1024.

     காயம் என்பதா காயம்என் றறியேன்
          கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
     சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
          தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
     தூய நின்அடி யவருடன் கூடித்
          தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
     தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
          திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

உரை:

     விளங்குகின்ற ஒற்றியூர்த் தியாகப்பெருமானே, காயம் என்று சொல்லப்படும் என் உடம்பு ஒரு காற்றுப்பை யென்பதை முன்பெல்லாம் அறியேன்; ஆகாயமெனத் தெரிந்ததும் மனம் கலக்க முற்றேன்; அறிவு தந்து அதனைத் தீர்க்கக் களைகணாவார் ஒருவரும் இல்லேனாயினேன்; தூரத்தில் உளதாகத் தோன்றும் நன்னெறியை அணிமையில் நிறுத்திக் காட்டும் நினது தெய்வத் திருவருளின் திறம் சிறிதும் அடைந்திலேன்; தூயனாகிய நின்னுடைய அடியவரோடு கூடித் தொண்டு புரிவது சுகம் தருவதாம் என்பதைத் தெளிய வுணர்கிலேன்; தீயவனாகிய என்னை நீ ஆட்கொள்வது எவ்வண்ணமோ, அறியேன் எ.று.

     காயம் - உடம்பு. ஒடுங்கிய நிலையில் பூத தன்மாத்திரை யைந்துக்கும் நிலைக்களமாகிய ஆகாயம்போல, நில முதலிய ஐந்தும் கூடிய பரிணாம நிலை காயம் என நிலவுதல் பற்றி, “காயம் என்பது ஆகாயம் என்று அறியேன்” என உரைக்கின்றார். பூதங்களாகக் கூறு செய்து நோக்குமிடத்து ஆகாயம்போல வெற்றிடத்து வெறும் பொருளாதல் காண்கின்ற போது அறிவும் மனமும் அடையக் கலக்கமுறுதலால், “கலங்கினேன்” என்றும், கலங்கியபோது அறிவுரை நல்கி ஆதரவு செய்யும் அருளாளர் பெறப்படாமை தோன்ற, “ஒரு களைகணும் இல்லேன்” என்றும் இசைக்கின்றார். ஞான நூல்கள் காட்டும் சிவநெறி சேய்மைக் கண்ணே திகழ்தல் கண்டு “சேய நன்னெறி” எனவும், அதனைத் திருவருட்கண் கொண்டு நோக்குவார்க்கு மிக்க அணிமையில் விளங்கக் காணப்படுமாறு புலப்பட, “அணித்து எனக்காட்டும் நின் தெய்வ அருள் திறம்” எனவும், அவ்வருட் பார்வை எய்தாமைபற்றி, “திருவருள் அடையேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். திருவருள் ஞானம் பெற்றோர், அது வழுவாமைப்பொருட்டு அடியாரொடு கூடிச் சிவத்தொண்டு புரிவது நலம் தருவது என உணர்ந்தும், அது செய்யாமை நினைந்து வருந்தி, “தூயநின் அடியவருடன் கூடித் தொழும்பு செய்வதே சுகம் எனத் துணியேன்” என்றும், இவ்வாற்றால் தாம் தீயது செய்து வீழ்ந்தமை தோன்ற “தீயனேன்” என்றும், தீது நீக்கிக் குற்றம் பொறுத்து ஆட்கொள்ளும் பேரரருள் நின்பால் உளதாக வேண்டுமென விண்ணப்பிக்கலுற்று, “ஆள்வ தெவ்வாறோ” என்றும் விரித்துரைத்து இனைகின்றார்.

     இதனால், காயத்தின் பொருண்மை யுணர்ந்து அவல மெய்தியதும் அருள் நெறி நில்லாது வழுவித் தீயனானது சொல்லி அழுங்குவதும் காணலாம்.

     (8)