1022.

     விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
          வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
     மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
          மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
     ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
          உள்ளம் எப்படி அப்படி அறியேன்
     திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
          திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

உரை:

     அழகிய தோள்களாகிய மலையையுடைய மன்னர்களும் பெரிய தவமுடையவர்களும் வணங்க விளங்கும் திருவொற்றியூர்த் தியாகப்பெருமானே, திருமால் பிரமன் ஆகியோர் பதங்களில் ஆசை கொள்ளேன்; என்னைப் பன்முறை வேண்டி அப் பதவிகளை ஏற்க எனப் பணித்தாலும் ஏற்கமாட்டேன்; கொம்புடைய யானையின் தோலையுடையவனே, உன்னுடைய திருவடியே செல்வமாகவுடைய பெரியோர்கள் மதிக்கும் நல்வாழ்வையே மனத்திற் கொண்டுள்ளேன்; உலகியற்கு ஒவ்வாத இவை என்னள வினவாகும்; இனி உன் திருவுள்ளம் எப்படியோ? அதனை அறியேன். எ.று.

     இடைக்காலச் சோழ பாண்டிய வேந்தர்களும் நிரஞ்சன குரவர் முதலிய மாதவர்களும் இங்கே இருந்து ஒற்றிப்பெருமானை வழிபட்ட திறத்தைக் கல்வெட்டுக்கள் எடுத்துரைத்தலின், “திருப்புயாசல மன்னர் மாதவத்தோர் திகழும் வொற்றியூர்” என்று சிறப்பிக்கின்றார். இந்திரன் முதலிய தேவர் பதவிகளில் திருமால் பதமும் பிரமன் பதமும் மிகவுயர்ந்தவை எனப் புராணம் கூறுதலால், அவற்றையே விதந்து, அவற்றில் தமக்கு விருப்பமின்மையை, “விருப்பிலேன் திருமால் அயன் பதவி” எனவும், அத்தேவர்களே நேரிற்போந்து இப்பதவிகளை நீ எடுத்துக்கொள்க எனக் கொடுப்பினும் யான் கொள்ளேன் என்று, தமது பற்றின்மைப் புலப்பட, “வேண்டிக் கொள்க என விளம்பினும் கொள்ளேன்” எனவும் கூறுகின்றார். சிவன் திருவடியுடைமையே செல்வம் என மதிப்பவர் சிவனடியார்; “திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்” (திருமுல்லை வாயில்) என்று நம்பியாரூரரும், “நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறை தவமும், தேடும் பொருளும் பெருந் துணையும் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள் ஆடும் கழலே” (கழறிற். 23) என்று சேக்கிழாரும் கூறுவன காண்க. சிவனது அருள் நிலவும் நல்வாழ்வையே நினைந்தொழுகிய திறத்தை, “உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்” என இசைக்கின்றார். இவ், வவ்விறு சுட்டாய் இவையெனும் பொருள்பட வந்தது. இந்நினைவு நிறைந்த மனநிலை அமைவதன் அருமை பற்றி, “ஒருப்படாத இவ் என்னளவு” என்றும், இது நன்கு நிலைபெற நிலவுவதாயின் நின் திருவருள் துணையாதல் வேண்டும் என்பாராய், “இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன்” என்றும் முறையிடுகின்றார். ஒருப்படாமை - உலகியற்கு ஒத்தியலாமை. இவ் வுணர்வுகள் என் அறிவளவில் யான் கொண்டன; யாவும் நின் திருவுள்ளப்படி இயல்வனவாதலின், அதன் நிலையறியேன் என்றற்கு இங்ஙனம் கூறினார் என்றுமாம்.

     இதனால், அயன் திருமால் முதலியோர் பதவியாசை யின்றிச் சிவனடியார் மதிக்கும் திருவருள் வாழ்வு மேற் சென்ற தமது மனப்போக்கை வள்ளற் பெருமான் தெரிவிப்பது காண்க.

     (6)