1021. உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: மனம் மகிழும்படியாகப் பொன்மலையை வெள்ளி போலும் எனக் கண்டார் வியக்கும்படி இனிதின் வில்லாக வளைத்து மும்மதிலை எரித்தவனே; தெளிந்த ஞானிகள் புகழ்ந்து அரகர என்று போற்ற விளங்கும் திருவொற்றியூர்ப் பெருமானே, செய்த குற்றங்களை நினைந்து வென்று அலறி நின்று பலபடியாலும் ஏத்தி இளகி உருகுதல் இல்லாத மனமுடையவன் யான் என்றாலும், வள்ளன்மையுடைய நின்னை யான் மறக்கமாட்டேன்; வேறு தேவர்களை நினைக்கவும் மாட்டேன். எ.று.
உள்ளுதல் - நினைவிற் கோடல்; மறந்தது நினைத்தலாம். ஒரு காலத்தில் மனத்தின்கட் புதைந்து மறையினும் ஒருகால் எழுந்து நெஞ்சை வருத்துதலின், “உள்ளி ஓஎன அலறி” என்று புலம்புகின்றார். உள்ளியவிடத்துச் செய்த குற்றத்தின் கொடுமை மிக்குத் தோன்றுதல் விளங்க, “உள்ளி” என்பதோடு நில்லாமல் “ஓஎன அலறி நின்று” என உரைக்கின்றார். கொடுமை மிக்குத் தோன்றியவிடத்து உணர்வுடையோர் நெஞ்சுருகி வருந்துவர்; யான் அவ்வுணர்வும் உள்ளமும் உடையனல்லேன் என்று தெரிவிப்பாராய், “உருகி நெக்கிலா உளத்தன்யான்” என்று இயம்புகின்றார். இத்தகைய இயல்பு என்பால் இருப்பினும் அவ்வப்போது எனக்கு நெஞ்சம் அருட்பெருமானாகிய உன்னை நினைந்துருகுவதுண்டென்பாராய், “வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன்” என்றும், நின்னிடம் பெற விரும்பும் அருள்நலத்தைப் பிற தெய்வங்களைப் பரவிப் பெறலாம் என்று எண்ணி அவர்களை நினைந்ததும் வழிபட்டதும் இல்லை என்பாராய், “மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்” என்றும் இசைக்கின்றார். மதித்தல், ஈண்டு நினைத்தல் மேற்று. பொன்னினும் வெள்ளி மெல்லிதாகலின், பொன்மலை வில்லாக வளையக் கண்டவர் வெள்ளியோ என்று வியந்தமை தோன்ற, “வெள்ளி ஓஎன பொன்மகிழ் சிறக்க” எனப் புகல்கின்றார். பொன் - பொன் மலை. பொன் வெள்ளியோ என மகிழ்சிறக்க விரைந்து வில்வளைத்து மும்மதில் எரித்தோய் என இயைத்து, பொன்மலை வெள்ளிமலையோ என்று கண்டோர் வியந்து மனம் மகிழுமாறு விரைவில் வில்லாக வளைத்து மும்மதில்களை எரித்தாய் எனப் பொருள் உரைக்க. ஓ, வியப்புப் பொருட்டு. பசுபாச வுணர்வுகளால் கலக்கமுறாது தெளிந்த பதி ஞானிகள் ஒற்றியூர்ப்பெருமானை, “அரகர” என்றும், “தியாகமாமணியே” என்றும் பரவிப் பணிதல் புலப்பட, “தெள்ளியோர் புகழ்ந் தரதர என்னத் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே” எனப் புகழ்ந்துரைக்கின்றார்.
இதனால், கொடுமையை யுள்ளி உருகி நெக்கிலா உளத்தன் யான் என அவலித்தும், உனை மறக்கவும் மாட்டேன், மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் என அழுங்கியும் வருந்துமாறு காணலாம். (5)
|