1026.

     அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
          ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
     கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
          கடன்உ னக்கலால் கண்டிலேன் ஐயா
     பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
          புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
     செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
          திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

உரை:

     நீறணிந்த திருமேனியை யுடைய எங்கள் புண்ணிய முதலே, புன்னை மலர் போலும் பொன்னிறமுடைய சடையுடைய உயர்ந்தவர் தலைவ, குற்றமுடைய கீழ்மக்கள் தேடவொண்ணாத தெய்வ ஒளி மயமானவனே, திருவொற்றியூர்த் தியாகப்பெருமானே, அடியார்க்குரிய அமைதி யுடையேனல்லேனாயினும், அடியனாகிய யான், உனக்கு உண்மை யடியனாக வேண்டி நிற்கின்றேன்; கடியத் தக்கவனாகிய யான் இம்மையிலும் செய்த பிழை யனைத்தையும் பொறுப்பது உனக்குக் கடனாவதன்றி வேறு ஒன்றும் காணேன்; ஐயனே, பொறுத்தருள்க. எ.று.

     பொடியெனப் பொதுப்பட மொழியினும் வெண்பொடியாகிய திருநீறே கொள்ளப்படும். “பொடி யிலங்கும் திருமேனியாளர்” (காழி) என்றும், “பொடிகொள் மேனி வெண்ணூலினர்” (கடிக்குளம்) என்றும் ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. புண்ணியத்தின் முதற்பயனாக விளங்குபவனாதலால் சிவனை, “புண்ணிய முதல்” என்று இசைக்கின்றார். புன்னைப்பூ பொன்னிறத்த தாதலால் “புன்னை யஞ்சடை” என்றும், சடையுடைய முனிவரர் அனைவர்க்கும் தலைவர் என்பது பற்றிப் “புங்கவர் ஏறே” என்றும் புகழ்கின்றார். செடி - குற்றம். குற்றமுடைய அறிவு ஞானவொளி குன்றுதலின் சிவனைக் காணமாட்டாமை விளங்க “செடியர்தேடுறாத் திவ்விய ஒளியே” என்று தெரிவிக்கின்றார். சிவனடியார்க்குரிய ஞானமும் ஒழுக்கமும் இன்மை கூறுவாராய், “அடியனே னலன் எனினும்” என்றும், அடியாரொடு கூடியும், அடிஞானமுணர்த்தும் அரிய நூல்களைப் பயின்றும், அடியடைதற்குரிய அரிய ஒழுக்கங்களில் நின்றும் சிவவழிபாடு புரிவது புலப்பட, “அடியேனாக நின்றனன்” என்றும் தெரிவிக்கின்றார். முற்பிறவியினும் இப்பிறவியினும் வெறுத்து நீக்கத்தக்க குற்றம் புரிந்துளேன் என்பாராய், “அம்மை யிம்மையினும் கடியனேன்” என்றும், பேரருட் பெரும்பொருளாகிய இறைவன் அக் குற்றங்கட்கு வருந்தும் என்பால் இரக்கமுற்றுப் பொறுப்பதல்லது வேறு செயலின்மை தோன்ற, “பிழையைப் பொறுக்கக் கடன் உனக்கு” என்றும், வேறு எத்தகைய தெய்வமும் பொறுத்தாற்றும் சிறப்புடையவல்ல என்று கண்டுளேன் என விண்ணப்பிப்பாராய், “பொறுக்கக் கடன் உனக்கலால் கண்டிலன் ஐயா” என்றும் உரைக்கின்றார். ஐயா என்பதன் ஆற்றலால், ஆகவே எனைப் பொறுத்தருள்க என்பது பெறப்படுகிறது.

     இதனால், அம்மையிலும் இம்மையிலும் பிழை புரிந்தமை நினைந்து அடியனாகாமை எய்தும் இடர்ப்பாடு கருதி அவலிப்பதும், பிழை பொறுத்தல் வேண்டி அழுங்குவதும் காணலாம்.

     (10)