1016.

     வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
          விடுவி டென்றனை வித்தகம் உணராய்
     தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
          தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
     அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
          அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
     உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
          உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

உரை:

     வெண்மை பொருந்திய அகங்காரமாகிய வீணனே என்னை முற்பட விடுக என்று வற்புறுத்துகின்றாய். உனது அறிவின் புன்மையை உணர்ந்தாயில்லை. பற்று வீடு என்ற இரண்டினுள் வீட்டு நெறிக்கண் தண்மையில்லை; பற்றாய உலகியல் நெறிக்கே அது உண்டெனத் தெளிந்து என்னை அதன்கண் வீழ்த்துவது தக்கதாம் என நினைத்துக் கொண்டாய்; எனக்கு அருகிலும் நில்லாதே; தூரத்தே சென்று கெடுக; என்னொடு மாறுபட்டு எதிரே நிற்பாயாயின், திருமால் முதலிய தேவர்கள் பரவும் மெய்ம்மை சான்ற ஒற்றியூர்ச் சிவபெருமானுடைய அருளாகிய வாளால் உன்னைத் துண்டுபட வெட்டி வீழ்த்துவேன்; இஃது உண்மையென உணர்க. எ.று.

     வெண்மை - புல்லறிவு. வெண்மை சேர்ந்த அகங்காரம், தற்போதமாகும்; தான் கண்டதே உண்மையெனக் கொண்டு ஒழுகும் தன்முனைப்பு. தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் கலந்து தெளியும் நல்லறிவின்மையின், “அகங்காரமாம் வீணா” என்றும், அத்தன்முனைப்பு, எத்துறையிலும் முற்செய விரைதலால் “விடு விடு என்றனை” என்றும், தற்போதத்தின் புன்மைத்தன்மை யுணராமை எடுத்துக் காட்டற்கு “வித்தகம் உணராய்” என்றும் உரைக்கின்றார். குறிப்பு மொழியாய் மறுதலைப் பொருளில் வந்தது. உலகியல் நெறியைப் பந்தநெறியென்றும் ஞானநெறியை வீட்டுநெறியென்றும் சமய நூல்கள் கூறும். அவற்றுள் உலகியல் நெறியை வற்புறுத்தற்கு வீட்டு நெறிக்கண் செயப்படாத அருளாட்சியுண்டு; செயற்பட்டு அருட்பணி செய்து உயிர்கட்குத் தண்ணிய நிழல் தரும் வாய்ப்பு உலகியற் பற்று நெறிக்கே யுண்டெனத் தற்போதம் உரைக்குமாறு புலப்படத் “தண்மையின்று இதற்கு (உள்ளது) இது எனத் துணிந்து” என்றும், அது கேட்டுச் சிலர் இசைவது தோன்ற “என்தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்” என்றும் இயம்புகின்றார். அது முடிவில் அருள் நெறியைச் சிதைத்தும் பத்தி நெறிக்கும் தீது செய்யுமாதலின், “அண்மை நின்றிடேல்” எனவும், “சேய்மை சென்றழி நீ” எனவும் வெறுத் துரைக்கின்றார்.

     இதனால், தன்முனைப்பென்னும் அகங்காரம் அருள் வளர்க்கும் அறநெறிக்கும் பத்திநெறிக்கும் தீது செய்யும் குற்றமாதல் விளக்கியவாறு .

     (10)