1039. ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
வாட்டு கின்றனை வல்வினை மனனே
வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: உலகுயிர்களை ஆட்டுதற்காக அம்பலத்தில் ஆடல் புரிகின்ற கூத்தப் பெருமானுடைய சிவந்த திருவடியாகிய தாமரையை நினைக்காமல் வேறாய பலவற்றை நினைத்து வருத்துகின்றாய்; வலிய வினைகளைச் செய்யும் மனமே, நீ சுகமாய் வாழ்ந்திருப்பாயாக; வினையால் விளையும் பயனைச் செய்பவனே நுகருமாறு கூட்டுவிக்கும் நம்முடைய பரமசிவன் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருவொற்றியூர்க் கோயிலை யடைந்து இன்பம் பெறுதல் வேண்டிச் செல்கின்றேன்; இதனை உனக்குச் சொல்லிவிடுகிறேன்; பின்பு என்மேற் பழியில்லையாம். எ.று.
முதல்வனாகிய பரமன் அசைவித்தாலன்றி ஓரணுவும் அசையாதென்பது பற்றி “ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற பரமன்” என்றும், அவனுடைய திருவடியே நினைக்கத் தகுவதென்றற்கு “ஆடுகின்ற சேவடி மலர் நினையாய்” என்றும் கூறுகின்றார். நாவுக்கரசர் “ஆட்டுவித்தாலா ரொருவர் ஆடாதாரே” என்றும், மணிவாசகர், “அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாய்” (சதக) என்றும் கூறுவர். நினைவார் நினைவின்கண் தோன்றி ஞானமும் இன்பமும் அருளுவதாகலின் திருவடி நினையாமை தீது என்றற்குச் “சேவடி மலர் நினையாய்” என்று இயம்புகின்றார். வேண்டாதவற்றை யெண்ணி அவை எய்தாமையும் பயன்படாமையும் கண்டு மனம் வருந்துவது கொண்டு “வாட்டுகின்றனை” என்றும், வினைசெய்யும் கருவிகளாய மனமொழி மெய்யென்ற மூன்றனுள், தலையாயது மனமாதலின், வல்வினை மனமே” என்றும் உரைக்கின்றார். வாட்டி வருத்துகின்ற தீயரை வெறுத்த விடத்தும் சான்றோர் இன்மொழியே வழங்குபவாதலின், “வாழ்ந்து நீ சுகமாய் இரு” என உரைக்கின்றார். கண்டாய், முன்னிலையசை, வினையும் பயனும் அறிவில்லனவாதலின், வினைப்பயன் செய்தவனைத் தானே சென்றடையாமையால், செய்தவனைப் பயன் அடையுமாறு கூட்டுவிப்பது பரசிவத்தின் செயலாதலால், “கூட்டுகின்ற நம் பரசிவன்” என்று கூறுகின்றார். “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்” (சாக்கி. 5) என்று சேக்கிழார் கூறுவது காண்க. திருவடி நினைந்தடைவார்க்கு வேண்டுவன நல்கும் பொருட்டு இனிதிருக்கும் குறிப்பு விளங்க, “மகிழ்விற் குலவும் ஒற்றியூர்” என்றும், கோயிலைச் சூழ்தல் சரியையும், இறைவனைக் கண்டின்புறல் கிரியையும், தியானித்தல் யோகமும், எய்துவது ஞானவின்பமுமாதலால் “இன்பம் ஈட்டுதற் கேகின்றேன்” என்றும், யான் பெற்ற வின்பம் பிறரும் எய்துக என்னும் நல்லறம் சொல்லாமற் போவதால் கெடுதலின், “உனக்கும் இயம்பினேன் பழியில்லை யென்மீதே” என்றும் இயம்புகிறார்.
இதனால், ஒற்றியூர்க் கோயிலையடைந்து சரியை யாதி செய்து இன்பம் ஈட்டுதற் கேகின்றேன் என்பதாம். (3)
|