1031.

     உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
          உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
     இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
          எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
     அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
          அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
     புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     சுடுகாட்டை, யிடமாக வுடையவரே, ஒற்றியூரை யுடையவரே, உறங்குவதும், விழிப்பதும், உவப்புடன் உண்பதும், உவப்புடன் உடுப்பதும், உலகியல் மயக்கில் வீழ்வதும் எழுவதுமாய் மனம் தளர்கின்றே னென்றாலும், அறம் பொருந்திய உம்முடைய திருவடியையே என்னைக் காக்கும் அரணாகக் கருதியடைந்துள்ளேன்; எனது தளர்ச்சி போக்கி ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும்; பொய்யன் என்று சொல்லிப் புறக்கணிப்பீராயின், யான் உய்ந்து போதற்குரிய நெறி வேறு இல்லை, எ.று.

     எல்லாரையும் புறம் காண்பதால் சுடுகாட்டுக்குப் புறங்காடு என்பது பெயர்; “எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக்கெல்லாம் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறியாதே” (புறம். 356) எனச் சான்றோர் கூறுவர். இதுபற்றியே இப் புறங்காடு சிவபிரானுக்கு ஆடரங்காகவும் கோயிலாகவும் சமயகுரவர்களால் குறிக்கப்படுகிறது. “புறங்கா டரங்கா நடமாட வல்லாய்” (அதிகை) எனத் திருநாவுக்கரசரும், “கோயில் சுடுகாடு” (சாழல்) எனத் திருவாதவூரரும் கூறுகின்றார்கள். மகிழ்வாய் என்பதை, உடுப்பதோடும் ஒட்டுக. உண்பதிலும் உடுப்பதிலும் வெளிப்படத் தோன்றும் உவகை உறக்கத்திலும் விழிப்பிலும் இல்லையாதலின், “வாளா உறங்குகின்றதும் விழிப்பதும்” என்றும் உரைக்கின்றார். கண், காது முதலிய ஐம்பொறிகளாலும் பெறப்படும் நுகர்ச்சிகள் உலகியல் இன்பத்தை நல்கி, மறுமையையோ வீடு பேற்றின்கட் பெறலாகும் பேரின்பத்தையோ நினையவிடாது மனத்தை மயக்குவதும், ஓரொருகால் தெளிவுதந்து நினையச் செய்வதும் நன்கு காணப்படுவதால் “மயக்குள் இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய்” என இயம்புகின்றார். இவற்றால் உடற்கு ஓய்வும் உழைப்பும் உள்ளத்துக்குத் தளர்ச்சியும் கிளர்ச்சியும், உணர்வுக்கு மறைப்பும் விளக்கமும் உண்டாதலால், “எய்க்கின்றேன் மனம்” என்றும், இவைகள் கடலின்கண் அலைபோல் எழுவதும் விழுவதுமாக இருப்பினும் என்பார், “என்னினும்” என்றும் இயம்புகின்றார். அறவாழி யந்தணனாதலின், அவன் திருவடியை “அறங்கொள் அடி” எனவும், அதனினும் அழியா வரண் வேறில்லாமையால், “அரண் என அடைந்தேன்” எனவும், அதுதானும் தண்ணிய சிவானந்த நிலையமாதலால் அயர்வு தீர்தல் ஒருதலை யென்றற்கு “அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்” எனவும் இசைக்கின்றார்.

     இதனால், மயக்கினால் எய்த்து அயர்கின்றேனாதலால், அயர்வு போக்கி ஆட்கொள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (5)