1032. கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
ஐய நீர்உம தருள்எனக் களிக்க
இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
உரை: மலை போன்ற யானையின் கட்டமைந்த தோலைப் போர்வையாக வுடையவரே, ஒற்றியூரை யுடையவரே, கருப்பங் கட்டியையும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்; அரும்புபோல் இறுகிய முலையையுடைய உமாதேவியார் கூடி மகிழும் ஐயனே, உமது திருவருளை நீர் எனக்கு அளித்தால் இரும்பினால் ஆகிய கட்டி போன்ற நெஞ்சினை யுடையேனாயினும், அதனை வரவேற்று வாங்கிக்கொள்ளாமல் இருந்ததுண்டோ? பொய்யுரைக்கின்றே னென்று என்னைப் புறம்போக விடுவீராயின் எனக்குப் போக்கிடம் யாது? ஒன்றுமில்லையன்றோ? எ.று.
பொருப்பு - பொரும்பென எதுகை நோக்கி மெலிந்து, ஆகு பெயராய் யானைக்காயிற்று. யானையின் தோல் உடலுள் என்பொடு நரம்புகளாற் கட்டியது போறலால், யானைத்தோலை, “பொருப்பின் கட்டுரி” என்று கூறுகின்றார். யானைத் தோலைப் போர்த்துக் கொண்டிருத்தல் பற்றிப் போர்வை என்பது வருவிக்கப்பட்டது. “போர்த்துதவும் கரியின் னுரி புலித்தோ லுடை” (அகத்தியான்) என்று பெரியோர் கூறுவர். கரும்பின் கட்டி - கருப்பஞ்சாற்றைக் காய்ச்ச வுருவாகும் கட்டி; இதனைக் கருப்புக்கட்டி யெனவும் வெல்லக்கட்டி யெனவும் வழங்குவர். கனி - வாழை, பலா, மாவாகிய இனிய பழவகை, கயவர் - சுவையுணர்வில்லாத கீழ்மக்கள். “கயவரும் கசக்கும் என்றுரையார்” எனவே யாவரும் விரும்புவரென்பது பெற்றாம். அரும்பு - பூவின் மலராமுன் இதழ்கள் ஒன்றோடொன்று பிணித்தது போன்றிருக்கும் நிலை. அரும்பு மலர என்பது “அரும்பு பிணியவிழ” என்று புகலப்படுகிறது. இதழ் பிணிப்புற்ற அரும்பென்றற்கு “அரும்பின் கட்டு” என வுரைக்கின்றார். இருப்புருண்டையை “இரும்பின் கட்டி” என்கின்றார். இரும்பினும் வலிதாய் எளிதில் உருகாததாய் இருக்குமாறு தோன்ற, “இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன்” என்றும், என்றாலும் உமது திருவருள் அளிக்கப்பெறின் உடனே ஏற்று மகிழ்வேனேயன்றித் தயங்க மாட்டேன் என்று வலியுறுத்தற்கு, “ஏற்று வாங்கிடாதிருந்த துண்டோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால், திருவருள் நல்கப் பெறுவேனாயின் விரைந்து ஏற்றுக் கொள்வேனாதலால் அருள் புரிக என விண்ணப்பித்தவாறாம். (6)
|