ.று.
பேதைமை யுடைய மகளிரை, பேதை மாதர் என உரைக்கின்றார். பேதைமையாவது ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் என்பர் திருவள்ளுவர். கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பர் களவிய லுரைகாரர். மருங்கு - இடைப் பகுதி. ஆழ்ந்த பிலம் என்பது நிதம்பமாகிய பெண்மையுறுப்பு, காம வுணர்வு தோன்றி வேண்டாத போதும் அறிஞர்களைப் பற்றியீர்த்துக் காமக் களியாட்டில் வீழ்த்தும் குறிப்பை “என்றனைப் பிடித்தழப் பிலத்தில் ஆழ்த்தி” என்றும், அதனால் அவர்கள் மனம் நோயுற்று வருந்தும் திறத்தை “வாதை யுற்றிட வைத்தனை” என்றும், அவல மிகுதி புலப்பட “ஐயகோ” என்றும் அரற்றுகின்றார். காமக் களிப்பு மிக்கபோது அறிவு சோர்பு படுதலால் “மதியில் காமம்” எனவும், காமக் கிளர்ச்சி தோன்றுவதும் ஒடுங்குவதும் பிறர் அறியாமே நிகழ்தலின் “வஞ்சக” எனவும், வளரும் செடியைத் தாக்கி அதனைக் கெடுக்கும் முறியன் என்னும் நோய்போல, மனத்தைத் தாக்கி அறிவு வளர்ச்சிக்கு ஊறு செய்வது விளங்க “வஞ்சக முறியா” எனவும் மொழிகின்றார். காம முதலியவற்றால் உண்டாகும் துன்பமற்ற சிவனடியார்களை, “ஏதம் நீத்தருள் அடியர்” என்றும், அவர்கள் சார்பு சிவஞானமே யாதலின், அது துணைகொண்டு ஒற்றியூர்க் கேகுகின்றேன் என்பார், “அவர் சார்வால் எழுகின்றேன்” என்றும், என்னை இனியும் காமக் கீழ்நெறிக் கீர்க்காதே; ஈர்த்தால் சிவஞானமாகிய அருள்வாளால் உன்னை வெட்டி வீழ்த்துவேன் என்றற்குச் “சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவன்” என்றும் உரைக்கின்றார்.
இந்த மூன்று பாட்டுக்களாலும் காமவுணர்ச்சியின் கொடுமையை யாவரும் இனிதுணருமாறு கூறும் திறம் மிக்க வியப்பாக வுளது. மிக்க காமத்தின் மிடல் தரு துன்பத்தையும், காம வேட்டுவன் மீள மீள வீர்க்கும்வேதனையையும், வேண்டாரையும் வலிய ஈர்த்துக் கெடுக்கும் காம முறியன் துன்பத்தையும் கூறியிருப்பது காண்க. (3)
|