1020. அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
அன்னை என்பர்கள் அழவலி இல்லாக்
கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
குற்றம் அன்றது மற்றவள் செயலே
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்
செழுது மாதவி மலர்திசை மணக்கத்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: செழித்தலையுடைய குருக்கத்திப் பூக்கள் திசையெலாம் மணம் கமழ விளங்கும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் தியாகப்பெருமானே, அழுத பிள்ளைக்கே முதலில் பால் தருவாள் தாய் என்று உலகோர் கூறுவர்; அழுதற்கு வலியில்லாத கொழுந்து போன்ற இளங்குழவிக்கும் முதலிற் கொடுப்பாள்; அச்செயல் குற்றம் அன்று; அவட்கு இயல்புடைச் செயலாகும்; பன்முறையும் தொழுது உனது திருவடியைத் துதிக்கின்றோர்க் கென்றே உன் திருவருள் உளது எனினும், துட்டனாகிய என்னையும் நோக்கி நினைந்து அருள் செய்தல் முறையே யாம். எ.று.
அழுகிற பிள்ளைக்கு முதலிற் பால் கொடுப்பது தாயின் தலையாய செயல்; உலகவரும் அதுவே முறையென்று கூறுகின்றனர். இது பொது நெறியாதலால், “அழுத பிள்ளைக்கே பாலுணவளிப்பவள் அன்னை என்பார்கள்” என உரைக்கின்றார். அழுதற்கேற்ற உடல்வலி இல்லாத பச்சிளங் குழந்தைகளும் உண்டு; அவற்றின் நிலையினை நெஞ்சால் நினைந்து முதலில் ஊட்டுவள் தாய்; இதனைக் கருத்திற் கொண்டு, “அழவலியில்லாக் கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பள்” என்று கூறுகின்றார். கொழுது - கொழுந்து; இடைக்குறை. சிறு குழவி என்றவிடத்துச் சிறுமை - பச்சிளமை. அத்தகைய குழந்தைகளின் நிலையைத் தாயின் நன்னெஞ்சம் உணர்த்தும்; மணிவாசகர், “பால் நினைந்தூட்டும் தாய்” எனக் குறிப்பது இங்கே நினைத்தற்பாலது. ஒரு குழவி யழாநிற்க, ஒரு குழவி அழற்கு வலியின்றி வருந்தக் காணும் தாய், வலியற்ற குழவிக்கு முன்னர்ப் பாலுணவளிப்பது குற்றமன்றாதலால், “குற்றம் அன்று அது மற்றவள் செயலே” என்று எடுத்துரைக்கின்றார். தலையாய செயல் வேறின்மையின் வாளாங்குக் கூறினார். இவ்வுலகியல் நிகழ்ச்சியை எடுத்தோதியது, குணஞ் செயல்களால் தம்பால் குற்றம் இருப்பினும் அருள வேண்டும் என்றற்கு “துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயல் ஆம்” என்று சொல்லி, நாளும் இறைவனைத் தொழுது வணங்குவோருக்கே அவன் திருவருள் உரிய தென்பதைத் தெளிந்துள்ளமை போன்ற, “தொழுது நின்னடி துதிக்கின்றோர்க்கு எனவே” என உரைக்கின்றார்.
இதனால், குணம் செயல் வேறுபட்டுத் துட்டனான அவல நிலையை, யுணர்ந்து தனக்கும் அருள் செய்தல் வேண்டுமென இறைஞ்சுவது திருவருட்காக அழுங்கலாயிற்று. (4)
|