1018. கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: திருவொற்றியூர்த் தியாக மாமணியே, தில்லைப்பதியையுடைய பெருமானே, கல்லினும் கடினமுடைய வலிய நெஞ்சினை யுடைய கொடியனாகிய நான், கீழ் மக்களுடன் கூடி நாடோறும் மற்போர் போலும் சொற்போர் செய்து நாவுலர்ந்து வருந்துகின்ற என் துன்மார்க்கத்தை நினைத்துப் பார்க்கில், மனை வரம்பு மீறித் திரியும் என்மேல் எனக்கே மாறுபாடும் வெகுளியும் உண்டாகினவென்றால், உனது திருவுளத்துக்கு எத்துணை வெறுப்புண்டாகுமோ, அறியேன். எ.று.
திருவொற்றியூர்க்கண் தியாகப் பெருமானாய்த் திகழ்பவன் தில்லையம்பலவனாய்த் திகழ்வது முண்மையின், “தில்லையாய்” எனச் சொல்லுகின்றார். உலகில் வாழும் மக்கட்குத்தான் ஒருவன் உள்ளத்தின் இயல்புணர்தல் இயலாதென்ப; எனவே, மக்களின் மேம்பட்ட தெய்வங்கட்கு இயலும் என்று திருவள்ளுவர் முதலியோர் கூறுவர். வேறு சிலர் இறைவனை யல்லது ஒருவர் மனவியல்பறிபவர் பிறர் இலர் என்பர். எல்லாம் வல்ல சிவபரம்பொருளை யல்லது பிற தெய்வங்களையும் பொருளாகக் கொள்ளாதவர் வடலூர் வள்ளல். அவ்விறைவன் அவரவர் நெஞ்சினும் உறைகின்றானாகலின், அந்நெஞ்சின் தூய்மையை அவன் நன்கு அறிவான்; அவன்பால் முறையிடுமிடத்து நெஞ்சிலுள்ள குற்றங்களை மறைக்க முடியாதாகலின், தமது நெஞ்சின் கொடுமையை யுணர்ந்த வள்ளற்பிரான், “கல் இகந்த வன்னெஞ்சகக் கொடியேன்” என்று எடுத்துரைக்கின்றார். இகத்தல், ஈண்டு உறழ்ச்சி மேற்று, கயவென்னும் தமிழ்ச்சொல் பெருமையை உணர்த்துவது; ஒருவன் குற்றம் மிகச்செய்து கீழ்ப்பட்ட வழி அவனைக் கயவன் என்றும், அறிவு ஆண்மைகளால் மிக்குப் பெரியனாகிய போது அவனைக் கயமன் என்றும் கூறுவர். கீழ்மை யாவன செய்து பெரிதும் கீழ்ப்பட்டவன் எனத் தம்மை இழித்தல் வேண்டிக் “கயவர் தங்களுட் கலந்து” என்று இயம்புகின்றார். தமக்கு இனமாயினார் கயவர்; அவரது கயமைத்தன்மையிற் கிடந்து நாடோறும் யாவரோடும் சொற்போரும் கலகமும் விளைத்துக் கெடுகின்றேன் என்பாராய், “நாடோறும் மல் இகந்த வாய் வாதம் இட்டு உலறி” என்று உரைக்கின்றார். உலறுதல், ஈண்டுச் சீர்குலைதல், வாய்ப்போர் செய்வோர் நாளடைவில் உடல் வலிகுன்றி எளியராலும் இகழ்ந்து எள்ளப்படுவது பற்றி வருந்துவதும், வருந்தினும் வாய் சோராது கண்டாரை வம்புக்கிழுப்பதும் நினைந்து, “வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில்” என்று தன்னை நொந்து கூறுகின்றார். இல்லுறையும் நல்லறத்தார்க்குச் சுற்றம் தழுவி வாழும் அறம் கெடுதலால், தம்மை இல்லிகந்தவனாகக் கருதி மாறுபட்டு உரைக்கலுற்று, “இல்லிகந்த என் மீது” என்றும், தம்பால் தமக்கிருக்கும் அருவருப்பை “எனக்கேதான் இகலும் கோபமும் இருக்கின்றது” எனவும் இயம்புகின்றார். இருக்கின்றது என்ற ஒருமை வினையைப் பிரித்துத் தனித்தனியே கூட்டுக. துன்மார்க்கம் - தவறான நெறி, வடசொல். துன்மார்க்கத்துக்குரிய எண்ணமும் சொல்லும் செயலும் இயலுதற்குரிய கருவிகள் பலவும் இறைவன் அளித்தவையாதலால், அவ்வியல்புபற்றி அப் பெருமான் திருவுள்ளம் அறிதல் அரிதென்பது விளங்க, “உன்றன் திரு வுள்ளத்துக்கு என்னாமோ” என்று கேட்கின்றார்.
இதனால், இனம் தூய்மையின்றிச் சொற்போரிட்டு, நாளும் அவலித்து அழுங்கும் திறம் கூறியவாறு. (2)
|