1042. நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
நன்று நின்செயல் நின்றிடு மனனே
ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: மனமே, நெடிது பரந்துலவும் கண் முதலிய ஐம்பொறி காட்டும் நெறியிலேயே சென்று உலக வாழ்க்கையில் கலந்து நினைப்பு மறப்புக்களால் இயங்கும் மாயை மயக்கில் கிடந்து, நுகர்ச்சி வேண்டியுழைக்கின்றாய்; நின்னுடைய செயல் நன்று காண்; அதன்கண்ணே நின்றொழிக. அம்பலத்தே ஆடுகின்ற கூத்தனாகிய எங்கள் சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவொற்றியூர்த் திருக்கோயிற்கு இப்பொழுது மாயைத் தொடக்கு நீங்குதற் பொருட்டு யான் செல்கின்றேன்; உனக்கும் சொன்னேன், இனி என்மீது பழியில்லை. எ.று.
அணிமையும் சேய்மையுமாகிய இடங்களிலுள்ள உலகியற் பொருள்களைக் கண்டு கொணர்ந்து மனத்துக்கு நல்குதலின், பொறிகளை “நீடும் ஐம்பொறி” என்றும், பொறி வழி யோடிப் பெறுவன பெற்று நுகர்வது உலக நெறியாதலால், “ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி” என்றும் கூறுகின்றார். பொறி வழியில் தனித்துச் செல்வோர் மனம், உலக மக்களோடு கூடிய வழி உணர்வும் செய்கையும் மாறி இயங்குவது உலக நெறி; உலக நெறியில் கூடுகின்ற மனத்துக்கு அறிவும் செயலும் விரிந்து இரவு பகல்களால் மறப்புக்கும் நினைப்புக்கும் உள்ளாகி மயங்கலும் தெளிதலும் பெறுதலை விதந்து, “நினைப்பொடு மறப்பும் நாடும் மாயையில் கிடந்து” என்றும், இவ்வாற்றால் உடலும் உள்ளமும் உணர்வும் நிகழும் வாழ்க்கையோடு நாளை வாழ்க்கைக்கு வேண்டும் பொருளுறு போகமே நினைந்து செயல்படுவதுபற்றி, “கிடந்து உழைக்கின்றாய்” என்றும் இசைக்கின்றார். மனம் உடலொடு கூடிச் செய்யும் உழைப்பால் உயிர்க்கு வாழ்க்கை யுருவாகி உறுதிப்பேற்றுக் கேதுவாதலின், “நன்று நின் செயல்” என்று வற்புறுத்துகின்றார். வாழ்தல் வேண்டுமாகலின், “நின்றிடு மனனே” எனல் வேண்டிற்று. ஆட்டமே அம்பலக் கூத்தன் வடிவமாதலின் “ஆடும் அம்பலக்கூத்தன்” என மொழிகின்றார். உலகியல் வாழ்வில் ஈடுபட்டாலன்றி மலமாயைகள் நீங்கற்கு வாய்ப்பின்மையின், அக் குறிப்பு விளங்கவே, “ஈடு நீங்கிடச் செல்கின்றேன்” என்று கூறுகின்றார்.
இதனால், பொறி வாழ்வும் சமுதாய வாழ்வும் கலந்த உலகியல் வாழ்வில் கிடத்தல் நன்றாயினும், அதன் ஈடு நீங்கத் திருக்கோயிற்குச் செல்கின்றேன் என்பதாம். (6)
|