1040. வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
நானும் அங்கதை நயப்பது நன்றோ
தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
இயம்பினேன் பழி இல்லைஎன் மீதே.
உரை: மனமே, வஞ்சனை பொருந்திய இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தொழிந்தேன்; நீயே இது தரும் நலங்களை அள்ளிக்கொண்டு வாழ்ந்திருப்பாயாக; கிடைப்பது நஞ்சமாயினும் நீ பயன் நோக்காது உண்ணும் இயல்புடையை; அவ்விடத்து அந் நஞ்சினை நானும் விரும்புவது நன்றாகாது; எளியேனை யருளுக என்று சொல்லிக்கொண்டு சார்பவருக்கு அருள்வழங்கும் பெருமானாகிய தியாகேசன் வீற்றிருக்கின்ற ஒற்றியூர்க் கோயிற்கு, இன்று காலம் தாழ்த்தாமல் நான் செல்கின்றேன்; இதனை உனக்கும் சொல்லிவிட்டேன், இனி என்மேற் பழிக்கு இடமில்லை. எ.று.
நிலைத்த சுகம்போலத் தோன்றி நிலையின்றித் துன்பம் பயத்தலின் உலக வாழ்க்கையை “வஞ்ச வாழ்க்கை” என்றும், உண்மையுணர்வால் அவ்வாழ்விற் பற்று ஒழிந்ததென்றற்கு “விடுத்தனன்” என்றும்,
உலகிற்கு முதற் காரணமாகிய மாயையிலிருந்தே படைக்கப்பட்ட தாகலின், மனம் உலகவாழ்க்கையிற் பற்றுவிடாமை தோன்ற, “நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே” என்றும் இசைக்கின்றார். மிகுதியாக எடுத்துக் கொண்டனுபவித்தல், வாரிக்கொள்ளுதல், உலக வழக்கு. உயிரை யுண்ணும் நஞ்சமாயினும் அதன் பசுமையும் தன்மையும் கண்டு உண்டு வருந்தும் என்றற்கு, “நஞ்சமாயினும் உண்குவை நீதான்” எனவும், நான் என்பது உயிரறிவின் மேற்றாதலின், அகமும் புறமும் கண்டுகொள்ளலும் தள்ளலுமாகிய தகுதிநோக்கிச் செய்வன தவிர்வன மேற்கொள்வது அறிவாதலின், “நானு மங்கதை நயப்பது நன்றோ” எனவும் இயம்புகின்றார். தஞ்சம், எளிமைப் பொருட்டு. எளியனாகிய எனக்கு நீ யல்லது பற்றுக்கோடில்லை யென்று சார்வது தஞ்சமென்றடைதல்; அத்தகையோர்க்கு வேண்டுவ அருளுதல் உடையோர் கடனாதலின், சிவனை “தஞ்சமென்றவர்க் கருள் தரும் பெருமான்” என்று புகழ்ந்துரைக்கின்றார். எஞ்சுதல் - காலம் தாழ்த்தல். காலம் தாழ்த்தபோது குணநிலை மாறிக் கெடுமாதலால், “எஞ்சலின்றி யான் செல்கின்றேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், உலக வாழ்விற் பற்றின்றித் தியாகப் பெருமான்பாற் பற்று மிக்குற்றுக் காலம் தாழாது திருவொற்றியூர்க் கேகும் திறம் கூறியவாறு. (4)
|