1019. கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
செய்த வத்திரு மடந்தையர் நடனம்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: இனிது செய்யப்படும் தவச்செல்வ மகளிரின் நடனங்கள் விளக்கமுறும் திருவொற்றியூர்த் தியாகமணியே, வஞ்சனையாளர் கூடிக் களிக்கும் களியாட்டத்தில் பலகாலம் போக்கினேனாகலின், வேறு ஆதரவு இல்லேனாயினேன்; தவம்புரியும் நல்லவர்களின் கூறுபாட்டை ஒருசிறிதும் அறிந்திலேன்; நின் திருவருளைப் பெறுதற்கு யான் செய்யக்கடவது என்னையோ? அத் திருவருள் எனக்கு எய்த வேண்டுமாயின், நீ திருவுள்ளம் இரங்கி ஈந்தருளினால் தான் எனக்கு உண்டாகும்; ஈயாயாயின் இல்லையாம். எ.று.
திருவொற்றியூர்க்கண் தேவரடியார் பலர் வாழ்ந்து அகமார்க்கக் கூத்து, சாந்தி கூத்து முதலிய நடனவகைகளைப் புரிந்தனர் என்பதை அவ்வூர்க் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. திருக்கோயில் தேவதேவர் திருமுன் திருநடம் புரிவதைச் செய்தவமாகக் கொண்டிருந்தமையின் அவர்களைச் “செய்தவத் திருமடந்தையர்” என்று சிறப்பிக்கின்றார். (விண்ணப்பக் கலிவெண்பா: திருவொற்றியூர்க் கல்வெட்டுக்கள் காண்க.) பின்னர் அம்மகளிர் கண்ணற்ற விலை மடந்தையராகி, நன்னிலை யிழந்தமையால் தமிழ்நாட்டு அரசுச் சட்டவாயிலாக அத்தகைய மகளிர் உளராதற்கு இடமே இல்லையாகச் செய்துவிட்டது. கைதவத்தர் - வஞ்சனையாளர். பலராய்க் கூடி அவர்கள் மகிழும்களியாட்டத்தைக் “கைதவத்தர் தம்களிப்பு” என்றும், அவரோடு கூடி வீண் பொழுது போக்கிய செயலை, “காலம் போக்கினேன்” என்றும், களியாட்டமாதலின் காலத்தின் பயனில் போக்கு உணரப்படா தாயிற்றென்றும் கூறுகின்றார். களைகண் - துன்பத்தில் துணையாகுபவர். நாளும் கைதவம் (வஞ்சனை) புரியும் கீழ்மக்களொடு கூடிக் களித்துக் கிடந்தமை கண்டு, தூய நண்பர் எவரும் உளராகாமையின், திக்கற்ற நிலைமையைத் தெரிவிப்பாராய், “களைகண்மற்று இல்லேன்” என்று அவலமுறுகின்றார். உள்ள நண்பர் வஞ்சனையாளராயினமையின் நற்றவம் புரியும் மேலோர் குணம் செயற் கூறுகளைத் தெரிந்துணரும் திறம் இழந்தமை நினைந்து, “செய்தவத்தர் திறம் சிறிதுணரேன்” என்றும், தவம் புரிந்தாலன்றி நல்லறிவுச் செல்வம் எய்தாது; தவமும் திருவருட்டவமுடையார்க் கன்றிக் கைகூடாதெனச் சான்றோர் உரைக்கின்றனர்; திருவருளைப் பெறல் வேண்டுமெனின், அதற்குரிய செயல்வகை எனக்குத் தெரிய வில்லை என்பாராய், “செய்வது என்னை நின் திருவருள் பெறவே” என்று வேண்டுகின்றார். திருவருள் என்பது சிவபெருமான் அருள் கூர்ந்து நல்கும் நன் ஞானம்; அதனை அவன் அருளாலன்றி எவரும் பெறலாகாது; இந்த உண்மை நினைந்தே, “அத்திருவருள் எய்த எனக்கு இரங்கி ஈயில் உண்டு; இன்றெனில் இன்று” என மொழிகின்றார்: திருவருள் ஞானத்தாலன்றிக் கைதவத்தர் சூழலிற் போந்து படிந்த அஞ்ஞான விருள் அகலாது என்பதாம்.
இதனால், கைதவத்தர் நட்பால் உளதாய அவலத்தில் தோய்ந்து திருவருளை நினைந்து அழுங்கியவாறு காணலாம். (3)
|