1030.

     வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
          வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ
     இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
          ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்
     தன்மை அன்றது தருமமும் அன்றால்
          தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே
     பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     பொன்னிறம் கொண்ட சடையை யுடையவரே, ஒற்றியூரை யுடையவரே, வன்மையாகப் பேசிய வன்றொண்டராகிய சுந்தரரை ஆளாகுமாறு திருவெண்ணெய் நல்லூர்ப் பேரவையில் வழக்குத் தொடுத்த வள்ளலாகிய நீர், வறியவர்போல் திருமுன்பு வலிய வந்தபோது இவனோர் ஏழையென்று புறத்தே ஒதுக்குவீராயின், அது நுமக்குப் பெருந்தன்மையுமன்று; அறமுமாகாது; தனியனாகிய யான் மேலும் சொல்லுதற்கு ஒன்றுமில்லை; இத்தனையும் கேட்டு இவன் பொய்யன் என்று என்னைப் போக்குவீரானால் எனக்குப் புகலிடம் வேறுயாதாம்? எ.று.

     சிவன் முடியில் திகழும் சடை பொன்னிறத்த தாதலால், “பொன்மையஞ் சடையீர்” என்று புகழ்கின்றார். பொன்னின் நிறத்தன்மை பொன்மை யெனப்படுகிறது. “பொன்போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே” (வான்மியூர்) என்று ஞானசம்பந்தர் சடையின் பொனமையை விதந்துரைத்தல் காண்க. திருமணப் பந்தர்க்கண் காளையாகிய சுந்தரரை அடிமையெனக் கூறி வெகுள்வித்தமையால், அவர் சினம் மிகுந்து வன்மையாகப் பேசியதையும், அது கொண்டு பரமசிவன் அவருக்கு வன்றொண்டன் என்ற சிறப்பளித்ததையும், திருவெண்ணெய் நல்லூரில் அந்தணர் கூடிய பேரவையில் வழக்குத் தொடுத்து ஆவணம் காட்டி வென்று ஆட்கொண்டதையும் நினைவிற்கொண்டு, “வன்மை பேசிய வன்றொண்டர் பொருட்டாய் வழக்குப் பேசிய வள்ளல் நீர் அன்றோ” என உரைக்கின்றார். இச் செய்தியை, “தன்மையினால் அடியேனைத் தாமாட் கொண்ட நாள் சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்” (நாவ) என்று நம்பியாருரரே கூறுவது காண்க. சிவனுக்கு ஆளாகும் பேற்றினைப் பிறரெல்லாம் தவம் புரிந்து வேண்டிப் பெற்றாராக, சுந்தரர் மறுத்த போதும் விடாது ஆளாகும் நலம் புரிந்தமை பற்றிச் சிவனை “வள்ளல் நீர் அன்றோ” என வலியுறுத்துகின்றார். இன்மையாளர் - வறுமையால் இரப்பவர். அழையா தொழியினும் வீடுதோறும் தாமே வலியச் செல்வது இரவலர் இயல்பாதலால், “இன்மையாளர் போல் வலிய வந்திடினும்” என்றும், இல்லாரை யெல்லாரும் எள்ளுவது போல் என்னை நீ எள்ளிப் புறம் போகவிடலாகா தெனவும், விடுப்பது அருட்செல்வத் தீசனாகிய நின் தன்மைக்குப் பொருத்தமாகாது எனவும், செல்வமுடையார்க்கமைந்த அறமுமாகாது எனவும் கூறுவாராய், “ஏழையாம் இவன் என்றொழித்திட்டால் தன்மையன்று அது தருமமும் அன்றால்” என்றும் மொழிகின்றார். தம் பொருட்டு ஆவன எடுத்துரைப்போர் பிறர் இல்லை என்பார், “தமியனேன்” என்றும், மேலும் பேசுதற் கிடமின்மை தேர்ந்து “இன்னும் சாற்றுவ தென்னே” என்றும் இயம்புகின்றார். இத்துணையும் கேட்டு, கூறுவன யாவும் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தால் எனக்குப் போக்கு வேறில்லை என்பது தோன்ற, “பொய்யன் என்னில் யான் போம் வழி யெதுவோ” என்று புகல்கின்றார்.

     இதனால், வன்றொண்டர்க்கு வலியச் சென்று அருள் புரிந்த நின் வள்ளன்மை, ஏழை யெனக் கருதி என்னைப் புறம்போக விடின் தன்மையுமன்று, தருமமு மன்றென விண்ணப்பித்தவாறாம்.

     (4)