42. நெஞ்சறிவுறூஉ
திருவொற்றியூர்
நெஞ்சறிவுறூஉ என்பது நெஞ்சுக் கறிவுறுத்தல் என்னும் பொருளது. செவியறி
வுறுத்தல் என்னும் பொருளில் செவியுறை எனத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய
சொற்றொடர் பிற்காலத்தே செவியறிவுறூஉ என வழங்குவதாயிற்று. அதனைப் பின்பற்றியே இங்கே
நெஞ்சறிவுறுத்தல் என்பது நெஞ்சறிவுறூஉ என வந்துளது.
இவ்வுலகம் மாயா காரியம்; இதன்கண் நிலவும் பொருளும் வாழ்வும் நுகர்வும் யாவும் நிலையின்றிக்
கெடுவ தறியும் ஆன்மவுணர்வு “நில்லா வாழ்வை வேண்டேன்” என வெறுத் தொதுங்குமாயின், அதனை
ஒளியில் இருள்போல அனாதி தொடர்புற்றிருக்கும் மலம் நீங்காமைபற்றி மாயை யதனை மயக்கித்
தன் கண்ணேயிருந்து வாழச் செய்கிறது. வினை செய்யுமிடத் தெல்லாம் விளக்கமும் இன்பமும் தந்து
உயிரைப் பிணிக்கிறது. அதனை யுணராமல் உயிர் பொறிவழி நடந்து உலக நெறி கூடி நினைப்பும்
மதிப்பும் எய்தித் துன்பம் உழக்கிறது. மலகாரியமாகிய வினையின் பயன் இன்பமும் துன்பமுமாகும்.
இப் பயனிரண்டும் ஆன்மாவின் செயலால் வெளிப்படுவன; விளைவன. தனக்குரிய பயன் முற்றும்
நுகரப்பட்டுக் கழிகிற வரையில் ஆன்மாவை விடாமற் பிணித்தல் வல்லதாகலின், அதனை வல்வினை
யென்பர். அதன் வண்மை கண்ட சில சமயவாதிகள் வினையை எல்லாம் வல்ல கடவுளாலும் போக்க
முடியாது எனப் பொய்யே புகழ்ந்தனர். வினையைச் செய்கிறபோது நினைவிழக்கும் ஆன்மா பயன்
நுகரும்போது வருந்தும் வருத்தத்தைப் பிறர் கண்டு இரங்குமாறு வாடவும் செய்கிறது. வினை செயற்கண்
ஈடுபடும்போது உண்டாகும் இன்பத்தை நச்சித் துன்பப்பயனை நினையாமல் அதுவே சுகமெனக் கருதி
மயங்குகிறது. செய்தற்கண் இன்பமாய்ப் பயனுகர்ச்சிக்கண் துன்பமாய் வஞ்சிக்கும் உலக போகம்
நஞ்சாயினும் அதனை ஆன்மா இருகையாலும் அள்ளியுண்கிறது. உண்மையை எவ்வளவு விளக்கி யுரைக்கினும்
ஏற்பதில்லை. உடல் வாழ்வு உப்பில் பண்டமாயினும் தப்பிலை என நுகருகின்றது. கண நேரத்தில்
ஆன்ம நெஞ்சம் ஆயிரம்கோடி எண்ணங்களை யெண்ணி அலைகிறது; வாழ்வியலை எண்ணிப்
பார்க்குமாயின் வெறும் போது போக்காக அது தோன்றும், உலக வாழ்வியல் வேண்டுவதும்
வேண்டாததும் அவா வடிவின் பிறவிக்கு ஏதுவாகும் வித்து. அவற்றால் விளைவது வேதனை. தூக்கமும்
சோம்பலும் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிப்பன; சுகம் தருவன வல்ல. பின்பற்றுவோர் நரக
வேதனையடைவர்.
இங்ஙனம் வள்ளற்பெருமான் நெஞ்சிற்கு அறிவுரை வழங்கி இவற்றை உனக்கு இனிது கூறிவிட்டேன். இனி
என்மேற் பழியில்லை. நெஞ்சமே நான் இன்றே இன்பம் எய்தவும், இன்னல் நீங்கவும், இடையீடுகள்
அகலவும், ஏக்கம் போக்கவும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டு அருள் புரிந்தொளிரும்
தியாகப்பெருமானிடம் செல்கிறேன். தெளிவு கொண்டு வருக என இனிய சொற்களால் இப் பத்தின்கண்
இயம்புகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம் 1037. என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: மும்மல காரணத்தால் மடமை செறிந்த மனமே, வாழ்க்கையுள் வந்து பொருந்துகிற இன்பமும், துன்பமும், செய்யப்படும் இருவினைகளின் பயனாய் உளவாவன; காரணம் என்னுடையதன்று; இவ்வுலகில் வலிய வினைகட்கு இடமாய் வாழ்கின்றாய்; நினைக்குந்தோறும் நல்ல அமுதமாய் இனிக்கும் சிவபெருமான் கோயிலுற்றிருக்கும் திருவொற்றியூர்க்கு இப்போது இன்னல் கெட்டொழிய வேண்டிச் செல்கின்றேன்; உடன் வருவாயாயின் உனக்கும் இன்னல் கெடும்; அதனைச் சொல்லி விட்டேன்; என்மீது இனிப் பழியில்லையாம். எ.று.
மனம் மாயா காரியமாயினும் மலம் காரணமாக உடற்கு உள்ளுறு கரணமாய் வினைக்கு உறுகருவியாய்ச் செயல்படுதல் தோன்ற “மும்மலஞ்செறி மனனே” என்றும், குணவியக்கத்தால் மடம்படும் தன்மை பற்றி “மடஞ்செறி மனனே” என்றும் கூறுகின்றார். மனம், வாக்கு, மெய் என்ற மூன்றுமல்லது வினை செய்வன வேறு இல்லை; இம்மூன்று மில்லையாயின் உயிர்கட்கு வாழ்வு இல்லை. எனவே, உலக வாழ்வே, வினைக்கு இடமாதல் விளங்குதலின், “வாழ்தியோ இங்கு வல்வினைக் கிடமாய்” என்று கூறுகின்றார். சிந்திக்கும் சிந்தையில் தோன்ற நிற்றல் பற்றி “உன்ன நல்லமுதாம் சிவபெருமான்” என்று உரைக்கின்றார். “நினைவார் நினைய இனியான்” (புறவம்) என ஞானசம்பந்தர் பாடுகின்றார். கோயில் கொண்டிருத்தலால், “உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்” என்றும், வினைத் துன்பங்களை ஒழித்தல் வேண்டி ஒற்றித் தியாகப் பெருமானைப்பரவச் செல்கின்றேன் என்பாராய், “ஒற்றியூர்க் கின்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன்” என்றும், உனக்குரையாது செல்வேனாயின் உலகு என்னைப் பழிக்குமென் றஞ்சுகிறேன் என்பார், “உனக்கும் இயம்பினேன் பழியில்லை என்மீதே” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், இன்னல் அகற்றற்கு ஒற்றியூர்க்குப் போகின்றேன் என்பதாம். (1)
|