1028.

     அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
          ஐய நீர்அறி யாததும் அன்றே
     கழுது துன்றிய காட்டகத் தாடும்
          கதியி லீர்எனக் கழறினன் அல்லால்
     பழுது பேசின தொன்றிலை ஒற்றிப்
          பதியில் வாழ்படம் பக்கநா யகரே
     பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     திருவொற்றியூரில் உள்ள படம்பக்க நாயகப்பெருமானே, பன்முறையும் அழுது நெஞ்சம் ஓய்ந்து உம்மையே நினைக்கின்றேன்; ஐயனே, இது நீர் அறியாததன்று; பேய்கள் செறிந்த சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுவதன்றி மேலே பிறத்தலில்லாதவர் என்று கழறிக் கூறியதுண்டே தவிரத் தவறாய சொற்களை யான் பேசியதொன்றும் கிடையாது; வாழ்நாள் கழிகின்றமையின் யான் செய்வ தொன்றறிகிலேன்; பொய் சொல்லுகிறேனெனப் புறக்கணிப்பீராயின் சென்றடைதற்குப் புகலிடம் இல்லை, காண். எ.று.

     நெஞ்சால் நினைந்து அழுதாலன்றிச் சிவனருளைப் பெறலாகாதெனச் சிவநெறிச் சான்றோர் தெளிவாகக் கூறியுள்ளமையின், “அழுது நெஞ்சயர்ந்துமை நினைக்கின்றேன்” என்று கூறுகின்றார். “அழவல்லவர், ஆடியும் பாடி யெழ வல்லவர், எந்தை யடிமேல் விழ வல்லவர் வீழி மிழலை தொழ வல்லவர் நல்லவர் தொண்டே” (வீழி) என ஞானசம்பந்தரும், “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” (சதக) என மாணிக்கவாசகரும் கூறுவது காண்க. அழுவாரையும் தொழுவாரையும் கணக்கெழுதி வைப்பவன் எனச் சான்றோர் உரைத்தலின், “ஐய நீ அறியாதது மன்றே” என்று உரைக்கின்றார். “தொழுது தூமலர் தூவித் துதித்து நின் றழுது காமுற் றரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும் கீழ்க்கணக்கின்னம்ப ரீசனே” (இன்னம்பர்) எனத் திருநாவுக்கரசர் எடுத்தோதுவதறிக. சுந்தரரும், “பழுது நான் உழன்றுள் தடுமாறிப் படுசுழித் தலைப்பட்டன னெந்தாய், அழுது நீயிருந்தென் செய்தி மனனே” (இடைமருது) எனச்சொல்லி யிரங்குவது காணலாம். கழுது - பேய்வகை. உமையம்மையும் தேவரும் முனிவரும் பிறரும் கண்டு இன்புறுமாறு பொன்னம்பலத்தில் ஆடுகின்றானென்றும், நிலம் நீர் முதலாய எட்டுருவினன் என்றும் அன்பர் புகழ்ந்தோதக் கேட்டு, பேய் வகைகள் சூழ இருந்து கை கொட்டிப் பாடியாடச் சுடுகாட்டிலாடுவன் என எடுத்துரைத்து, அப்பெற்றியனாயினும் மேலே பிறத்தல் இல்லாதவன் என்ற பொருளில் கதியிலீர் என்று கழறிக் கூறியதுண்டே யன்றி, குற்றமுண்டாமாறு யாதும் யான் கூறியதில்லை என்பாராய், “கழுது துன்றிய காட்டகத்தாடும் கதியிலீர் எனக் கழறின னல்லால் பழுது பேசின தொன்றிலை” என்று விளம்புகின்றார். “பேய்கள் பாடப் பல பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில் வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடுமாடும் வித்தகன்” (சிரபுரம்) என்று ஞானசம்பந்தர் பாடுவதறிக. படம்பக்கம் - ஒருவகைத் தோற் கருவி. திருவொற்றியூர்த் திருக்கோயிலில் இது சிறப்பாகக் கொட்டப்படுவதால், ஒற்றியூர்த் தியாகப்பெருமானைப் படம்பக்க நாதர் என்று கூறுவர். “பன்னாள் மறை பாடுதிர் பாசூருளீர் படம்பக்கம்கொட்டும் திருவொற்றியூரீர்” (கோத்திட்டை, கோவலூர்) என்று ஒற்றியூரில் தங்கிச் சங்கிலியாரைத் திருமணம் செய்துகொண்ட சுந்தர மூர்த்திகள் உரைப்பது காண்க. இடைக்காலச் சோழ வேந்தருள் இராசகேசரி வன்மனான வீர ராசேந்திரன் காலத்தில் (1063-70) திருவொற்றியூர் ஆலயத்துள் படம்பக்க நாயகர்க்குக் கற்றளி யொன்று தொண்டை மண்டலத்து வீரராசேந்திர வளநாட்டு இடையளநாட்டு மணக்குடியுடையான் பசுபதி திருவரங்க தேவனான இராசேந்திர மூவேந்த வேளான் கட்டினானென்று இக் கோயிற் கல்வெட்டு (232) 1912)க் கூறுகிறது. கழிந்தபொழுது எத்தகைய தவத்தாலும் எய்தலாகாமை பற்றி, “பொழுது போகின்றது என் செய்கேன்” என்று உரைக்கின்றார்.

     இதனால், பழுதொன்றும் பேசினதில்லை யாதலால் கழிகின்ற காலத்தின் அருமை நோக்கித் திருவருள் செய்தல் வேண்டு மென விண்ணப்பித்தவாறு.

     (2)