1035.

     வினையி னால்உடல் எடுத்தன னேனும்
          மேலை நாள்உமை விரும்பிய அடியேன்
     எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர்
          எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர்
     மனையி னால்வரும் துயர்கெட உமது
          மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன்
     புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     பூவாற் புனைந்து போற்றுவதை விரும்புத லுடையீர், ஒற்றியூரையுடைய முதல்வரே, செய்வினை யேதுவாக இவ்வுடம் பெடுத்துள்ளேனாயினும் முன்னைப் பிறவிகளிலே உன்னை விரும்பிய அடியவன்; என்னை இன்னானென அறியாதவரன்று; கடந்த எழுபிறப்பிலும் யான் செய்த வினைகளை இப்பெற்றியன என்று அறிந்திருக்கின்றீர்; மனை வாழ்க்கையால் உண்டாகும் துன்ப மெல்லாம் தீர்தற்காகவே உம்முடைய அடியார் மரபை விழைந்து திருமுன் வந்து நிற்கின்றேன்; என்னைப் பொய்யன் என்று போக்குவீராயின் எனக்குப் புகல் இல்லை. எ.று.

     புனை - புனைதல்; முதனிலைத் தொழிற்பெயர்; நெய் பால் முதலிய வற்றால் திருமுழுக்காட்டித் தூய ஆடையும் பூமாலையும் கொண்டு புனைதல். அமர்தல் - விரும்புதல். “நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார்” (ஓணகாந்தன்) என்று சுந்தரர் உரைப்பது காண்க. முன்னைப் பிறவியிற் செய்து பயன் நுகரப்படாதிருக்கும் வினையேதுவாகப் பிறப்புண்டாகிற தென்பது சமயநூற்றுணிபாதலால், “வினையினால் உடல் எடுத்தன னேனும்” என வுரைக்கின்றார். “உடற் செயல் கன்மம் இந்த வுடல் வந்தவாறே தென்னில் விடப்படும் முன்னுடம்பின் வினையிந்த வுடல் விளைக்கும்” (2 : 10) என்று சிவஞானசித்தியார் கூறுவ தறிக. “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” (4 : 13) என மணிமேகலையும் உரைக்கின்றது. “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்” (புறம்பயம்) என்று சான்றோரும் கூறுதலால், சிவன் திருவடிக்காளாகும் விருப்பமாகிய நல்வினை, இப்பிறப்பில் வந்து கூடியுளது என்ற கருத்தால், “மேலை நாள் உமை விரும்பிய அடியேன்” என்று மொழிகின்றார். எல்லாமறியும் பெருமானாகிய நீ என் தன்மையையும், பிறப்பேழினும் நான் செய்துபோந்த வினைவகைகளையும் அறிந்துளாய் என்பார், “எனை இன்னான் என அறிந்திலீரோ நீர் எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர்” என இயம்புகின்றார். எழுமைச் செய்கை - எழு பிறப்பினும் செய்த வினை. மனத்தால் நினைத்தலும் வாயாற் பேசலும் மெய்யாற் செய்தலும் சமயநூல்களிலும் மொழியிலக் கணங்களிலும் வினையென்று வழங்கும். மனை - மனை வாழ்க்கை. மனை வாழ்வு நல்கும் இன்பத்தினும் துன்பம் பெரிதாகத் தோன்றுதலின் மனையினால் வரும் துயர் என்றும், அது கெடுதல் வேண்டியே சிவத்தொண்டர் சார்பும் செயல்முறையும் பெற வேண்டுகிறேன் என்பார், “மனையினால் வரும் துயர்கெட வுமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். சிவனடியாரைச் சிவமென்றே கருதுதலின் அவர் மரபை, “உமது மரபு” என்று குறிக்கின்றார்.

     இதனால், சிவந்தொண்டர் மரபு வேண்டி விண்ணப்பித்தவாறாம்.

     (9)