1015. கருமை யாம்அகங் காரமர்க் கடவா
கடைய னேஉனைக் கலந்தத னாலே
அருமை யாகநாம் பாடினோம் கல்வி
அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
இருமை இன்பமும் பெற்றனம் என்றே
எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
உரை: கருமைப் பண்புடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே, உன்னோடு கலப்புற்றமையால், “நாம் அருமையாகப் பாடுகிறோம்; கல்வியும் முற்றக் கற்றுள்ளோம்; திருவருளையும் பெற்று விட்டோம்; இருமைக்குரிய இன்பமும் பெற்றுள்ளோம் என்று என்னை நானே வியந்து இழிவுற்றே னென அறிக; ஒருமைநலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபெருமானது திருவருளாகிய ஞான வாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இதனை மெய்யாக உணர்வாயாக, எ.று.
அகங்காரம் என்ற வடசொல் பல பொருளுடையது. மன முதலிய கரணங்கள் நான்கனுள் ஒன்றுக்காகும்போது உணர்ந்தவற்றை நான் கண்டேன், எனதுணர்வு எனத் தனதாக்கிக் கொள்வதைக் குறிக்கும் வினை, வினைமுதல், கருவி என்ற தொழில் முதனிலை எட்டனுள் வினை முதலாம் நிலைமைக்காகும்போது அகப்பற்றைக் குறிக்கும். “யான் என தென்றவரவரைக் கூத்தாடச் செய்வது” இது. நான் கண்டேன்; நான் செய்தேன் எனவரும் தன்முனைப்பும் அகங்காரம் எனப்படும். இதனைத் தற்போதம் என்றலுமுண்டு. அருணந்தி சிவனார், “யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் கோணை” (சிவ. சித் X, 2) யுணர்வு என்பர். வாழ்வாங்கு வாழுமிடத்துச் செய்வன செய்தற்கும் பெறுவன பெறுதற்கும் யான் எனது என்னும் தன்னுண்மை இன்றியமை யாதாயினும், பெரும்பாலும் இவ்வகங்காரம் இயற்கை நல்லறிவைச்செருக்கால் மறைத்து இருள் செய்தலின், “கருமையாம் அகங்காரம்” என்று விதக்கின்றார். மேலும் இதனை “வெண்மைசேர் அகங்காரமாம் வீணா” என வரும் பாட்டில் குறித்தலால், இங்கே “கருமையாம் அகங்கார மற்கடவா” என்றும் கூறுகின்றார். இது “இனஞ்சுட்டிய பண்புகொள் பெயர்” என்று கொள்க. மிக்கவிடத்து மனத்தைத் துள்ளித் தவிக்கச் செய்தலால் “அகங்கார மென்னும் மற்கடவா கடையனே” என வைகின்றார். அகங்காரம் செருக்காய் மாறித் தன்னையே வியந்து தன்பால் நிகழும் குற்றங்களைத் தானறியாவாறு மறைத்துக் கீழ்மை யுறுவித்தலால் “அருமையாக நாம் பாடினோம், கல்வியற வறிந்தனம் அருளையும் அடைந்தோம், இருமை யின்பமும் பெற்றனம் என்றே எனைமதித்து நான் இழிவடைந்தனன்” என்றும், இதற்கேது “உனைக் கலந்தது” என்றும் எடுத்துரைக்கின்றார். இம்மையிலும் மறுமையிலும் பெறலாகும் இன்பத்தை “இருமை யின்பம்” எனக் குறிக்கின்றார். பல்வகை வளங்களும் நிறைந்து வேறுபதி நாடாதவாறு வாழ்வார் மனத்தை ஒற்றிப் பதியொன்றையே காதலித் துறைவிப்பது பற்றி “ஒருமையொற்றியூர்” எனப் புகழ்கின்றார். நாடா வளமுடைமை நாட்டுக்கும் ஊர்க்கும் தனிச்சிறப்பாகத் திருவள்ளுவரும் சேரர் இளங்கோவும் உரைக்கின்றனர்.
இதனால், அகங்காரமாகிய குற்றத்தின் இயல்பு கூறியவாறாம். (9)
|