1041.

     உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
          உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
     வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
          வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
     தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
          சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
     எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
          இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

உரை:

     உள்ளது உள்ளவாறு ஓதினும், மனமே நீ அதனை ஓர்கின்றாயில்லை; உப்பில்லதாயினும் கிடைத்ததேயென விரும்பியுண்பாரைப்போலப் பயனில்லாத வாழ்வில் பெறலாகும் சுவையிலா நுகர்ச்சியை விரும்பிப் பெரிதும் உண்கின்றாய்; அதனால் உன்னை வெறுப்பது வீணாகும். குளிர்ச்சி பொருந்திய சடையையுடைய பெருமானாகிய சிவபெருமான் கோயில்கொண்டிருக்கும் திருவொற்றியூர் என்னும் தலத்துக்கு இப்போதே எனது தாழ்மை நீங்குதல் வேண்டிச் செல்கின்றேன்; உனக்கும் தெரிவித்து விட்டேன்; இனி என்மீது பழியில்லையாம், எ.று.

     உள்ளதன் தன்மை யுண்மை, திரிபுணர்ச்சியிலே கிடந்து பயின்றதென்றற்கு மனத்தை, “உண்மை யோதினும் ஓர்ந்திலை மனனே” என உரைக்கின்றார். உப்பிலாப் பண்டத்தை “உப்பிலி” என்கின்றார். ‘உப்பிலாப் பண்டம் குப்பையிலே’ என்றபடி, உப்பிலா வுணவை ஒருவரும் உண்ண விரும்பார்; அதனை யுண்பார் உளராயின் அவரைப் பிறர்காணின் இகழ்வர். இகழப்படும் வாழ்க்கை வெண்மை வாழ்க்கையாகும். உண்மையாக அன்பு அறிவு நாணம் முதலியன இலனாய், அவற்றையுடையான் போல நடிப்பவன் வாழ்க்கை வெண்மை வாழ்வு; அவன் அறிவு வெள்ளறிவு எனப்படும். அவ்வாழ்விற் பெறப்படும் மான மற்றநுகர்ச்சியை மிக விரும்பியேற்பது கண்டு “வெண்மை வாழ்க்கை யின்நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய்” என்றும், அதனால் மனத்தின் பால் வெறுப்புண்டாவது பற்றி, “உனை வெறுப்பதில் என்னே” என்றும் இயம்புகின்றார். வெறுப்பவுண்டலை ‘வெளுக்கின்றான்’ என்பது உலக வழக்கு, மிக வுண்டு திரிபவரை “வெளுத்து வாங்குகிறார்” என்பது போல, கங்கையாறு தங்குதலால் குளிர்ந்திருக்கும் சிவன் சடையைத் “தண்மை மேவிய சடை” என்று சொல்லுகின்றார். உலகியல் நுகர்ச்சியில் எளியராய் இருக்கும் தன்மை ஈண்டு “எண்மை” எனப்படுகிறது.

     இதனால், மானமற்ற வெண்மை வாழ்வைக் கைவிட்டு அதனால் உளதாகும் எண்மை நீங்கச் சிவன் கோயிற்குச் சென்று வழிபடுக என்பதாம்.

     (5)