7.
சீவசாட்சிமாலை
உயிர்களாகிய சீவர்கள் இருந்து
வாழும் உலகு உடல்களாகிய பொருள்களில் வேறற ஒன்றாய்க்
கலந்தும், உயிர்க் குயிராய் உடனாயிருந்தும், வேறாய்
நின்று கண்டும் காட்டியும் முருகப் பெருமான் அருள்
புரிபவனாதலால் அவனைச் சீவசாட்சி என்று மெய்ந்நூல்கள்
விளம்புகின்றன. அதனை அருள் வாழ்வின் தொடக்கத்தேயே
உணர்ந்து கொண்டவராதலால் வள்ளற் பெருமான், சகச
வாழ்வை விதந்து குறிக்கும் இப் பாமாலையைச் சீவசாட்சி
மாலை என்று பெயர் சூட்டித் தொடுக்கின்றார்.
எண்சீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்
103. பண்ணேறு மொழி யடியர் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகினை யிப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கே யென்கண்ணே மெய்வீட்டின் வித்தே
தண்ணேறு பொழிற் றணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தண்ணிய சோலைகள் சூழ்ந்த தணிகை மலையில் எழுந்தருளும் மாணிக்க மணியே, விண்ணுலகில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் பெறுதற்கரிய ஞான விளக்காயவனே, எனக்குக் கண் போல்பவனே, நிலைத்த வீடு பேற்றுக்குக் காரணமானவனே, உணர்வு செயல்கட்குச் சாட்சியாய் உயிர் தோறும் நிறைந்து விளங்கும் இயற்கை வாழ்வே, இசை யமைந்த சொன்மாலை மொழியும் அடியார்கள் நாளும் தொழுது வாழ்த்தும் நின் திருவடி யழகைப் பாவியாகிய யான் பார்ப்பேனாயின் கண்ணேறு படுமென நினைத்துக் கனவிலேனும் காட்டுக என்று வேண்டினாலும் காட்டாதொழிகின்றாய்; இது தான் நின் கருணையோ, கூறுக, எ. று.
மண்ணுலகிற்குப் போதருதலும் உலாவுதலும் செய்து விண்ணுலகடைந்து வீற்றிருப்பது பற்றித் திருமால் முதலிய தேவர்களை “விண்ணேறும் அரி முதலோர்” எனவும், அவர்களாலும் பெற முடியாத ஞானத் திருமேனியை யுடையவன் முருகன் என்றற்கு “அரி முதலோர்க் கரிய ஞான விளக்கே” எனவும் இயம்புகிறார். கண்டும் காட்டியும் உயிருணர்வை விளக்கம் செய்தலால் “என் கண்ணே” என்று கூறுகிறார். அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்பவாகலின், முத்தி நிலையை “மெய் வீடு” என்றும், அதனைப் பெறற்குக் காரணமாகும் உண்மை ஞானத்தை நல்கும் பெருமானாதலால், “மெய் வீட்டின் வித்தே” என்றும், உயிர் தோறும் அறிவினுள் அருளால் மன்னி அறிவன அறிந்தும் அறிவித்தும் இயலுவது பற்றிச் “சீவ சாட்சியாய் நிறைந்தருளும்” பெருமானே என்றும், இவ்வருட் செயல் காரணம் பற்றி நிகழாமல் இயல்பாக நிகழ்தலால் “சகச வாழ்வே” என்றும் இயம்புகின்றார். சாட்சி-ச, அட்சி எனப் பிரிந்து ஒருங்கு உடனிருந்து காண்பது எனப்பொருள் படும் வடசொல். உயிரைச் சீவன் என்றும், ஆன்மா என்றும் வழங்குவது வடநூன் மரபு. உருவில்லாத சீவன் செய்வனவற்றை உடனிருந்து காண்பது உருவிறந் தொளிரும் பரம்பொருட் கன்றி இயலாத தாகலின், அதனைச் சீவ சாட்சி என்று கூறுகின்றார். சகசம்-இயற்கை. வாழும் உயிரனைத்தும் உய்தி பெறுவது காரணமாக வாழ்க்கை நடத்துவதால், அவற்றிற்கு ஆவன உதவி யருளும் இறை வாழ்வு காரணமின்றியே இயலுவது பற்றிச் “சகச வாழ்வு” என்று சிறப்பிக்கப்படுகிறது. காரைக்காலம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் முதலாகவுள்ள அடியவர் அனைவரும் பண் சுமந்த பாடல்களால் பரவியுள்ளமையின், அவர்களைப் “பண்ணேறு மொழியடியார்” என்று கூறுகின்றார். கண்ணேறு-கண்களாற் பார்த்த விடத்துக் காணப்பட்ட பொருட்கு யாதேனும் ஊறுண்டாயின் அதனைக் கண்ணேறு என்பது உலக வழக்கு. கண்கள் நேரே சென்று தாக்கா விடினும் காணப்பட்டமை காரணமாக ஊறு எய்தியதென்னும் கருத்துப்பற்றி அவ்வூறு கண்ணேறு எனப்படுகிறது. முகக் கண்களால் நேரே காணப்படாது கனவிற் காணின் கண்ணே றுண்டாகா தென்னும் உலகியல் பற்றிக் “கனவிலேனும் காட்டென்றாற் காட்டுகிலாய்” என்று உரைக்கின்றார். நனவிற் காட்டல் போலக் கனவிற் காட்டல் மக்களியற்கைக் காகாத தொன்று; எங்கும் எக்காலத்திலும் எப்பொருளிலும் கலந்து நின்று காட்சியளிக்கும் திறம் இறைவனுக்குண்மை கண்டு, கனவிலும் காட்டாமைக்கு மனம் வருந்திக் “கருணை ஈதோ” என வள்ளற் பெருமான் முருகனை வினவுகின்றார்.
இதனால் தணிகை முருகன் தமக்குக் கனவு நிலையிலும் திருவடிக் காட்சி நல்காமைக்கு வருந்தியவாறாம். (1)
|