40. அவலத் தழுங்குதல்

திருவொற்றியூர்

    திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் பெருமானைச் “சென்று வாழ்த்துதி” என்று நெஞ்சினை ஒருப்படுத்தின வடலூர் அடிகள், பிறந்து வளர்ந்து மொழி பகர்ந்து கல்வி பயின்று பலரொடு கூடி வாழ்ந்த அந்த நாட்களில் தோன்றாத இந்த ஆர்வம் இப்பொழுது தோன்றித் தம்மை மிக்கதோர் அவலத்தில் அழுத்துவதை உணர்கின்றார். சிவ நினைவு எழும்போதும் சிவவழிபாடு செய்யும்போதும் தாம் செய்த தவறுகள் பலவும் நெஞ்சின்கண் எழுகின்றன. தவற்றின் கொடுமைகள் மிக்குத் தோன்றும்போது இறைவன் திருவருள் எய்துதல் அரிதெனும் உணர்வு தோன்றி ஒருபால் அலைக்கிறது. துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் தீர் துளிக்கத் துயரத்தில் அழுந்துகிறார். செயல் திறம் கலங்கி அழுங்குகிறார். அழுங்குதல், செயல் செய்யா தொழிவதன்று; பையவே செயலுறுதல்.

    அவலத்து அழுங்கலாவது, துயர மிகுந்து மெய்வலி சிதைந்து செய்வினைக்கண் அழுங்கும் செயலினராதல்; “செலவிடை யழுங்கல் செல்லாமையன்று” என்ற நூற்பாவின் கருத்தை யோர்க.

1017.

     ஊதி யம்பெறா ஒதியனேன் மதிபோய்
          உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
     வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
          வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
     ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
          அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
     தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
          திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

உரை:

     புகழ்மிக்க திருவொற்றியூரில் உள்ள தியாகப்பெருமானே, வன்மையாகிய ஊதியம் பெறாத ஒதிமரத்தை யொத்தவனாகிய யான் அறிவிழந்து வருந்தும் பாவியாகி, உண்மை சிறிதும் உணராதவனாக வுள்ளேன்; வாதிக்கத்தக்கவற்றை, யுரைக்கும் வஞ்சகருடன் கூடி வாய் குற்றப்படும்படியாக வன்சொற்களைப் பேசி ஆதி யெம்பெருமானாகிய உன்னை மறந்தொழிந்தேன்; உன்பால் அன்பில்லாத எனது முரட்டுத் தன்மையை நினைத்தால் உயிர்கட்குத் தீமை புரியும் விடமும் நிலை கலங்கும், எ.று.

     பல்வகை வளங்களால் புகழ் பரப்பி விளங்குவது தோன்றத் “திகழும் ஒற்றியூர்” என்றும், தியாகப்பெருமான் என்று பெயரும் மாணிக்கமணி போலும் செந்நிறமும் உடைமை பற்றித் “தியாக மாமணி” என்றும் சிறப்பித்துரைக்கின்றார். ஒதி - ஒதியென்னும் மரம்; வயிரமாகிய அகக்காழ் கொண்ட வலியுடைய மரவகை யன்று; ஒதி பருத்தாலும் பயன்படாது என்பது உலகுரை. அதுபற்றியே “ஊதியம் பெறா ஒதி” என்றும், அதுபோல் அறிவு வலியின்மை புலப்பட, “ஒதியனேன்” என்றும் தம்மைத் தாமே பழித்துரைக்கின்றார். மதியுடையோர் நலம் பெற்று இனிதிருத்தலும், அஃது இல்லோர் துன்புற்று உழத்தலும் இயல்பாதலால், “மதிபோய் உழலும் பாவியேன்” எனக் கூறுகின்றார். மதியிழந்து உழலுதற்குக் காரணம் பாவம் என்றற்குப் “பாவியேன்” எனவும், பாவச் செயற்குத் துணை பொய்ம்மையாதலின், அதுவும் தம்பால் உடனிருத்தலை மறுதலை வாய்பாட்டால் “உண்மை யொன்றறியேன்” எனவும் உரைக்கின்றார். ஒன்று, சிறிதும் என்னும் பொருட்டு, உள்ளமெல்லாம் பொய்யே நிறைந்தமையின் உள்ளதன் உண்மை யுணரும் திறம் அறவே இலதாயிற் றென்பது விளங்க, “உண்மை ஒன்று அறியேன்” என்பாராயினர். தமது மனநலத்தை யுரைத்த வள்ளற் பெருமான் இனநலத்தையும் உடன் உரைக்கலுற்று “வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி” எனத் தெரிவிக்கின்றார். வன்மைகள் - வன்சொற்கள். “சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார் - (நாமநலூர்) என்று நம்பியாரூரர் உரைப்பதனால் அறியலாம். இனிதீனும் இன்சொல்லை வழங்காமல் வன்சொல் வழங்குவது இழுக்கென்பதுபற்றி, “வாய் இழுக்குற வன்மைகள் பேசி” என்றும், இழுக்காய சொற்களிற் சென்றமையால் விழுமிய பரம்பொருளாகிய உன்னை மறந்தொழிந்தேன் என்பாராய், “ஆதி எம்பெருமான் உனை மறந்தேன்” என்றும் உரைக்கின்றார். மறதிக்கு ஏது யாதாகலாம் என நினைந்து, அன்பின்மை எனத் துணிகின்றார். மனத்தின்கண் அன்பில்வழி மென்மை கெடுவதும், வன்மையிடம் பெறுவதும், அவ்வாற்றால் நினைவும் சொல்லும் செயலும் கொடுமையுற்று உயிர் நின்ற உடற்குருதி முற்றும் நஞ்சாய் விடுவதை யுணர்ந்த வள்ளற்பிரான் “அன்பிலாத என் வன்பினை நினைக்கில் தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும்” என உரைக்கின்றார். அன்பில்லது வன்பு என்றற்கு “அன்பிலாத என் வன்பு” என்றும், தீதல்லது பிறிது செய்வதின்மையின், நஞ்சினைத் “தீதுயியம்பிய நஞ்சம்” என்றும், தமது நெஞ்சத்து வன்மையின் கொடுமைக்கு நஞ்சின் கொடுமையும் நிகராகாது என்றும் விளம்புகிறார்.

     இதனால், மதியின்றி உண்மை யுணர்வு குன்றி வஞ்சரொடு கூடி வன்மை பேசி அன்பிலா வன்புற்றொழுகிய அவல நிலையை எடுத்து மொழிந்து அழுங்குகின்றார் என அறிக.

     (1)