1029.

     முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
          மூட னேன்தனை முன்வர வழைத்துப்
     பின்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
          பித்தர் என்றுமைப் பேசிட லாமே
     என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
          இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
     புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     புன்னை மலர் போலும் சடையை யுடைய பெருமானே, அழகிய ஒற்றியூரை யுடையவரே, என்னை ஆளாக வுடையவரோ முன்னைப் பிறவியிற் பெரிய தவமாகிய நன்முயற்சி யொன்றும் செய்தில்லாத மூடனாகிய என்னைத் திருமுன் வருவித்து, வந்தபின் வாய்ப்பேச்சு ஒன்றும் பேசுகிறீர் இல்லையாயின் உம்மைப் பித்தேறியவர் என்று பேசலாமன்றோ? இதனால், நான் என்னைப் பழிகூறிக் கொள்கின்றேனே யன்றி உம்மை இகழ்கின்றேனில்லை; என்னைப் பொய்யன் என்று புறக்கணிப்பீராயின் யான் போயடையும் புகலிடம் யாதாம்? கூறுக. எ.று.

     பொன்னிறம் கொண்ட பூவாதலின், புன்னை சடைக்குக் கொன்றை போல் அழகு தருதலால் “புன்னையஞ் சடையீர்” என்று புகழ்கின்றார். “புன்னைப் பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்” (ஐங். 110) என்று சான்றோர் கூறுவது காண்க. “தவமும் தவமுடையார்க் காகும்” (குறள்) என்றலின், “முன்னை மாதவ முயற்சி யொன்றில்லா மூடனேன்” என்று தம்மைக் குறிக்கின்றார். முற்பிறப்பில் தவமாகிய நன்முயற்சி செய்யாமையால் இப்பிறப்பில் மூடனாயினேன் என மொழிகின்றார். முன்னை - முற்பிறப்பு, உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் தவத்துக்கு உருவாதல் பற்றித் தவமென் றொழியாது “மாதவம்” என்று சிறப்பிக்கின்றார். ஒன்று என்பது சிறிது எனப் பொருள் பட நின்றது. இல்லா மூடன் என்பதில் இன்மை, உடைமைக்கு மறுதலை, வருவித்த போதிருந்த மனநினைவு வந்தபின் வாய்ப் பேச்சில்லாதபடி மாறி விட்டமை கண்டு உரைத்தலால், “முன் வரவழைத்துப் பின்னை ஒன்றும் வாய்ப் பேச்சிலீர்” என்றும், இது அடிக்கடி மனம் மாறும் பித்தர் செயலாயிருக்கின்ற தெனற்கு, “பித்தர் என்றுமைப் பேசிடலாமே” என்றும் உரைக்கின்றார். ஆன்ற பெரியோர் திருமுன் அவர் வருவிக்கச் சென்றாலும் குறிப்பு நோக்கி அவிந்தடங்கியிருத்தல் முறையே யன்றிப் பேசவில்லை யென்று குறைபடல் குற்றமாதலை யுணர்ந்து, “என்னை நான் பழித்திடுகின்ற தல்லால் இகழ்கிலேன் உமை” எனவுரைத்து, தனது உரையில் மெய்ம்மை யொளி தோன்றாமை கண்டு பொய்யன் என்று திருவுள்ளம் கொள்வாயாயின் என்பார், “பொய்யன் என்னில்” என்றும், பின்னர் எனக்குப் போக்கிடம் வேறில்லை என்பாராய் “போம்வழி யெதுவோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், குறிப்பு நோக்கி அவிந்தடங்கி யிராது பதறிப் பேசியதை மனங் கொள்ளலாகாது என விண்ணப்பித்தவாறாம்.

     (3)