101.

    அண்ணாவே நின்னடியை யன்றி வேறோர்
        ஆதரவிங் கறியே னெஞ்சழிந்து துன்பால்
    புண்ணாவேன் றன்னை யின்னும் வஞ்சர்பாற் போய்ப்
        புலந்து முக வாட்டமுடன் புலம்பி நிற்கப்
    பண்ணாதே யாவனிவன் பாவிக் குள்ளும்
        படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
    எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
        இசைக்கரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே.

உரை:

     சொல்லுதற் கரிய புகழ் கொண்ட தணிகை மலையில் எழுந்தருளும் தலைவனே, அண்ணலே, உனது திருவடியல்லது வேறு எதனையும் ஆதாரமாகக் கொள்ள அறியேனாய்த் துன்பத்தால் மனமுடைந்து புண்ணாகியுள்ள என்னை இனியும் வஞ்ச மனம் உடையவரிடம் சென்று அவர் செய்யும் வஞ்சனையால் நெஞ்சம் புலர்ந்து முகம் வாடி வருந்தி நிற்கப் பண்ண வேண்டா; உலகிற் பாவிகளில் படுபாவியாய இவன் யாவன் என்று எண்ணிப் பரிவுடன் புறத்தே விலக்கித் தள்ள நினைத்தல் வேண்டா; யான் மிகவும் ஏழையாதலால் எனக்குய்தி யில்லையாம், எ. று.

     இசைத்தல்-சொல்லுதல். திருத்தணிகை பரந்து நிலைபெற்ற புகழுடைமை பற்றி, “இசைக்கரிய தணிகை” என்று கூறுகிறார். இசை-சொல். கோ-தலைவன்; அருளரச னெனினும் அமையும். அண்ணா, முறைப்பெயரன்று; தலைவனென்று பொருள்படும். அண்ணன் என்பது அண்ணா என விளியேற்றது. உலகியல் நிலையாத்தன்மை யுடையதாகலின், வாழ்ந்து உய்தி பெறுவார்க்கு நிலைத்த ஆதாரமாவது இறைவன் திருவடி யல்லது இன்மையால், ”நின் அடியை யன்றி வேறோர் ஆதாரம் இங்கு அறியேன்” என வுரைக்கின்றார். உலகிற் பிறந்து வாழும் மக்களுயிரைப் பல்வகையாலும் சுடச்சுடத் தாக்கி வருத்துவது மண்ணியல் வாழ.க்கையின் இயல்பாதலால், “துன்பால் நெஞ்சழிந்து புண்ணாவேன்” எனவும், உள்ளொன்று வைத்துப் புறத்தே ஒன்று சொல்லியும் ஒன்று செய்தும் வாழும் வஞ்சகர்பாற் சென்று வருந்தினமை தொன்ற, “இன்னும் வஞ்சர்பாற் போய்ப் புலந்து முக வாட்டமுடன் புலம்பி நிற்கப் பண்ணாதே” எனவும், பாவம் பலவும் செய்து அவற்றின் பயனாகிய துன்பங்களை யுற்று வருந்துவோரை யாதரிப்பது மேலும் பாவம் விளைதற்கு ஏதுவாமெனும் கருத்தால் தன்னை இறைவன் புறம்பே விடுக்க எண்ணுவனோ என்ற அச்சத்தால் “யாவனிவன் பாவிக்குள்ளும் படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள எண்ணாதே” எனவும், ஏழ்மைக்குரிய அறியாமையும் பொருளில்லாமையும் என்பால் உள்ளன என்பார், “யான் மிகவும் ஏழை கண்டாய்” எனவும் இயம்புகின்றார். வெறுத்துத் தள்ள எண்ணாதே என்று சொல்ல வந்தவர், இறைவன் “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்பது கருதிப், “பரிந்து தள்ள எண்ணாதே” என்று கூறுகிறார்.

     இதன்கண், உலகியலில் வஞ்சர்பாற் பன்முறையும் சென்று அவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருந்தியதைத் தணிகை முருகனிடம் முறையிடுமாறு காணலாம்.

     (9)