104. பண்டுமன துவந்து குணம் சிறிது மில்லாப்
பாவியேன் றனையாண்டாய் பரிவா லின்று
கொண்டு குலம் பேசுதல்போ லெளியேன் குற்றம்
குறித்துவிடி லென்செய்கேன் கொடிய னேனைக்
கண்டுதிருத் தொண்டர் நகை செய்வா ரெந்தாய்
கைவிடே லுன்னாணை காண்முக் காலும்
தண்டுளவன் புகழ் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தண்ணிய துளசி மாலை யணிந்த திருமால் புகழ்ந் தேத்தும் தணிகையில் வீற்றிருக்கும் மாணிக்க மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வை யுடைய பெருமானே, முன்பு திருவுள்ளம் இசைந்து நற்பண்பு சிறிதும் இல்லாத பாவியாகிய என்னை அன்பினால் ஆட்கொண்டாய்; இப்போது கொண்டு குலம் பேசும் உலக மக்கள் போல
என்பாற் குற்ற முண்மை கண்டு கை விடுவாயாயின், கொடியவனாகிய என்னைப் பார்த்துத் திருத் தொண்டர்களாகிய நன்மக்கள் எள்ளி நகையாடுவார்கள்; ஆதலால், எந்தையே, என்னைக் கைவிடாது அருள் புரிக; இது முக்காலும் உன் மேல் ஆணை, எ. று.
துளவம் திருமாலுக்கு அடையாள மாலை யாதலால், அவனைத் “தண்டுளவன்” என்று சிறப்பிக்கின்றார். துளவம், துளசி யெனவும் துழாய் எனவும் வழங்கும். தணிகையில் திருமால் வழிபட்டதைத் தணிகைப் புராணம் கூறுகிறது. நற்பண்பு சிறிது மில்லாதவனாயினும் முன்பே தமது மனம் முருகப் பெருமான்பால் ஈடுபட்டு அன்பு செய்து ஒழுகிற் றென்றும், முருகன் திருவருளாலன்றி அவ்வியல்பு தோன்றுதற் கேதுவில்லையாதல் பற்றியும், “பண்டு மனதுவந்து பாவியேன் தனை ஆண்டாய்” எனவும், தம்பால் உள்ள நலமின்மைகளை இப்போது உணர்ந்துரைப்பது தோன்றிக், “குணம் சிறிதுமில்லாப் பாவியேன்” எனவும் உரைக்கின்றார். குணம் எனப் பொதுப்படக் கூறலின், “நற்குணம்” எனக் கொண்டாம். குணமின்மையும் பாவம் உடைமையும் கண்டும் தன்னை அன்பாற் பரவுமாறு செய்தமையை வியந்து “பரிவால் மனது உவந்து ஆண்டாய்” என்கின்றார். திருமணக் காலத்தில் பெண் கொள்வோர் கோடற்கு முன்பு குலமும் குணமும் பேசுவது உலகியல் மரபு. “குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார், பணங்கொள் அரவகலல்குல் பைந்தொடியை மணம் நேர்ந்தார்” (நாவுக். 24) எனச் சேக்கிழார் உரைப்பது காண்க. இதனால் ஒரு பெண்ணை மணந்து கொண்ட பின்பு குலமும் குணமும் பேசுவதாகாதென்பது பெறப்படுதலால் “கொண்டு குலம் பேசுதல் போல்” என மொழிகின்றார். பேசுதற் காகாதது பேசப் படுமாயின் குற்ற முண்மை தெளியக் காட்டுதலால், “எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன்” என்றும், தம்பாற் காணப்பட்ட குற்றம் கொடுமைப் பண்பும் செயலுமாம் என்றற்குக் “கொடியனேன்” என்றும் கூறுகிறார். கொடுமை-வளைவு; நேர்மை யில்லாமை. இந்நிலையில் என்னை நின்னால் ஆட்கொள்ளப்பட்ட அன்புடைத் தொண்டர்கள் காண்பராயின், என்னை இகழ்ந்து ஒதுக்குவர் என்பார், “கண்டு திருத்தொண்டர் நகை செய்வார் எந்தாய்” எனவும், என்னைக் கைவிடாதே என்று முக்காலும் உன்னுடைய ஆணையாக உரைக்கின்றேன் என்றற்குக் “கைவிடேல் முக்காலும் உன் ஆணை காண்” எனவும் இயம்புகின்றார். “சத்தியம் சத்தியம் முக்காலும் சத்தியம்” என்னும் வழக்குப் பற்றி “உன்னாணை முக்காலும்” என உரைக்கப்படுகிறது.
இதனால் முன்பே அருள் புரிந்து ஆண்டு கொண்ட நீ பின்பு எனது குற்றம் கண்டு கைவிடல் ஆகாதென வற்புறுத்தியவாறாம். (2)
|