1013. மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: மதம் என்று கூறப்படுகின்ற பெரிய உன்மத்தனே, என்னை நீ பற்றி எய்துவிக்கின்ற துன்பத்தை யுரைக்கலுற்றால் சொல்லுக்கடங்காது; சித்தம் என்னும் மேலோன் செய்யும் செயல்வகையை நீ அறிகின்றாயில்லை; எமக்குத் தீங்கு செய்தவர்க்கு யாம் நல்லதே செய்தோம்; இதமென்பது இதுவெனத் தெளிந்துகொண்டோம்; இனி எமக்கு ஒப்பாவார் பிறர் யாவருளர் என்று என்னைக் கீழ்மை யுறுவித்தாய்; அடியார்க்கு வேண்டுவன வுதவும் திருவொற்றியூர்ச் சிவபெருமான் திருவருளாகிய வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இஃது உண்மையென வுணர்க. எ.று.
மதமாவது செல்வக் களிப்பு என்பர் பரிமேலழகர். பிறரெல்லாம் செல்வம், இளமை, மெய்வலி, புலமிகுதி முதலியவற்றால் உளதாகும் செருக்கு என்பர். மத்தன் - உன்மத்தம் கொண்டவன். இதமகிதம் எண்ணாத மத்த மனத்தன் என்றும், மாலுற்றவ னென்றும் இப்பெற்றியானை உலகர் இகழ்வர், மன மயக்கம் மத்தம் என்பதை மணிவாசகப் பெருமான் “மத்தமே யாக்கும் வந்தென் மனத்தை” (திருவெண்பா) என்று கூறுவதனால் தெளியலாம், மனத்திடை யமையும் மதமென்னும் மத்தம் எண்ணிறந்த குற்றங்களை எய்துவிக்கு மென்பதை “வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா” எனத் தொகுத்துச் சுட்டி, பின்பு ஒவ்வொன்றாக வுரைக்கின்றார். பொறி புலன்களாற் கண்டவற்றையும் மனத்தில் எழுவனவற்றையும் சிந்தித்துத் தெளிவுறுத்தும் சித்தத்தின் செயலைப் புறக்கணித் தொதுக்கும் என்பார், “சிதமெனும் பரன் செயலினை அறியாய்” என்று கூறுகின்றார். சித்தம், சிதம் என வந்தது, பரன் - மேலாயவன். தீது செய்தார்க்கு நலம் செய்தல் கடனாதலின், அது பெருமிதப்படற்கு உரியதன்று; பெருமிதப்பட்டுக் கீழ்மை யுற்றது. கூறலுற்று, “தீங்கு செய்தனர் நன்மை யாம் செய்தோம், இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை” என்று இயம்புகின்றார். “உரிமை யுடையடியார்கள் உள்ளூற உள்க வல்லார்கட்கு அருமை யுடையன காட்டி அருள் செயும் ஆதி முதல்வர்” என்று (பெரும்புலி) ஞானசம்பந்தர் நவில்வது காண்க.
இதனால், மதமெனும் குற்றம் விளைவிக்கும் இழிவினை எடுத்தோதி நெடுமொழி கூறியவாறாம். (7)
|