1014. அமைவ றிந்திடா ஆணவப் பயலே
அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
எமைந டத்துவோன் ஈதுண ராமல்
இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: தகுதி யறியாது திமிர் கொளும் ஆணவம் என்னும் சிறு பையனே; கோடிக் கணக்கான அண்டங்களனைத்தையும் ஆட்டுகின்றவன் எம்மை நடத்துபவனாகிய சிவபெருமான்; இதனை யுணராமல், “இன்று நாம் பரமனுடைய இரண்டு திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் ஏத்துகின்றோம்” என்று யாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்யற்க; உமை நங்கையை மனைவியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இதனை உண்மையாக வுணர்க. எ.று.
ஆணவம் என்பது விரிந்த சிற்சத்தி யுடைய ஆன்மாவைச் சுருக்கி நல்லுணர்வு ஓங்காதவாறு அணுத்தன்மைப்படுத்தும் சகசமலம் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சுருங்கிய நிலையில் அறிவு புல்லறிவாய்ப் பிறர் பிறர் தகுதி நோக்காமல் தம்மிற் சிறியராக மதிக்கச் செய்தலின், அதனை “அமைவறிந்திடா ஆணவப் பயலே” என்று குறிக்கின்றார். இந்த அமைவறியாமையால் அனைத்தண்டங்களையும் ஆட்டி வைக்கின்ற பரமன் நம்மையும் ஆட்டி யசைக்கின்றான்; அவனாலன்றி ஓரணுவும் அசைவதில்லை; அவனது அருளாலல்லது நாம் அவனைத் தொழுதலும் ஏத்தலும் அவற்கு அடிமைசெய்தலும் பிறவும் இல்லை என்றற்கு “அகில கோடியும் ஆட்டுகின்றனன் காண், எமை நடத்துவோன்” என்றும், “ஈது உணராமல்” என்றும் உரைக்கின்றார். தொழுதலும் ஏத்தலும் அடியராதலும் மனம் கனிதலும் நம் செயலல்ல என்று வற்புறுத்தற்கு “இன்று நாம் பரன் இணையடி தொழுதோம் கமைவில் ஏத்தினோம் அடியருமானோம் கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்” என்று கூறுகின்றார். கமை - பொறுமை. கனிதல் - அன்பால் மனம் நெகிழ்தல். அறிவை மறைப்பதும் மனத்தை மயக்குவதும் ஆணவத்தின் செயலென வுணர்க. “தூய நினைவைத் தூமொழியைத் தூயதொழிலைத் தோற்றாது தீய நினைவை தீய மொழியை தீய செயலைத் தவத்தோற்றம் ஆய தனியாணவப் பகை” (நந்தி, 106) எனத் தணிகைப் புராணம் சாற்றுவது காண்க. உமையொரு பாகன் என்பது பற்றிச் சிவனை உமையன் என்று இயம்புகின்றார்.
இதனால், ஆணவத்தின் செயற் கொடுமை தெரிவித்தவாறாம். (8)
|