1034.

     கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
          கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
     அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
          ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
     நெடிய மால்அயன் காண்கில ரேனும்
          நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
     பொடிய நீறளணி வீர்ஒற்றி உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     பொடியாகிய திருநீற்றை அணிபவரே, ஒற்றியூரையுடையவரே, கொடிய நஞ்சை அமுதமாக வுண்டு மாற்றிய உமக்குக் கொடியவனாகிய என்னைக் கொடுமை மாற்றி ஆளாகக் கொள்ளுவது அரிதாகுமோ? அடியவர் பொருட்டு மதுரையில் பிரம்படி படுவீராகிய எம்முடைய ஐயனே, உம்முடைய திருவடிக்கு ஆளாக விரைகின்றேன்; உம்முடைய திருவடியையும் திருமுடியையும் நெடுமாலும் பிரமனும் காண மாட்டாராயினராயினும் நும் திருமுன் நின்றேனும் காண்பேம் என உள்ளத்தில் துணிவு கொண்டுளேன்; என்னைப் பொய்யொழுக்க முடையனெனப் புறக்கணிப்பாயாயின் எனக்குப் போக்கிடம் வேறு யாதாம்? கூறுக. எ.று.

     வெண் பொடியாகிய திருநீற்றைப் “பொடிய நீறு” என்கின்றார். வெண்ணீற்றைப் பொடியென்றே வழங்குவதுண்மையின் பொடியாகிய நீறு என்று உரை கூறுவதாயிற்று. “பொடியணி மெய்யர் போலும்” (ஆவடு) எனத் திருநாவுக்கரசர் முதலியோர் கூறுவர். உண்டாரைக் கொல்லும் தன்மையாற் கொடிதாகிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டு அதன் தன்மையை மாற்றி அமுதாக்கிக் கொண்டமையால், “கொடிய நஞ்சமுதாக்கிய உமக்கு” என்று கூறுகிறார். “ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டிருந்து அருள் செய்குவாய்” (சிலப். வேட்டு. 22) என இளங்கோவடிகள் பாடுவர். திருஞான சம்பந்தரும், “படுகடல் அளறெழக் கடைய, வேக நஞ்செழ, ஆங்கே வெருவோடும் இரிந்தெங்கும் ஓட ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்” (மறைக்) என இசைப்பர். ஆளாவார் நேர்மையராதல் வேண்டுதலால், கொடியனேன் கொடுமை போக்கி ஆட்கொளல் வேண்டும் என்றற்குக் “கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ” எனத் தெரிவிக்கின்றார். பிரம்படி பட்ட செய்தியை மாணிக்கவாசகர், “கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை, மண் சுமந்து கூலி கொண்டக் கோவால் மொத்துண்டு, புண் சுமந்த மேனி பாடுதுங்காண்” (அம்மானை) எனக் கூறுவது காண்க. மதுரைத் திருவிளையாடற் புராணம் மாணிக்கவாசகர் பொருட்டுச் சிவன் இவ்வாறு அடிபட்டார் என்று உரைக்கின்றது. அடியவர் பொருட்டு அடிபடுவீராயினும் உம்முடைய திருவடிக் காளாவதில் மிக்க விருப்ப முடையேன்; அதனால் துடிக்கின்றேன் என்பார், “விரைகின்றேன்” என்று கூறுகிறார். விரைதல் - ஆர்வ மிகுதியால் விரைவு கொண்டு துடித்தல். மாலும் பிரமனும் தம்முடைய உரு மாறிக் கீழும் மேலும் சென்று அடி முடி காண முயன்றனராக, யான் நின்றாங்கு நின்று காணக் கருதியுள்ளேன் என்பாராய், “நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்” என்று சொல்லுகின்றார்.

     இதனால், கொடுமை வாய்ந்த நஞ்சினை அமுதாக்கியதுபோல என்னை நேர்மை யுடையனாக்கி ஆட்கொள்க; யான் ஆளாதற்கு ஆர்வ மிக்குத் துடிப்பதுடன் திரு முன்னே நின்று காணவும் துணிந்துள்ளேன் என்று விண்ணப்பித்தவாறாம்.

     (8)