1043. கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
மாறு மாயையால் மயங்கிய மனனே
வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: கணமெனக் கூறும் குறுகிய காலத்தில் எண்ணப்படுகின்ற நினைவுகள் கோடி கோடியாய்ப் பெருகித் தொடக்கத்திற் கொண்ட நினைப்பை மறந்து மாற்றிவிடும்; மாயை செய்யும் மயக்கத்தோடு கலந்து தடுமாறு மனமே, என்னொடு வருக; இல்லையாயின் இவ்வளவோடு நின்றிடுக; கங்கையாறு தங்கிய சடையையுடைய எம்பெருமானாகிய சிவன் வீற்றிருக்கின்ற திருவொற்றியூர்க்கண் அந்தமில் இன்பம் பெறுதற்குச் செல்லுகின்றேன்; உனக்கும் சொல்லிவிட்டேன்; இனி என்மேற் பழியில்லை. எ.று.
நாழிகை வினாடியென அளந்து கூறிட்டுக் காட்டாமல் குறுகிய ஒரு கால அளவாகக் கூறப்படுவதால் “கூறுமோர் கணம்” எனக் குறிக்கின்றார். ஒரு கணத்தில் தோன்றிய நினைவு முடிவுறுவதற்குள் பல கோடி யெண்ணங்கள் ஒன்றை யொன்று தொடர்ந்து தோன்றி முன்னையவற்றை மறப்பித்து மாற்றி விடுவதை விளக்குவதற்கே, “கூறுமோர்கணத்தே எண்ணுறும் நினைவு கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து மாறும்” என்றும், காலமும் நியதியும் மாயா காரியம்; அக்காலக் கூறுபாட்டில் எண்ணிறந்த நினைவுகளை எழுப்பி வாழ்க்கையோடு ஒட்டியும் ஒட்டாமலும் இயங்குவிக்கும் மனமும் மாயாகாரியமாதலின், “மாயா காரியக் கூறுகள் பல கலந்து நின்று கறங்குபோற் சுழன்றோடும் நிலையை “மாயையால் மயங்கிய மனனே” என்றும் உரைக்கின்றார். வாழ்க்கைக்குத் துணையாகு மெண்ணங்களை எண்ணி நல்கும் மனம், மாறாயவற்றையும் எண்ணுவதால், தெளிவும் மயக்கும் மாறி மாறி எய்து மியல்பினதென்பது தெளிவாம். வருதற்கு இசைதலும் மறுத்தலும் ஒப்ப நிகழ்த்துவதுபற்றி, “வருதியன்றெனில் நிற்றி இவ்வளவில்” என இயம்புகின்றார். கங்கையாறு தங்கிய சடையுடையனாதலின் “ஆறு மேவிய வேணியெம் பெருமான்” என்றும், அங்குள்ள புறமதில்களோடு கூடிய திருக்கோயிலை “ஆலய” மென்றும் சிவ வழிபாட்டால் “அந்தமில் இன்பத் தழிவில்வீடு” எய்துமென அறிவு நூல்கள் உரைத்தலின், “ஈறில் இன்புறச் செல்கின்றேன்” என்று சொல்லி, என் கருத்தை யுனக்குச் சொல்லியழைக்கின்றேன்; சொல்லவில்லை என்ற பழிச்சொல் கூடாது என்று அறிவுறுத்துகின்றார்.
இதனால், மாயை மயக்கத்தால் பல கோடி எண்ணங்களை எழுப்பியும் மறப்பித்தும் இயக்கும் மனத்தின் இயல்புகூறிச் சிவ வழிபாட்டால் ஈறில் இன்புறலாம் என அறிவுறுத்தவாறாம். (7)
|