1033. விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால்
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
கடமை நீங்குறார் உடமையின் றேனும்
நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
உரை: மலையை வில்லாக வுடையவரே, ஒற்றியூரை யுடையவரே, என் விருப்பம் நிலை கொண்டிருப்பது நின் திருவடி மேலாகும்; அவ் விருப்பத்தை மாற்றுவது நெறியாகாது; நாட்டிற் பஞ்சமுண்டாயினும் தம் கையில் பொருள் இல்லையாயினும் வள்ளன்மை யுடையவர் கொடுப்பதாகிய கடமையினின்றும் நீங்க மாட்டார்கள்; உம்முடைய திருமேனி நெருப்புருக் கொண்டு நிற்குமாயினும், யான் அருகில் நிற்க அஞ்ச மாட்டேன்; இதனால் என்னை அரக்கன் என்று எண்ணுதல் கூடாது; யான் கூறும் இதனைக் கேட்டு என்னைப் பொய்யனென்று விலக்குவாயாயின், எனக்கு வேறு புகுமிடம் யாதாம்? எ.று.
புரமெரிக்கச் சென்றபோது மேருமலையை வில்லாகக் கொண்டது பற்றி, சிவனைப் “பொருப்பு வில்லுடையீர்” என்று கூறுகிறார். “வெற்பார் வில் அரவு நாண் எரியம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன்” (கலைய நல்லூர்) என்று நம்பியாரூரர் நவில்வது காண்க, அன்பராயினார் அன்பு செய்தற் கமைந்தது திருவடியாதலின், “விருப்பு நின்றதும் பதமலர் மிசை” என்றும், அவ்விருப்பத்தை மாற்றிப் பிற தேவர்கள்பாலும் பொருள்பாலும் வைப்பது பிறவிக்கேதுவாவது கண்டு, “அவ்விருப்பை மாற்றுதல் விரகு மற்றன்றால்” என்றும் உரைக்கின்றார். விரகு - நன்னெறி; நல்லறிவுமாம். திருவடிக்கண் உண்டாகிய எனது அன்பு உன் திருவருளால் நின்றோங்க வேண்டுமே யன்றி, வேறே பிறழ்ந்து செல்லவிடலாகாது என்பது கருத்து. வள்ளன்மையுடையோர் நாட்டில் உண்டாய பஞ்சத்தால் பலராய் வரினும், கொடுத்து உதவுதற்குரிய பொன்னும் பொருளுமாகிய உடைமை தம்பால் இல்லையாயினும் நாடி வருபவர் விருப்பத்தை மாற்றுவதில்லை என்ற பொருள் புலப்பட, “கருப்பு நேரினும் உடைமையின்றேனும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீக்குறார்” என்று கூறுகின்றார். கருப்பு - பஞ்சம். நீக்குறார் - நீக்குதலை மேற்கொள்ளார். திருமாலும் பிரமனும் முறையே அடியும் முடியும் காண முயன்ற போது நெருப்புருவாய் நின்றமையின், “நெருப்பு நும் உருவாயினும்” என உரைக்கின்றார். மூவுலகுருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே” (வாழாப்) என்று திருவாசகம் தெரிவிப்பது காண்க. அருள் புரிந்து என்னை அருகுவருவித்தால் யான் அந்நெருப்புருக் கொண்டு அஞ்சேன் என்பார், “அருகில் நிற்க அஞ்சுறேன்” என்றும், அஞ்சாமையால் யான் அரக்கப் பண்புடையன் எனக் கருதலாகா தென்றற்கு “நீலனும் அன்றால்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், திருவடிமேல் அன்புடைய என் அன்பு மாறா வண்ணம் அருகு வருவிப்பினும் அச்சமின்றி வந்தணைவேன் என்று விண்ணப்பித்தவாறாம். (7)
|