1044. யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
போது போக்கினை யேஇனி மனனே
போதி போதிநீ போம்வழி எல்லாம்
கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: மனமே, நீ கண்டது அனைத்தையும் சேரக்கண்டு கொள்கின்றாய்; உனக்கென வரையறுத் தளிக்கப்பட்ட காலப் போதினை அவமாகவே போக்கி விட்டாய்; நீ போம்வழி அனைத்திலும் இனிப்போய் வருக; நம் செயலிடைத் தோன்றும் குற்றத்தை நீக்கி நல்லருளை வழங்கும் பெருமானாகிய சிவன் உறையும் திருவொற்றியூர்க் கோயிலுக்கு இன்று என்பாலுள்ள தீதெல்லாம் நீங்க வேண்டிச் செல்கின்றேன்; உனக்கும் தெரிவிக்கின்றேன்; சொல்லவில்லை என்ற பழி வேண்டா. எ.று.
பொறி வாயிலாகக் கண்ட காட்சி யாதாயினும் அதுவதுவாய் இயைந்து ஒன்றி யனுபவிப்பது மனத்தின் செயலாதலால், “யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய்” எனவும், அப்பொருளின்நிலையாமையும் புன்மையும் கண்டறிதலில் வாழ்வில் நெடிது காலம் வீணிற் கழிந்தொழிவது பற்றி,. “அவமாக நிற்கீந்த போது போக்கினை” எனவும் இயம்புகின்றார். மனத்தை மடக்கி நெறிப்பட நிறுத்திய வழி நில்லாது ஓடுதல் கண்டு, “இனி மனனே நீ போம் வழியெல்லாம் போதி போதி” என்று புகல்கின்றார். தனக்குள் தனித்திருந்து ஆழ நோக்குதலும், கண் முதலிய பொறிவழிச் சென்று புறம் புறம் திரிந்து காண்டலும் மனத்துக் கியல்பாதலின், “போம் வழி யெல்லாம்” என்று விதந்து விளம்புகின்றார். நினைவு சொற் செயல்கள் நிகழும்போது அறிவறியாமல் வந்து படியும் குற்றம் ‘கோது’ என்னும், பிறர்பாற் காணப்படும் கோதுகளை நீக்கிக் குணமே கொண்டு அருள்செய்வது இறையியல் யென்றும் உணர்த்தற்குக் “கோது நீக்கி நல்லருள் தரும் பெருமான்” என்றும், கோயில் வழிபாட்டால் பாவ நீக்கமும் பரகதி பெறும் பரிசும் கிடைக்குமென உயர்ந்தோர் கூறுதலின், “கோயிலுக் கின்றே ஏதம் ஓட நான் செல்கின்றேன்” என்றும், பயன் தெரிந்த வழி நீயும் போதுவாய் என்று கருதி “உனக்கும் இயம்பினேன்” என்றும், நீ வாராவிடில் எனக்குப் பழியில்லை என்பது புலப்படப் “பழியில்லை யென்மீதே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், மனத்தின் இயக்கம் பயனில் உழப்பாதலின், ஏதம் நீங்கிட வேண்டி ஒற்றியூர்ப் பெருமான் கோயிற்கு அவனை வழிபடச் செல்கின்றேன் என அறிவுறுத்தவாறாம். (8)
|