1010. கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
கொடிய னேன்எனைக் கூடிநீ நின்ற
பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
சாவ நீயில தேல்எனை விடுக
சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: கோபம் என்று சொல்லப்படுகின்ற கொலைக்குரிய புலைத்தன்மையில் தலைமை சான்ற கொடியவனே, என்னொடு கூடி நீ நின்றதால் உண்டாகிய பாவத்தின் வலிமையால் உயிர்களிடத்துப் பகையுற்று அன்பின்றி நற்பயன்களை இழந்தேன்; நீ சாதற்கு வழி சிறிதும் இல்லையாயின், என்னை விட்டு நீங்கியொழிக; பிடிவாதம் செய்வாயாயின் நான்காகிய மறைகளின் முழக்கம் நீங்காத திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் சிவனது திருவருளாகிய வாளால் உன்னைத் துண்டாக வெட்டி வீழ்த்துவேன்; இஃது உண்மையென்று உணர்க. எ.று.
கோவம் - கோப மென்னும் வடசொற் சிதைவு. கொலைப்புலைத் தன்மை - கொலைக் கேதுவாகிய புலைத்தன்மை. கோவத்தால் பலர் உயிர்க்கொலை செய்வதை நினைந்தே வள்ளற்பெருமான் “கொலைப்புலைத் தலைமைக் கொடியனே” என்று கூறுகின்றார். கொடுமைக்குத் தலைமை கொலையாதல்பற்றி, தலைமைக் கொடியன் என்று உருவகம் செய்கின்றார். வெகுளியாகிய குற்றம் சேர்ந்திருந்தமையால் பாவங்கள் பெருகி வன்மையுற்ற திறம் புலப்பட, “என்னைக் கூடி நீ நின்ற பாவ வன்மையால்” என்றும், அவ்வன்மை காரணமாகப் பிறவுயிர்கள்பால் பகைமை கொண்டு அவற்றாற் பெறலாகும் அன்புப் பயனை யிழந்தமைபற்றி, “பரிவிலாமலே பயனிழந்தனன் காண்” என்றும் இசைக்கின்றார். இத்தகைய குற்றங்கட்கு ஏதுவாகிய உனக்குக் கழுவாய் சாவல்லதில்லை என்பார் “சாவநீ இலதேல்” எனவும், சாதலை விரும்புகின்றிலையாயின், என்னை விட்டு நீங்குதலேனும் செய்தொழிக என்றற்கு “என்னை விடுக” எனவும், நெடுமொழியால் அச்சுறுத்துமாறு தோன்ற, “சலம் செய்வாய் எனில் அருள் வாளால் உன்னை வெட்டுவன் உண்மை யென்றுணரே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், கோவத்தால் உளதாய பாவ வன்மையும், பிற வுயிர்களின் அன்புற விழுந்த பயனில் குற்றமும் எடுத்துரைத்தவாறாம். (4)
|