1011. சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவனருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: கோவத்தைச் சார்ந்து நிற்கும் லோபம் எனும் தயவுப் பண்பில்லாத கீழோனே, தலை காலிற் படத் தாழ்ந்து இரக்கின்ற மக்கட்கு அணுவில் அரிந்து கூறிட்ட ஒன்றினை ஈதற் கிசையாய்; அவ்வளவாய ஒன்றை இரப்பவர்தாம் தருவரேல் அதனை மறாது வாங்கிக் கோடற்கு இசைகின்றாய்; என்பால் உள்ளதையும் சோர்வுறாது நான் உண்ணுதற்கும் என்னோடு இயங்குகிறாயில்லை; வாழ்விற் சுகம் பயவாத நீ என்னின் நீங்கித் தூரத்தே நின்றொழிக; நில்லாது என்னை நெருங்குவாயாயின் சான்றோர் உணர்ந்து போற்றும் ஒற்றியூர் உறையும் சிவனது அருளாகிய வாள்கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவன்; இது உண்மையென அறிக. எ.று.
கரவாது ஈயும் கண்ணன்னாரிடத்தும் கோபம் மேலிடின் இவறன்மை யென்னும் கடும்பற்றுத் தோன்றி லோபமாம் குற்றத்தை செய்வித்தலின் கோபத்தைச் சார்ந்த லோபம் “சார்ந்த லோபமாம் என்றற்குச் தயையிலி ஏடா” என்று இழிக்கின்றார். அருளுள்ளத்தைத் தயா வென்றும் தயவென்றும் வடமொழியிற் கூறுவர். இரக்கமின்மையை ஒரு மகனாக உருவகஞ் செய்தலின் “தயையிலி” என்றும், “ஏடா” என்றும் இசைக்கின்றார். இரப்பவர்பாற் காணப்படும் இயற்கைச் செயலாதலின் “தாழ்ந்து இரப்பவர்” எனச் சிறப்பிக்கின்றார். அணுவளவாய பொருளை நூறு கூறிட்டு, கூறிட்ட ஒன்றினை ஈயலுற்ற விடத்தும் கடும்பற்று எழுந்து குறுக்கிட்டுத் தடுத்தலின் “ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்” என்றும், அதனையே இரப்பவர் ஒருவர் தருதலுறின் இரு கையையும் விரித்து ஏந்தி ஏற்றுக்கொள்ளும் இழிதகைமை தோற்றுவிப்பது காட்டற்கு “இரக்கின்றோர் தரின் அது கொளற் கிசைவாய்” என்றும் உரைக்கின்றார். கடும்பற்று, உள்ளத்தைப்பற்றி உடற்குட் கலந்து செரிப்புக் கருவிகளைக் கெடுத்து வேண்டா வெறுப்பை விளைவித்து உணவேலாத அவல நிலையை உண்டாக்குதலால், “சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய்” எனவும், உண்பன உண்ணமாட்டாத உடல் வாழ்விற் சுகமில்லாமையும் துன்பமும் நிலைபெறுதலின், “சுகமிலாத நீ தூர நில்” எனவும், “இன்றேல் சிவனருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை யென்றுணரே” எனவும் எடுத்தோதுகின்றார்.
இதனால், லோபம் என்னும் குற்றத்தின் தீயவியல்புகளைத் தெரிவித்தவாறாம். (5)
|