1023. நிலையி லாஉல கியல்படும் மனத்தை
நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
அற்ப னேன்திரு அருளடை வேனே
சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
உரை: வில்லை வளைத்து மிக்க நெருப்புக் கணையைத் தொடுத்தவனும், விளக்கமுறும் திருவொற்றியூரில் எழுந்தருளுபவனுமான தியாகப்பெருமானே, நிலையுதல் இல்லாத உலகியற் போகங்களில் அழுந்தும் என் மனத்தை ஒரு நெறிப்பட நிறுத்தினேனில்லை; ஒருவகை ஒழுக்கமுறையும் அறியேன்; விலை கூறமுடியாத மணிபோன்ற பெருமானே, உன்னை வாயார வாழ்த்தி வீடுபேற்றுக்குரிய ஞான நெறியில் என்னைக் கூட்டுக என்று உன்னிடம் விளம்புகின்றிலேன்; கடலில் சிக்கி அலைப்புண்டெழும் சிறு துரும்பு போலத் துன்பத்தால் அலைந்தேன்; அற்பனாகிய யான் திருவருளை யடைவேனா கூறுக. எ.று.
பொன்மலையை வில்லாக வளைத்தமையின் அதனைச் “சிலைவில்” என்று கூறுகின்றார். “வளைந்தது வில்லு” (உந்தி) என்று திருவாசகம் உரைக்கின்றது. போர்முகத்து நின்ற சிவபிரான் கையில் ஓர் அம்பு ஏந்தி நின்றமையின், “கணை தொடுத்தவனே” என்றும், விழித்து நோக்கிய சிவனது நெற்றிக்கண்ணில் தீத்தோன்றிப் பார்க்கப்பட்ட முப்புரத்தை எரித்துச் சாம்பராக்கினமையின், “ஆர்அழல் கணை தொடுத்தவனே” என்றும் உரைக்கின்றார். “ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற” என்று மணிவாசகர் மொழிகின்றார். உலகில் உயிரில் பொருள் அனைத்தும் நிலையின்றி மாய்வனவாதலால் “நிலையிலா உலகியல்” என்று இசைக்கின்றார். “நில்லாத உலகியல்பு கண்டு நிலையிலா வாழ்க்கை யல்லேன் என்று அறத்துணிந்து” (நாவுக். புரா) என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். நிலையில் பொருள்தரும் இன்பமும் நிலையில்லதாயினும் மனம் அதனைப் பிறழ நினைந்து அதன்கட் படிந்து மயங்குவதுபற்றி “உலகியற் படும் மனத்தை” என்றும், உண்மை நெறிக்கண் நிறுத்த முயலுமிடத்து நில்லாது பெயர்ந்து பெயர்ந்து ஓடுவ துணர்ந்து, “நிறுத்திலேன்” என்றும், நிறுத்தற்குரிய ஒழுக்க நெறிகளையும் உணரேன் என்றற்கு “ஒரு நியமமும் அறியேன்” என்றும் உரைக்கின்றார். உனது உண்மை யுணர்ந்து வாழ்த்தி வணங்குபவனாயினும், வீடு பேற்றுணர்விலேன் என்பாராய், “வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்” என மொழிகின்றார். கடல் அலைப்பட்ட துரும்பு போல வாழ்க்கைத் துன்பத்திற் பட்டு அலமருகின்றேன் என்றற்கு, “அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்” என்றும், சிவஞான வன்மையின்மை தேர்ந்து தன்னை
“அற்பனேன்” என்றும், ஞானமில்வழித் திருவருள் எய்துதல் இல்லாமை பற்றி, திருவருள் அடைவேனே” என்றும் உரைக்கின்றார். ஏகாரம், எதிர்மறை.
இதனால், மனத்தை நெறிப்பட நிறுத்த முடியாமைக்கும் வீட்டு நெறி அறியாமைக்கும் பிறவற்றிற்கும் அவலித்து அலையிற்பட்ட துரும்பென அலைந்தேன் அற்பனேன் என்று அழுங்கிய திறத்தை அறியலாம். (7)
|