1012. மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: மோக மென்று சொல்லப்படும் பெரிய மூடனே, முடிவில்லாத துன்பத்துக்கு மூலமாகிய இல்வாழ்க்கையில் நுகரப்படும் போகம் எனப்படும் சேற்றின்கண் புதையவும், பேணப்படும் மக்கள் பெண்டு தாய் தந்தை என்கிற சோகக்கடலில் மூழ்கவும் உரியவற்றைச் செய்து என்னைச் சூழ்ந்துறைகின்றாய்; இனி நீ என்னைத் தொடர்வது கை விடுக; தொடர்குவையாயின் உவகை மிகும் ஒற்றியூர்ச் சிவபெருமான் திருவருளாகிய ஞானவாளைக் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இஃது உண்மையுரை என வுணர்க. எ.று.
மூடத் தன்மையில் மிக்கவனை மூடரில் சிறந்தோன் என்றும் சிறந்த மூடன் என்றும் இகழ்வது மரபாதல்பற்றி, “மோகம் என்னும் மூடரிற் சிறந்தோய்” என்று கூறுகின்றார். சுகம் துக்கம் மிகினும் உளதாகும் மயக்கம் மோகம்; சோம்பலும் உறக்கமும் இதனால் விளைவன. மோகம் சூழ்ந்தவிடத்து அறிவு ஒளி குன்றி மழுங்கும்; உடலுறுப்புக்கள் உழைப்பை விழையாது உறக்கவிருளில் வீழ்ந்து மழுங்கும். இந்நிலையில் நிகழும் அறிவும் செய்கையும் குற்றமாய்த் துன்பமே உண்டு பண்ணும். இல்வாழ்வில் பெறப்படும் இன்பமும் துன்பமும் மாறி மாறி அலைபோல் தொடர்ந்து தாக்குதலால், “முடிவிலாத் துயர்மூலம் இல்லொழுக்கம்” என்று கூறுகின்றார். வடநூலாரும் “சம்சாரம் சாகரம் துக்கம்” என்று தூற்றுகின்றார். இன்பம் துன்பமென்ற இரண்டையும் போகம் என்று போக காரிகை என்ற நூல் கூறும். சேற்றில் நிற்பவன் ஒரு காலைத் தூக்குகையில் மற்றைக் கால் புதைவதும், இவ்வாறு மாறி மாறிப் புதை யுண்பதையும் குடும்ப வாழ்விற் சிக்கினவன் நுகரும் இருவகைப் போகமும் இனிது காட்டுவது கண்டே, “போக மென்னும் ஓர் அளற்றிடை விழவும்” எனவும், இல்வாழ்விற் சூழ்ந்துறையும் மக்களும் பெற்றோரும் தத்தம் வினைக்குரிய போக நுகர்பவராயினும், நின்றளிக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் உடனீர்த்துத் துன்பப் பெருக்கில் ஆழ்த்திக் கொள்வதுபற்றிப் “போற்றும் மக்கள் பெண் டன்னை தந்தையராம் சோக வாரியில் அழுந்தவும்” எனவும் இயம்புகின்றார். வாரி என்பது வருவாய்க்கும் பெயராதலால், இரட்டுற மொழிதலால் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர் இருவரும் துன்பம் தோற்றுவிக்கும் வாயில்கள் என்று கொள்ளினும் அமையும். இல்வாழ்க்கையும் மக்கட்பேறும் பெற்றோர்ப் பேணலும் இன்பமாய் அறிவை மயக்கி அவர்க்குறும் துக்கங்களால் துன்பத்தில் ஆழ்த்தித் தெளிவின்மை பயந்து வாழும் மக்களறிவை இருளிற் புதைத்து ஏக்கமுறுவித்தல் எங்கும் எவர்பாலும் காணப்படுதலால் “இயற்றிச் சூழ்கின்றாய்” என்றும், இது பிறப்புத் தோறும் தொடர்ந்து நிகழ்தலால் “எனைத் தொடர்ந்திடேல்” என்றும் சொல்கின்றார். குறைவிலா வளமுடைமையால் மக்கள் இன்ப வாழ்வுடைய ரென்றற்கு “ஓகை ஒற்றியூர்” என வுரைக்கின்றார்.
இதனால், மோகமெனும் குற்றம் அறிவைத் துக்கவிருளிற் கிடத்தித் துயருறுவித்தலைச் சொல்லியவாறு. (6)
|