1038. துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
வன்ப தாகிய நீயும்என் னுடனே
வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: மனமே, மாயா காரிய வுலகில் நிலையா வியல்புடைய பொருளிடை நிலவும் மயக்கத்துள் ஆழ்ந்து நுகரப்படும் துன்ப வாழ்வைச் சுகவாழ்வென நினைந்து நிற்கின்றாய்; வன்மைப் பண்புடைய நீயும் என்னொடு வருகிறாயோ, அன்றி இங்கே நின்றொழிகுவையோ; யான் அறியேன்; ஒன்பதென எண்ணப்பட்ட உருவுடைய பெருமானாகிய ஒருவன் கோயில் கொண்டுறைகின்ற ஒற்றியூர்க்கு இன்ப வாழ்வெய்துதல் வேண்டி இன்று செல்கின்றேன்; இதனை உனக்கும் இயம்புகிறேன்; முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்ற பழி இனி எனக்கு இல்லையாம். எ.று.
மாயா காரியமாகிய வுலகில் வாழ்வதற்கு வாய்த்த உடல் கரணம் கருவி உலகு போகம் ஆகிய அனைத்தும் மாயா காரியமாய் நிலையாமையே இயல்பாகக் கொண்டு நிலைபேறு விரும்பும் உயிர்க்குத் துன்பம் செய்தலின், “துன்ப வாழ்வினைச் சுகமென நினைந்து” என்றும், மாயைச் சூழலின் நீங்காது அதனுட் பிறந்திறந்து சுழல்கின்றமையின், “சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய்” என்றும் இசைக்கின்றார். வன்பது - வன்மைப் பண்புடையது. துன்பம் தொடர்ந்து சுடச்சுடத் தாக்கினும், அதனை நல்கும் வாழ்வையே சூழ்ந்துறைவதுபற்றி, “வன்பதாகிய நீ” என வுரைக்கின்றார். உயிர்க்கு உள்ளந்தக் கரணமாதலின் மனத்தை “நீ வருதியோ நிற்றியோ அறியேன்” என்று மொழிகின்றார். ஒன்பதாகி உரு “நவந்தரு பேதம்” எனப்படும். சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய அருவம் நான்கும், ஈசன், உருத்திரன், மால், அயன் ஆகிய உருவம் நான்கும், சதாசிவமாகிய அருவுருவ மொன்றும் ஆக ஒன்பதும் நவந்தருபேதமாம். இதனை, “சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன் தான் மாலயன் ஒன்றினொன்றாய்ப், பவந்தரும் அருவ நாலிங் குருவ நாலுபய மொன்றா நவந்தரு பேதமாக நாதனே நடிப்ப னென்பர்” (சிவ. சித். II, 74) என்று சான்றோர் கூறுவதனாலறிக. ஒருவன் என்பதே சிவனுக்கொரு பெயராதலின், “ஒருவன்” என உவந்துரைக்கின்றார். மாயைச் சூழலை நீக்கினாலன்றி இன்பவாழ்வு பெறல் இல்லையாதலின், “ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கின்றே இன்ப வாழ்வுறச் செல்கின்றேன்” என்றும், உடனுறை அமைச்சுப்போல் பணிபுரியும் உன்னிடம் சொல்லா தேகல் எனக்குப் பழியாமென்று கருதி, “உனக்கும் இயம்பினேன், பழியில்லை யென்மீதே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், துன்ப வாழ்வைச் சுகமெனக் கருதும் மனமே, இன்ப வாழ்வு பெறல் வேண்டி யான் இன்று செல்கின்றேன்; வருக என்று கூறுவதாம். (2)
|