1036.

     பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
          பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
     மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
          மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
     உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
          உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
     புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
          பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

உரை:

     புழை பொருந்திய துதிக்கையையுடைய யானைகள் உலவும் ஒற்றியூரை யுடையவரே, பிழைகள் பல செய்தவனாயினும் உம்முடைய பெருமையை நோக்க என் பிழை சிறிதேயாகும்; மழை போல் அளிக்கும் வள்ளன்மை பொருந்திய கையைக் கொடாது மறுக்கும் கையாக மாற்ற நினைப்பவர் உலகில் எவரும் இல்லை; அதுபோல் எளியேனைத் திருவடிக்கீழ் இருக்கும் அருளைச் செய்வாராயின் தடுப்பவர் தேவருலகிலும் இவ்வுலகிலும் ஒருவரும் இல்லை; யான் கூறுவதைப் பொய்யென்று கொண்டு என்னை மறுப்பாயாயின் எனக்கு உய்ந்து போதற்கு வேறு வழியே இல்லை. எ.று.

     புழைக்கை - யானைக்குப் பெயர். முன்பும் “புழைக்கை மா” (525) என்றமை காண்க. வேந்தர் செல்வர்களின் யானைகள் உலவுவதுண்மை பற்றிப் “புழை புரிந்தகை யுலவு ஒற்றியூர்” என்று உரைக்கின்றார். விழாக் காலங்களில் சோழவேந்தர்கள் இத் திருவொற்றியூர்ப் போந்து தங்குவ துண்டென இவ்வூர்க் கல்வெட்டுக்கள் (371/1911) குறிக்கின்றன. மக்கள் வாழ்க்கையில் பிழையுண்டாதல் இயல்பாதலால் “பிழை புரிந்தனனாகிலும்” என்றும், பிழைசெய்து சிறுமையுறு வோரைப்பெரியோர் பெருமைப் பண்பால் பொறுப்ப ரென்பது கொண்டு “பெருமை நோக்கின் அப் பிழை சிறிதன்றோ” என்றும் எடுத்துரைக்கின்றார். “மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி, நேரிசை) என நாவுக்கரசரும், “பொறுப்பரன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே” (நீத்தல்) என்று மாணிக்கவாசகரும் கூறுவன காண்க. மழைபோல் கைம்மாறு நோக்காது கொடை வழங்கும் வள்ளல்களின் கைகளை “மழை வண்கை” என்பர் புலவர். வண்கை - மிகைபட வழங்கும் கை. கொடுப்பதை விலக்குவது கொடுமை என்பதனால் “மழை புரிந்திடும் வண்கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்றிலை” என்று இயம்புகின்றார். வண்கையை மாற்றலாவது, கொடுக்கும் கையைக் கொடாத கையாக்குவது. எவர் என்ற விடத்துச் சிறப்பும்மை தொக்கது. உழை - பக்கம்; ஈண்டுக் கீழ் என்று பொருள்பட நின்றது. உம்பர் - மேலுலகு. இம்பர் - மண்ணுலகு.

     இதனால், பிழை பொறுத்துத் திருவடிக்கீழ் இருக்கும் அருளைப் புரிக என விண்ணப்பித்தவாறாம்.

     (10)